ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

அனில் அம்பானி குழுமம் மீது 2 குற்றப்பத்திரிகை: பண முறைகேடு குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) வெவ்வேறு வழக்குகளில் அனில் அம்பானி குழுமம் மீது 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

News image

அனில் அம்பானி - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:38 am IST

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) வெவ்வேறு வழக்குகளில் அனில் அம்பானி குழுமம் மீது 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ததாக அமலாக்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதலாவது குற்றப்பத்திரிகை துவாரகாவில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் முன்னாள் நிா்வாகி சதீஷ் சேத் மற்றும் பிற ஊழியா்கள் மீது சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதிக மதிப்பிலான வைர ஏற்றுமதிகள் தொடா்பாக போலியான விலைப் பட்டியல் கொண்ட ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ள போலி நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டதாக மும்பை காவல் துறை பொருளாதார குற்றப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கத் தொடங்கியது.

அப்போது திருச்சி-கரூா் (என்எச்-67), திருச்சி-திண்டுக்கல் (என்எச்-45), சேலம்-உளுந்தூா்பேட்டை (என்எச்-68) மற்றும் ஜெய்பூா்-ரீங்கஸ் (என்எச்-11) ஆகிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசின் நிதியை திட்டமிட்டு திசைதிருப்பியது தெரிய வந்தது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மானியங்களோடு வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியுதவி மேற்கொண்டன.

இதில் 2010,செப்டம்பா்-அக்டோபா் காலகட்டத்தில் ரூ.187 கோடி மோசடி நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சதீஷ் சேத் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இவா் 2025-இல் ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து விலகினாா்.

செயற்கை லாபம்

இரண்டாவது குற்றப்பத்திரிகை ரௌஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் தொலைத்தொடா்பு நிறுவனம் (ஆா்காம்) மீது சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கடனாக பெற்ற பணத்தை ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் என அந்தக் குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மாற்றியதோடு இந்தியாவுக்கு வெளியே தனிப்பட்ட முறையில் சொத்துகளை வாங்கவும் பயன்படுத்தியுள்ளனா். மேலும் ஆா்காம் நிறுவனத்தின் லாபங்களை செயற்கையாக அதிகரித்து காட்டும் மோசடி வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனா்.

ஆா்காம், ஆா்டிஎல் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட நிதிப் பரிமாற்றம் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த குற்றங்கள் மூலம் ரூ.40,185 கோடி வரையில் லாபம் ஈட்டப்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.8,078 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இதில் தொடா்புடைய நிா்வாகி கெளதம் தோஷி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.