
வங்கிக் கடன் மோசடி வழக்கு! அமிதாப் ஜுன்ஜுன்வாலாவிற்கு ஜாமீன்!
ரிலையன்ஸ் முன்னாள் நிர்வாகி ஜுன்ஜுன்வாலாவிற்கு ஜாமீன் வழங்கியது பற்றி..

தில்லி உயர்நீதிமன்றம் - IANS
வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான அமிதாப் ஜுன்ஜுவாலாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
70 வயதான ஜுன்ஜுன்வாலாவிற்கு முதுமை, முதுகெலும்பு தொடர்பான தீவிர பாதிப்பு, ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு அடர்த்தி குறைவு), போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல்நிலையில் முறையான தொடர்ச்சியான மருத்துவக் கண்கானிப்பு தேவைப்படுகின்றது.
இந்த நிலையில், அமலாக்கத் துறையால் ஏப்ரல் 15 அன்று கைது செய்யப்பட்ட ஜுன்ஜுன்வாலா, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரியிருந்தார்.
மனுதாரர் நோய்வாய்ப்பட்டவர், உடல்நலக்குறைவுள்ளவர் என்பதற்காக ஜாமீன் வழங்குவதற்கான மனுவை அமலாக்கத் துறை எதிர்த்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகள் பரிந்துரைத்த சிகிச்சைகள், பரிசோதனைகள் சிறை மருத்துவ அமைப்பின் மூலமே கிடைக்கப்பெறுவதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜுன்ஜுன்வாலாவிற்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ரூ. ஒரு லட்சத்திற்கான தனிப்பட்ட பிணைப் பத்திரம் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் ஆகியவற்றின் அடிப்படையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தனது கடவுச்சீட்டை ஒப்படைத்தல், அனுமதியின்றி வெளிநாடு செல்லாமை, சாட்சிகளைச் செல்வாக்கு செலுத்தாமல் இருத்தல், ஆதாரங்களை மாற்றியமைக்காமல் இருத்தல் போன்ற நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது.
போலி அல்லது பெயரளவு நிறுவனங்களைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் போன்ற அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கடன் மோசடி தொடர்பானதே இந்த வழக்கின் விசாரணையாகும்.
யார் இந்த ஜுன்ஜுன்வாலா?
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர். மேலும் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் துணைத்தலைவர். தில்லியில் இருக்கும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றவர். தில்லியிலேயே சி.ஏ. படிப்பையும் முடித்தார். அதன் பிறகு அமிதாப் ஜுன்ஜுன்வாலா அண்ட் கம்பெனி எனும் வரி ஆலோசனை நிறுவனத்தை நடத்திவந்தார். இவரது நிறுவன வாடிக்கையாளர்களில் ஒரு நிறுவனம்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமான கோத்தாரி பயனீர் மியூச்சுவல் பண்டில் நிதி மேலாளராக சேர்ந்தார். அதன்பிறகு 1995-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். 2001-ம் ஆண்டு ரிலையன்ஸ் எனர்ஜியில் இயக்குநர் பொறுப்பும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கருவூல தலைமை பொறுப்புக்கு வந்தார். முகேஷ் மற்றும் அனில் ஆகியோருக்கு இடையே பிரிவினை வந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பொறுப்பில் இருந்து விலகி அனில் அம்பானி குழுமத்தில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




