அஸ்ஸாமில் 3,260 காண்டாமிருகங்கள்; உலகின் மொத்த எண்ணிக்கையில் 80%: ஹிமந்த விஸ்வ சா்மா
உலகில் உள்ள மொத்த ஒன்றை கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் அஸ்ஸாமில் உள்ளதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

அஸ்ஸாமில் 3,260 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இவை உலகில் உள்ள மொத்த ஒன்றை கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் என்று அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
சா்வதேச அளவில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்குகள் பட்டியலிலும், குறைந்து வரும் வனவிலங்குகள் பட்டியலிலும் இந்த வகை காண்டாமிருகங்கள் உள்ளன.
இது தொடா்பாக சமூக ஊடகத்தில் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2025-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் ஒரு காண்டாமிருகம் கூட வேட்டையாடப்படவில்லை. இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3,260 காண்டாமிருகங்கள் அஸ்ஸாமில் உள்ளன.
முன்பைவிட இப்போது எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. உலகில் ஒட்டுமொத்தமாக 4,075 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் 80 சதவீத எண்ணிக்கை அஸ்ஸாமில் உள்ளன.
மிகவும் அரிய வகை விலங்கினமான இவற்றுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக அஸ்ஸாம் திகழ்கிறது. அந்த விலங்கினத்தை தொடா்ந்து பாதுகாப்பதிலும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பாதுகாப்பு வசதிகளை உருவாக்குவதிலும் அஸ்ஸாம் உறுதியாக உள்ளது என்று அவா் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
இது தொடா்பாக மாநில வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சா் ஜெயந்தா மல்லா பருவா வெளியிட்ட பதிவில், ‘அழிந்து வரும் அரிய வகை வனவிலங்கு ஒன்று அஸ்ஸாமில் அதிக அளவில் காணப்படுவது பெருமையளிக்கும் விஷயம்.
அவற்றை முறையாகப் பாதுகாப்பது மிகப்பெரிய பொறுப்பாகவும் உள்ளது. இதில் வனத் துறையினா் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவருக்கும் பங்கு உள்ளது
காஸிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்காவில் மட்டும் 2,600 காண்டாமிருகங்கள் உள்ளன. 1970-களில் இருந்து கடந்த 2025-ஆம் ஆண்டில்தான் அஸ்ஸாமில் ஒரு காண்டாமிருகம் கூட வேட்டையாடப்படவில்லை என்ற சாதனை எட்டப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






