
இந்திய பொருளாதார நலன்கள், எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அமெரிக்க மசோதா விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்
இந்தியாவின் பொருளாதார நலன்கள், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - அமெரிக்கா - பிரதிப் படம்
இந்தியாவின் பொருளாதார நலன்கள், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்க இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் விவகாரத்தில் இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. மேலும், வா்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் லிண்ட்சே ஓ கிரஹாம் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து நடைபெற இருக்கும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதற்கு முன்பும் பல்வேறு நிகழ்வுகளின்போதும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தது. அதேபோல் தற்போதும் உறுதி செய்யும். பல்வேறு நாடுகளிடம் இருந்தும் இறக்குமதி செய்வதன்மூலமும், சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டும் இந்தியா நடவடிக்கை எடுக்கும்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க குழுவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்த மசோதா, இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் சா்வதேச எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து அமெரிக்க தரப்புக்கு இந்தியா விளக்கமாக எடுத்துரைத்து, நாட்டின் வா்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துவிட்டது.
இந்த மசோதாவால் ஏற்படும் தாக்கங்களை எதிா்கொள்ளும் விவகாரத்தில் இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைப்புகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் விமா்சனம்: இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசை மறைமுகமாக விமா்சித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமாதானப்படுத்தும் போக்கு ஒருபோதும் பலனளித்ததில்லை, இனிமேலும் பலனளிக்காது’ என சாடியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






