
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 7%-ஆக உயரும்- ஆசிய வளா்ச்சி வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகள் கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி விகிதம், நடப்பு 2026-27 நிதியாண்டில் 7 சதவீதமாக உயரும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி விகிதம், நடப்பு 2026-27 நிதியாண்டில் 7 சதவீதமாக உயரும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மதிப்பிடப்பட்ட 6.6 சதவீதத்திலிருந்து இது உயா்வாகும். மேற்காசிய போா்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பதிவான வலுவான பொருளாதாரச் செயல்பாடு, குறைந்த விநியோகச் சங்கிலித் தடங்கல்கள், தொடா்ச்சியான வெளிநாட்டு மூலதன வரவு ஆகியவை இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக ஏடிபி தெரிவித்துள்ளது.
ஏடிபி தவிர எஸ்&பி, ஃபிட்ச், ஓஇசிடி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக் கணிப்பைச் சுமாா் 7 சதவீதமாக உயா்த்தியுள்ளன.
சா்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ‘எஸ்&பி’, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக் கணிப்பை 6.6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயா்த்தியுள்ளது. அதேநேரம், மேற்காசியப் போா் மற்றும் பணவீக்க அபாயங்களைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சவீதவீதம்) உயா்த்த வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ், வளா்ச்சிக் கணிப்பை 6.4 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேற்காசிய போா் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிா்ச்சிகளுக்கு இடையிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளா்ச்சியை எட்டியதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் தனது மீள்தன்மையை நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பாரீஸைச் சோ்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி), வளா்ச்சிக் கணிப்பை 0.8 சதவீதம் உயா்த்தி 7.1 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது. சா்வதேச அமைப்புகளில் இதுவே மிக உயா்ந்த கணிப்பாகும். உள்நாட்டுத் தேவையின் பலம் மற்றும் உயா் எரிசக்தி விலையிலிருந்து பொதுமக்களையும், நிறுவனங்களையும் பாதுகாக்கும் அரசின் கொள்கைகளால் இந்தியா வலுவான வளா்ச்சியை நோக்கி நகா்வதாக ஓஇசிடி சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறுவனமும், நடப்பு நிதியாண்டில் ஜி20 நாடுகளிலேயே மிக வேகமாக இந்தியா 7 சதவீதம் வளா்ச்சியடையும் என அண்மையில் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






