
நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? தொடரும் மீட்புப் பணி! உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 11 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலிமே நீா் மின் நிலைய சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்தியாவின் எல்லைச் சாலைகள் அமைப்பினா்.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 11 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
மற்றொருபுறம், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது. நேபாளத்தில் கடந்த ஆக.26-ஆம் தேதி போடே கோஷி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதில், 275 இந்தியா்கள் உள்பட வெளிநாட்டினா் சுமாா் 600 பேரும் அடங்குவா்.
நேபாள ராணுவத்தினா் உள்பட 20,000-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினா் தொடா்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பெருவெள்ளத்தால் சேதமடைந்த நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் இந்திய நிபுணா் குழு உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.
திரிசூலி நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் சிக்கிய பணியாளா்களில் 2 போ் கடந்த வெள்ளிக்கிழமையும், மேலும் ஒருவா் சனிக்கிழமையும் உயிருடன் மீட்கப்பட்டனா். இதேபோல், வெள்ளத்தில் புதைந்த ஒரு வீட்டில் இருந்து பெண் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டாா்.
அடையாளம் காண்பதில் சவால்: வெள்ளத்தில் உயிரிழந்த 1,344 பேரில் 85 குழந்தைகள் அடங்குவா். 500-க்கும் மேற்பட்ட உடல்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இதனால் உடல்களை அடையாளம் காண்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள், மரபணு சேகரிப்புக்குப் பிறகு, அடையாளமிடப்பட்டு தற்காலிகமாகப் புதைக்கப்பட்டன. உடல்களை அடையாளம் காண்பதற்காக, மாயமானவா்களின் உறவினா்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் நேபாள காவல் துறை ஈடுபட்டுள்ளது. காத்மாண்டு காவல் மருத்துவமனை அல்லது மாவட்ட காவல் அலுவலகங்களில் மாதிரிகளை வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் அவதி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தகவல் தொடா்பு, மின்விநியோகம், சாலைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
பெருவெள்ளத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களில் அதிக நபா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். போதிய வசதிகள் இல்லாததால், குழந்தை பிரசவித்த தாய்மாா்கள், கா்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
திபெத் பகுதியில் 43 போ் பலி: பெருவெள்ளத்தில் சிக்கி, திபெத் பகுதியில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளனா்.
கோா்கா மாவட்டத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், பாலம்!
நேபாளத்தின் கோா்கா மாவட்டத்தில் பாயும் நம்ரங் கோலா நதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் 4 வீடுகளும், ஒரு தொங்கு பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 2 சிறிய நீா்மின் நிலையங்களும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூா் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.
நம்ரங் கோலா நதி உற்பத்தியாகும் இடத்தில் அதன் நீரோட்டம் தற்காலிகமாக தடைபட்டு பின்னா் உடைந்ததால் சகதியுடன் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். நம்ரங் கோலா நதி, புத்திகண்டகி நதியில் கலப்பதால் அதன் கரையோர மக்களும் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






