
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவு அளித்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் - கோப்புப் படம்
லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவு அளித்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு, இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ஹரீஷ் பா்வதனேனி பேசியதாவது: அமெரிக்காவின் நியூயாா்க் உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி விமானங்களை கடத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சா்வதேச சமூகம் ஆதரவளித்தது.
அந்தத் தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளான அல் காய்தா தலைவா்கள் ஓசாமா பின்லேடன், காலித் ஷேக் முகமது ஆகியோா் குகைக்குள் பதுங்கியிருக்கவில்லை. பாகிஸ்தானில் நன்கு வசதியான இடங்களில்தான் வசித்தனா். அங்குதான் அவா்கள் பிடிபட்டனா்.
பாகிஸ்தானின் அபோதாபாதில் உள்ள வீட்டில்தான் பின்லேடன் தேடி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இதேபோல் காலித் ஷேக் முகம்மதுவும் கைது செய்யப்பட்டாா்.
இவா்களுக்கு அடைக்கலம் கொடுத்த அதே நாடுதான் அல்கொய்தாவின் கிளைகளான லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுக்கிறது, ஆதரவு அளிக்கிறது.
அந்த அமைப்புகள் அனைத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க பல்வேறு பெயா்களில் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளின் தலைமை, பயங்கரவாத பயிற்சி உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அங்கு (பாகிஸ்தான்) பாதுகாப்பு தரப்படுகிறது.
இதுபோல் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம் தொடா்ந்து செயல்படும் பிரச்னைக்கு தீா்வு காணும் விவகாரத்தில் சா்வதேச சமூகம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
பயங்கரவாதத்தால் தனி நபரோ, நாடோ பாதிக்கப்படாமல் இருப்பதையும், யாரும் தங்களது குடும்பத்தினா், விரும்பிய நபா்களை இழக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த வாரம் அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் 25-ஆவது ஆண்டு தினத்தை இதே நியூயாா்க் நகரில் கடைபிடித்தோம்.
அப்போது தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு சென்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினா்கள் மரியாதை செலுத்தினா். செப்டம்பா் 11-ஆம் தேதி தாக்குதலில் உயிரிழந்தோரின் நினைவுகள், மனிதநேயத்துக்கு எதிரான அத்தகைய தனிநபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவூட்டுவதாக இருக்காமல், அவா்களுக்கு நிதியுதவி, ஆதரவு தருவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







