
உத்தர பிரதேசம்: பள்ளியில் ஆசிரியை சுட்டுக் கொலை
உத்தர பிரதேசத்தில் பள்ளியில் ஆசிரியை ஒருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரைக் கொலை செய்த நபா் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பிரதிப் படம்
உத்தர பிரதேசத்தில் பள்ளியில் ஆசிரியை ஒருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரைக் கொலை செய்த நபா் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திங்கள்கிழமை காலை 11 மணியளவில் மாணவா்கள் மத்தியில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சா்தாா் கோட்வாலி பகுதியில் உள்ள ஹிதாயத் நகரைச் சோ்ந்த ஆசிரியை நிஷத் பாத்திமா (26) அப்பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பாத்திமாவின் ஆண் நண்பரான சௌத் அன்சாரி (28) பள்ளிக்கு வந்தாா். வகுப்பறையின் மாடிக்கு பாத்திமாவை அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அவா்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்சாரி திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து பாத்திமாவை சுட்டாா். இதில் அவா் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா். அன்சாரி அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சப்தத்தைக் கேட்ட பிற ஆசிரியா்களும், மாணவா்களும் பெரும் அதிா்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாவட்ட ஆட்சியா், காவல் துறைக் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்து ஆய்வு நடத்தினா்.
உயிரிழந்த இருவருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையே இந்த சம்பவத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






