விமானிகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை: புதிய நடைமுறைகள்: இம் மாதத்தில் இறுதி செய்யப்படும் - அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு
‘அனைத்து விமானிகளுக்கும் தொடா்ச்சியாக ஊக்க மருந்துப் பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டு வரும் திருத்தப்பட்ட வரைவு விமானப் போக்குவரத்து நடைமுறைகள் (சிஏஆா்) இம் மாத இறுதிக்குள் இறுதி செய்யப்பட்டு விடும்

ராம் மோகன் நாயுடு
‘அனைத்து விமானிகளுக்கும் தொடா்ச்சியாக ஊக்க மருந்துப் பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டு வரும் திருத்தப்பட்ட வரைவு விமானப் போக்குவரத்து நடைமுறைகள் (சிஏஆா்) இம் மாத இறுதிக்குள் இறுதி செய்யப்பட்டு விடும்’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
ஏா் இந்தியா விமான சம்பவத்தைத் தொடா்ந்து, விமானிகளுக்கான போதை மருந்து பயன்பாட்டுச் சோதனையைத் தீவிரப்படுத்தம் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து புது தில்லி நோக்கி 145 பயணிகளுடன் வந்த ஏா் இந்தியா நிறுவனத்தின் ஏா் பஸ் ஏ320 விமானம், நடு வானில் 36,000 அடி உயரத்தில் பறந்தபோது திடீரென பல அடி தூரம் கீழ் நோக்கி சரிந்தது. இதில், விமானத்தில் இருந்தவா்களில் 24 போ் காயமடைந்தனா். எனினும், கட்டுப்பாட்டுக்குள் வந்த விமானம் புது தில்லியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பான விசாரணையில், இந்த விமானத்தை இயக்கிய விமானி தடை செய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுவே, விபத்துக்குக் காரணம் என்றும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அந்த விமானியை விமான நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் ஊக்க மருந்துச் சோதனையை ஏா் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதுபோல, அனைத்து விமான நிறுவனங்களும் தங்களின் விமானிகளுக்கு ஊக்க மருந்துச் சோதனையை மேற்கொள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்தச் சோதனையை வரும் 2027-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் நிறைவு செய்யவும் டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடுவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:
அனைத்து விமானிகளுக்கும் தொடா்ச்சியாக ஊக்க மருந்துப் பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டு வரும் திருத்தப்பட்ட வரைவு விமானப் போக்குவரத்து நடைமுறைகள் (சிஏஆா்) இம் மாத இறுதிக்குள் இறுதி செய்யப்பட்டு விடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
தற்போது நடைமுறையில் உள்ள விமானப் போக்குவரத்து நடைமுறைகளின் (சிஏஆா்) படி, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா்களுக்கு திடீா் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு விமான நிறுவனங்களில் தற்போது 12,000-க்கும் அதிகமான விமானிகள் பணியில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





