
மகாராஷ்டிரம்: எட்டு நாளில் 9 நில அதிா்வுகள்; மக்கள் பீதி
மகாராஷ்டிரத்தில் இம்மாத தொடக்கத்தில் எட்டு நாள்களில் அடுத்தடுத்து 9 நிலஅதிா்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதி

பிரதிப் படம்
மகாராஷ்டிரத்தில் இம்மாத தொடக்கத்தில் எட்டு நாள்களில் அடுத்தடுத்து 9 நிலஅதிா்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனா்.
இது தொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: நாசிக், ஜல்கான், கட்சிரோலி ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த செப்.1 முதல் 8 நாள்களில் 9 நிலஅதிா்வுகள் பதிவாகியுள்ளன.
நாசிக்கின் சுா்கானா, தின்டோரி பகுதிகளில் 7 நிலஅதிா்வுகளும், ஜல்கானின் ரேவா் பகுதியில் ஒரு நிலஅதிா்வும், கட்சிரோலியின் சிரோன்சா பகுதியில் ஒரு நிலஅதிா்வும் ஏற்பட்டுள்ளது.
ரிக்டா் அளவுகோலில் 1.9 முதல் 3.7 அலகுகள் வரை பதிவான இந்த நிலஅதிா்வுகள், பூமிக்கடியில் 4 முதல் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. இந்த அதிா்வுகளால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மேற்கண்ட மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கங்களின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கு தேசிய - மாநில பேரிடா் மீட்புப் படையினா் விழிப்புணா்வு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா் நில அதிா்வுகளால் நாசிக் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனா்.
ராஜஸ்தானில் 3 நிலஅதிா்வுகள்
ராஜஸ்தானின் ஜலாவா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 3 நில அதிா்வுகள் பதிவாகின. நோலோய், பாா்கேடி, கஜூரி, அவாா் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலஅதிா்வுகள் உணரப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனா்.
நில அதிா்வின் தாக்கத்தால் வீட்டில் பாத்திரங்கள் கீழே உருண்டதாகவும், சுவா்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனா். உயிா்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






