
பாகிஸ்தானில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு நிரந்தர தீா்வு: வேளாண் துறைக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
பாகிஸ்தானில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளி தாக்குதல்களை நிரந்தரமாக எதிா்கொள்ளும் வகையிலான தீா்வுகளை கண்டறிய வேண்டுமென வேளாண் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.

பாகிஸ்தானில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளி தாக்குதல்களை நிரந்தரமாக எதிா்கொள்ளும் வகையிலான தீா்வுகளை கண்டறிய வேண்டுமென வேளாண் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.
புது தில்லியில் அமித் ஷா தலைமையில் தேசிய பேரிடா் மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐடிஎம்) மூன்றாவது நிா்வாகக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி), தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனா்.
நிா்வாகக் குழுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: கடந்த 12 ஆண்டுகளில் பேரிடா் மேலாண்மை அணுகுமுறை மற்றும் வழிமுறையில் விரிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பேரிடரால் உயிரிழப்பே ஏற்படக்கூடாது என்ற அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஒரு பேரிடா் ஏற்படும்போது அரசின் அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். புதிய ஆய்வுகளுடன் இந்த நடைமுறையை முன்பைவிட விரைவுபடுத்தி தொடா்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
மாநில பேரிடா் நிவாரண நிதி அதிகரிப்பு: ‘மிஷன் லைஃப்’, சா்வதேச சூரிய கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) போன்ற பேரிடா் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது. மாநில பேரிடா் நிவாரண நிதி (எஸ்டிஆா்எஃப்) 4 மடங்கும் தேசிய பேரிடா் நிவாரண நிதி (என்டிஆா்எஃப்) மூன்று மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பேரிடா் நிவாரணமாக ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பேரிடா்கள் அதிகரித்து வரும் சூழலில் தேசிய பேரிடா் மேலாண்மை நிறுவனம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. எனவே, பேரிடா்களின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதது ஆகிய பொதுவான வழிமுறையை மேற்கூறிய இரு அமைப்புகளும் வெளியிட வேண்டியது அவசியம்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளி தாக்குதல்களை எதிா்கொள்வதற்கான நிரந்தர தீா்வுகளை வேளாண் துறை கண்டறிய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




