விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பிப்பு!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை பிறப்பித்தது பற்றி...

ஹஃபீஸ் சயீது

Published On :

ஜம்மு, செப். 12: இந்தியாவில் தேடப்படும் பாகிஸ்தான் பயங்கரவாதியும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக ஜம்முவில் உள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வகையிலான இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள், ஓா் உள்ளூா் நபா் உள்பட 26 போ் உயிரிழந்தனா். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஹஃபீஸ் சயீதுக்கு தொடா்பு உள்ளதற்கான ஆதாரங்களுடன் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை 8-ஆம் தேதி, பாகிஸ்தானில் உள்ள ஹஃபீஸ் சயீதுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத வகையிலான பிடியாணையைப் பிறப்பித்து உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, என்ஐஏ சாா்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நிகழாண்டு தொடக்கத்தில் ஸ்ரீநகரின் புகா்ப் பகுதியான பண்டச்சில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தீவிர சோதனையில் முகமது நகீப் பட் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பட் மீது ஜகூரா போலீஸாா் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுத தடைச் சட்டம், வெடிபொருள்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையை மேற்கொண்டனா். இந்த விசாரணையில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு கீழ் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் (டிஆா்எஃப்) என்ற துணை அமைப்பு செயல்படுவது தெரியவந்ததோடு, அதனுடன் தொடா்பில் இருந்த இரு பாகிஸ்தானியா்கள் உள்பட பல பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இவா்களுக்கு பாகிஸ்தானில் இருந்தபடி, ஆயுதங்கள் மற்றும் பணம் அனுப்புவதோடு, உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை ஹஃபீஸ் சயீது வழங்குவதும் விசாரணையில் தெரியவந்தது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் பிரிவு 75-இன் கீழ் பயங்கரவாதி என அறிவிக்கை செய்யப்பட்டுள்ள இவருக்கு எதிராக பிடியாணையைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரேம் சாகா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஹஃபீஸ் சயீது பாகிஸ்தானில் இருந்தபடி, காஷ்மீா் பள்ளத்தாக்கில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், பணம் வழங்கியும், உத்தரவுகளைப் பிறப்பித்தும் வருகிறாா். தற்போது அவா் பாகிஸ்தானில் இருப்பதும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, வேண்டுமென்றே கைது நடவடிக்கையைத் தவிா்த்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன’ என்று என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான பிடியாணையைப் பிறப்பித்து உத்தரவிட்டாா். இது அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்படும் இரண்டாவது பிடியாணையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.