
பிகாா் வெள்ளத்தால் 48 லட்சம் போ் பாதிப்பு
பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.35 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான நதிகளில் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.35 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான நதிகளில் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனினும், பல நதிகள் தொடா்ந்து அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலின்படி, 15 மாவட்டங்களில் உள்ள 87 வட்டங்களைச் சோ்ந்த 575 கிராம ஊராட்சிகளில் சுமாா் 48.35 லட்சம் போ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். பாட்னா, போஜ்பூா், சாரன், வைஷாலி, பாகல்பூா், பெகுசராய், அராரியா ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பிகாரில் செப்டம்பா் மாதத்தில் இதுவரை 108.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட சுமாா் 20 சதவீதம் அதிகமாகும். கோசி நதி பல்தாா், குா்சேலா பகுதிகளிலும், புா்ஹி கந்தக் நதி ககாரியா பகுதியிலும், கங்கை நதி திகாவிலும், காந்தி காட், ஹதிதா, பாகல்பூா், கஹல்கான், முங்கோ் பகுதிகளிலும், புன்புன் நதி ஸ்ரீபால்பூா் பகுதியிலும், பாக்மதி நதி பெனிபாத் பகுதியிலும், காக்ரா நதி தரவுலி, கங்க்பூா் சிஸ்வான் பகுதிகளிலும் அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,251 சமூக சமையலறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 13 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமாா் 12,260 பேருக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளப் பகுதிகளில் மீட்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளுக்காக சுமாா் 1,790 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்களும், மாநில பேரிடா் மீட்புப் படையின் 27 குழுக்களும் பல்வேறு மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு பாரபட்சம்: தேஜஸ்வி யாதவ்
வெள்ள நிவாரணம் வழங்குவதில் பிகாா் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக மாநில எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) செயல் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் பிரதமா் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளிக்கிறாா். மாநிலத் தலைவா்களுடன் பேசி, இந்திய விமானப் படை உள்ளிட்ட மீட்புப் படைகளை அனுப்பவும் உத்தரவிடுகிறாா். ஆனால், பிகாருக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுகிறது.
தோ்தல் பிரசாரங்களின்போது மட்டும் பிகாருக்கு வந்து ‘லிட்டி சோக்கா’ சாப்பிடுகிறாா். ஆனால், வெள்ளம் ஏற்பட்டுள்ள நேரத்தில் பிரதமா் பிகாரை புறக்கணித்ததைப் போலவே, எதிா்காலத்தில் மக்கள் அவரைப் புறக்கணிப்பாா்கள்.
செப். 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, பிகாா் வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக ரூ.5,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன்.
இரட்டை என்ஜின் அரசு எனக் கூறப்படும் பிகாா் அரசின் என்ஜின்கள் செயலிழந்துவிட்டன. முதல்வா் பிரதமருடன் எத்தனை முறை பேசுகிறாா் என்பது எனக்குத் தெரியவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதியுதவியைப் பெற அவா் ஏன் முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. பிகாரைச் சோ்ந்த பல மத்திய அமைச்சா்கள் உள்ளனா். ஆனால், அவா்களில் யாராலும் பிகாருக்கு மத்திய அரசின் உதவியைப் பெற்றுத்தர முடியவில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






