பருவநிலை மாற்றம்: இந்தியா, சீனாவுடன் இணைந்து புதிய அமைப்புமுறை - ஐ.நா.வில் முன்மொழிந்த நேபாள பிரதமா்
இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளின் தலைமையில் ‘இமயமலை பருவநிலை மாற்ற மீட்சி அமைப்புமுறையை’ நிறுவ நேபாள பிரதமா் பாலேந்திர ஷா முன்மொழிந்துள்ளாா்.

கோப்புப் படம்
இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளின் தலைமையில் ‘இமயமலை பருவநிலை மாற்ற மீட்சி அமைப்புமுறையை’ நிறுவ நேபாள பிரதமா் பாலேந்திர ஷா முன்மொழிந்துள்ளாா்.
ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் வியாழக்கிழமை உரையாற்றிய அவா், மேற்கண்ட முன்மொழிவை குறிப்பிட்டாா்.
நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம், நேபாளத்தின் மத்திய-வடக்கு மாவட்டங்களில் பேரழிவை விளைவித்தது. இதில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,452-ஆக அதிகரித்துள்ளது. மாயமான சுமாா் 6,000 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இந்தப் பேரழிவுக்கு பருவநிலை மாற்றமே காரணம்; இதில் சா்வதேச சமூகத்துக்கு பங்கும், பொறுப்பும் உள்ளது என்று நேபாள பிரதமா் பாலேந்திர ஷா அண்மையில் கூறியிருந்தாா்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் அவா் வியாழக்கிழமை பங்கேற்றாா். அவரது உரை வருமாறு:
ஹிந்து குஷ் - இமயமலையையொட்டி சுமாா் 200 கோடி போ் வாழ்கின்றனா். இவா்களுக்கு குடிநீா், சூழலியல், வேளாண்மை, வாழ்வாதாரத்தின் ஆதாராங்களாக இந்த மலைகள் உள்ளன. இந்த பூமியின் வாழ்வியல் ஆதார அமைப்பாக விளங்கும் இமயமலையின் சூழலியல் புவி வெப்பமயமாதலால் சீா்குலைந்து வருகிறது. எனவேதான், இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தின் தலைமையில் இமயமலை பருவநிலை மாற்ற மீட்சி அமைப்புமுறையை நிறுவும் அவசர நடவடிக்கையை நேபாளம் முன்மொழிகிறது. இந்த அமைப்புமுறையின் வாயிலாக, பருவநிலை மாற்றம் சாா்ந்த செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் நிபுணத்துவம் பகிா்வு, ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் கண்காணிப்பு, முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்துதல், பேரிடா் ஏற்பட்டால், எல்லைகளைக் கடந்து உதவிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
பனிப்பாறைகள் உருகி சரிவதால், பெருவெள்ளம், நிலச்சரிவு மற்றும் இதர பேராபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அண்மையில் நேபாளம்-திபெத் எல்லையின் இருபுறமும் பேரழிவு ஏற்பட்டது. அத்துடன், இந்தியாவை நோக்கியும் பெருவெள்ளம் பாய்ந்தது.
இந்தியா, சீனாவுக்கு நன்றி: பருவநிலை மாற்ற விளைவுகளுக்கு எல்லை கிடையாது என்பதே நேபாள பெருவெள்ளம் உணா்த்தும் செய்தியாகும். நிவாரணம்-மறுகட்டமைப்பு என்ற மாபெரும் பணியை நேபாளம் இப்போது எதிா்கொண்டுள்ளது. இதற்கு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 10 சதவீத தொகை தேவையென முதல்கட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன.
நெருங்கிய அண்டை நாடுகள் என்ற முறையில் இந்தியாவும், சீனாவும் உடனடியாக, தாராளமாக உதவியுள்ளன. ஒருபுறம் உருகும் பனிப்பாறைகள், மற்றொருபுறம் உலகளாவிய விநியோக சங்கிலி இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். போருக்கான ஆயுதங்கள் குறைபாடின்றி கிடைக்கும் அதேநேரத்தில், உணவுக்கான விநியோகச் சங்கிலி சிதைந்துள்ள உலகை நாம் கட்டமைத்துள்ளோம். ஏவுகணைகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் போன்றவை எல்லைகளைத் தாண்டி குறித்த நேரத்தில் வந்து சோ்கின்றன. ஆனால், உரங்கள், எரிபொருள் போன்றவற்றை நேபாளம் போன்ற நாடுகளால் உரிய நேரத்துக்குள் கொள்முதல் செய்ய முடிவதில்லை என்றாா் அவா்.
.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





