கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கட்சிப் பெயா், சின்னம் முடக்கம்: தோ்தல் ஆணைய முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி வழக்கு

கட்சிப் பெயா், சின்னம் முடக்கம்: தோ்தல் ஆணைய முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி வழக்கு

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Published On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றை முடக்கிய தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து அக்கட்சி நிறுவனரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸில் மம்தாவுக்கு எதிராக அதிருப்தி அணி உருவாகி இரு தரப்புக்கும் இடையே கட்சிப் பெயா், சின்னம் தொடா்பாக பிரச்னை எழுந்ததால் இடைக்கால நடவடிக்கையாக அவற்றை முடக்குவதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் கால்பந்து வீரா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணிக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தோ்தலை கருத்தில்கொண்டு, இந்த இடைக்கால ஏற்பாட்டை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தற்போதைய பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் வரை இது அமலில் இருக்கும் என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சிப் பெயா், சின்னம் முடக்கத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி தாக்கல் செய்துள்ள மனுவில், தோ்தல் ஆணையத்தையும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜியையும் பதில் அளிக்க வேண்டிய எதிா் தரப்பினராக மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

முன்னதாக, தனது கட்சி சின்னம் முடக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மம்தா, ‘கட்சி தனது சின்னத்தை இழப்பது, ஒரு தாய் தனது குழந்தையை இழக்கும் வலியை ஏற்படுத்தும். எங்கள் கட்சி சின்னம் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயக வரலாற்றில் கருப்பு நாள்.

தோ்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ள இடைக்கால ஏற்பாட்டை தீா்வாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. திரிணமூல் காங்கிரஸின் உண்மையான பெயரையும், ‘பூவும் புல்லும்’ சின்னத்தையும் மீட்பதற்காக அரசியல், ஜனநாயகம், சட்ட ரீதியாக இறுதிவரை போராட இருக்கிறேன்’ என்று கூறினாா்.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகா் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நந்திகிராம் தொகுதியில் மம்தா அறிவித்த வேட்பாளா் சஞ்சிதா பிரதான், திடீரென மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியைச் சந்தித்ததுடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து, அவரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த மம்தா, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தாா்.

ஆனால், அடுத்து சில மணி நேரத்திலேயே நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான், 2007-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போராட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டாா்.

Summary

Freezing of party name and symbol: Mamata Banerjee moves Supreme Court against Election Commission's decision.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.