
பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு!
வேலை மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது பற்றி...

உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்
1988 ஆம் ஆண்டில் பெண் என்ற காரணத்தை காட்டி பணி மறுக்கப்பட்டவருக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா என்பவர், கடந்த 1988 ஆம் ஆண்டில், கர்னலில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையில் உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 49 பேரின் இறுதி செய்வதற்கு முந்தைய பட்டியலில் அவரும் இடம்பெற்றிருந்தார். கல்வித் தகுதி மற்றும் பிற அனைத்துத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்திருந்தபோதிலும், இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 பேரின் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. பெண் என்ற காரணத்தினாலேயே அவருக்கு வேலை மறுக்கப்பட்டதாகப் பின்னர் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் 1990-ல் சுமித்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தொழிலாளர் அல்லாத வேறொரு பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்ட நிலையில், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் சுமித்ரா மேல்முறையீடு செய்தார்.
இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சுமித்ரா மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்தியன் ஆயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிறுவனத்தின் பணித்தன்மை, பணிச்சூழல் மற்றும் ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அசாதாரணமான பணிநேரம் ஆகியவற்றின் காரணமாக, மனுதாரர் ஒரு பெண் என்ற அடிப்படையில் அப்பணிக்கு அவர் பொருத்தமானவராகக் கருதப்படவில்லை” என்று வாதத்தை முன்வைத்தார்.
அந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “வீடுகளில் ஆண்கள் இல்லாதபோது சிலிண்டரை பெண்கள்தான் மாற்றுகிறார்கள். அப்படியிருக்க, அவர் ஒரு பெண் என்பதாலேயே அவரது பணி நியமனத்தை நீங்கள் மறுத்துள்ளீர்கள். இது பெண்மைக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.
இந்தியாவில், பெண் ஒரு தெய்வம், அவரை மதிக்க வேண்டும்' என்று நாம் நாள்தோறும் கூறுகிறோம். இந்த சூழலில் மத்திய அரசின் ஒரு நிறுவனத்தால் பெண்ணுக்கு அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சமரச முயற்சியில் ஈடுபட இந்தியன் ஆயில் தரப்பு வழக்கறிஞர் முன்வந்தார். ஆனால், இந்த வழக்கு 30 ஆண்டுகள் காலதாமதமானதைக் கருத்தில் கொண்டு, சுமித்ரா தற்போது ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால், ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது 63 வயதாகும் சுமித்ரா, 30 ஆண்டுகளாகப் போராடி தனக்கான நீதியைப் பெற்றுள்ளார்.
Summary
Job denied because she is a woman! ₹12 lakh compensation for 63-year-old woman! Indian Oil ordered to pay!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






