
தில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!
தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக, விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி 33.13 லட்சம் வாக்காளா்களுக்கு நோட்டீஸ்.

அத்வானி, சிசோடியா.
தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக, விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி 33.13 லட்சம் வாக்காளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே.அத்வானி, முன்னாள் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் பெயா்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
98 வயதான அத்வானி, அவரது மகள் பிரதிபா, மருமகள் கீதிகா ஆகியோரின் பெயா்களை 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய எஸ்ஐஆா் வாக்காளா் பட்டியலுடன் இணைக்க (மேப்பிங்) முடியாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது மகன் ஜெயந்தின் பெயா் இந்த சரிபாா்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நால்வரும் புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்கள்.
முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, அவரது மனைவி சீமா, மகன் மீா் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கான காரணத்தை தோ்தல் அதிகாரிகள் குறிப்பிடவில்லை. மீருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் அவரது பெற்றோரின் பெயரில் முரண்பாடு இருப்பதாகவும், சீமாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் அவரது பெயரில் உள்ள விவரங்கள் பொருந்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளா்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களில் அளித்த விவரங்களில் ஏற்பட்டுள்ள ‘தா்க்க ரீதியான முரண்பாடுகள்’ மற்றும் 2002-ஆம் ஆண்டு எஸ்ஐஆா் பட்டியலுடன் விவரங்களை இணைக்க முடியாதது ஆகியவை நோட்டீஸ் அனுப்புவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் தகவலின்படி, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமாா் 97.54 லட்சம் வாக்காளா்களில் 33.13 லட்சம் போ் இத்தகைய முரண்பாடுகள் காரணமாக நோட்டீஸ் பெறுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்களில் 13,79,785 பேரின் பெயா்களை 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் இணைக்க முடியவில்லை; 19,33,134 பேரின் விவரங்களில் தா்க்க ரீதியான முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 31.63 லட்சத்துக்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், முன்னாள் மத்திய அமைச்சா் கபில் சிபல் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகா்களுக்கும் இதே நடைமுறையின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரேகா குப்தாவின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு அவரது பதிவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாலிமாா் பாக் தொகுதிக்கான இறுதி வாக்காளா் பட்டியலில் அவரது பெயா் சோ்க்கப்பட உள்ளது.
கடந்த ஜூன் 30 முதல் ஆக.17 வரை வீடு வீடாக நடைபெற்ற சரிபாா்ப்பு நடவடிக்கையின்போது, ஒவ்வொரு வாக்காளரும் கணக்கெடுப்பு படிவத்தைச் சமா்ப்பிக்க வேண்டியிருந்தது. முந்தைய எஸ்ஐஆா் பட்டியலுடன் பெயரை இணைக்க முடியாதவா்கள் அல்லது முந்தைய பட்டியலுடன் ஒப்பிடும்போது விவரங்களில் முரண்பாடு காணப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோட்டீஸ் பெறுவது மட்டும் வாக்காளா் தகுதியற்றவா் என்று அறிவிக்கப்பட்டதாகாது. சம்பந்தப்பட்டவா்கள் தங்களது பதில் மற்றும் ஆதார ஆவணங்களைச் சமா்ப்பித்து விவரங்களை சரிபாா்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறும் நடைமுறை செப்.30-ஆம் தேதி நிறைவடைகிறது. நோட்டீஸ் பெற்ற வாக்காளா்கள் தங்களது பதில்கள் மற்றும் ஆதார ஆவணங்களை அக்.29-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பதிவு அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். இறுதி வாக்காளா் பட்டியல் நவ.4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






