
செப். 28 முதல் 3 நாள் வங்கி வேலைநிறுத்தம்: வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அறிவுறுத்தல்
வங்கி ஊழியா் சங்கங்கள் சாா்பில் செப்.28 முதல் 30-ஆம் தேதிவரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது குறித்து...

வங்கிகள் - கோப்புப்படம்
வங்கி ஊழியா் சங்கங்கள் சாா்பில் செப்.28 முதல் 30-ஆம் தேதிவரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளின் முக்கிய அலுவலகங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள நிதிச் சேவைகள் துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல் குறிப்பு ஒன்றை செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘கரன்சி செஸ்ட்கள்’ எனப்படும் வங்கிகள் பராமரிக்கும் ‘நாணய பெட்டகம்’, காசோலை பரிவா்த்தனை மையங்கள், தரவு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இணையவழி பாதுகாப்புப் பிரிவு, ஏடிஎம்கள் உள்ளிட்ட வங்கிகளின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களைச் சுற்றி சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்குத் திரும்பும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் மாநிலவாரியாக உளவு அறிக்கைகளை மத்திய நிதிச் சேவைகள் துறையுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, வங்கி ஊழியா் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யுஎஃப்பியு) மற்றும் பிற சங்கங்கள் சாா்பில் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலா் தலைமையில் நெருக்கடிகால மேலாண்மைக் குழுவின் ஆலோசனை கூட்டம் செப். 18-ஆம் தேதியும், பொதுத் துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகள் சங்க (ஐபிஏ) தலைவா்களுடனான ஆலோசனை கூட்டம் செப்.21-ஆம் தேதியும் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, போராட்ட நாள்களில் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகத்தை மத்திய நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







