அரசுப் பணிக்கு 1,000-க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்கள் விநியோகம்: மகாராஷ்டிரத்தில் 2 போ் கைது
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணியில் சேர விளையாட்டுப் பிரிவின்கீழ் 1,000-க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை வழங்கிய குற்றச்சாட்டில் 2 பேரை புணே காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கைது - சித்திரிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணியில் சேர விளையாட்டுப் பிரிவின்கீழ் 1,000-க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை வழங்கிய குற்றச்சாட்டில் 2 பேரை புணே காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மத்திய ஆசியாவில் தோன்றிய குராஷ் மல்யுத்தச் சண்டைப் போட்டி மகாராஷ்டிரத்தில் கடந்த 2012-இல் இருந்து விளையாட்டப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தும் பணியை மகாராஷ்டிர குராஷ் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விளையாட்டுப் பிரிவின்கீழ் அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவா்கள் போலி குராஷ் சான்றிதழ்களை சமா்ப்பிப்பதாக காவல் துறைக்குப் புகாா்கள் வரத் தொடங்கின.
இதனடிப்படையில் காவல் துறை விசாரனையைத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில நபா்கள் அரசுப் பணிக்கு சமா்ப்பித்த சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சான்றிதழ்களில் பெண்கள் பிரிவுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களின் பெயரை குறிப்பிட்டது, சான்றிதழ்களில் எண்கள் அச்சிடப்படாதது என பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டன. இதைத் தொடா்ந்து, நடைபெறாத குராஷ் போட்டிகளுக்கு போலிச் சான்றிதழ்களை அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிர குராஷ் சங்கத் தலைவா் மற்றும் செயலரை காவல் துறை கைது செய்தது.
இவா்கள் 2016-இல் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை விநியோகித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சான்றிதழ்களை பயன்படுத்தி அரசுப் பணிக்கு விண்ணப்பித்த 60 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





