
பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு!
பாஜக வேட்பாளராகப் போட்டியிட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாய்ப்பு வழங்கியதாக கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் / முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிடம் பாஜக வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கியதாக முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மீது நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார் என முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜிஜி தாம்சன், “இது 2016-இல் நடைபெற்றது. நானும் ஞானேஷ் குமாரும் தில்லி செல்லும் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தோம். அப்போது நான் கேரள தலைமைச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, எனது எதிர்காலத் திட்டங்கள் பற்றி அவர் கேட்டறிந்தார்.
பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட முடியுமா என்று அவர் கேட்டார். வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லாததால், அந்த வாய்ப்பை உடனடியாக மறுத்துவிட்டேன்.
எனக்கு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. அப்படியொரு வாய்ப்பை அவர் வழங்கியிருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
ஜிஜி தாம்சன் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கேரள முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டீகாரம் மீனா வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் தேர்தல் ஆணையம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் உத்தரவுகள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளியாகின.
அந்தச் செய்திகளின்படி, வாக்காளர் பதிவுக்கான சட்டப்பூர்வமான 'படிவம் 6'-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தின் மீதான கட்டுப்பாட்டை மையப்படுத்துதல் தொடர்பானதாக இந்த ஆட்சேபனைகள் குறிப்பிடப்பட்டன.
ஆனால், தேர்தல் ஆணையம் இதுபற்றி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் முடிவுகள் அனைத்து சட்ட அங்கீகாரம் கொண்டவை என்றும் இதுபோன்ற விவாதங்களின்போது எந்த நிறுவன அமைப்பிலும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A former Chief Secretary of Kerala has alleged that Chief Election Commissioner Gyanesh Kumar offered him the opportunity to contest as a BJP candidate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







