
விநாயகா் சதுா்த்தி: மும்பையில் 36,000 சிலைகள் கரைப்பு
மும்பையில் 36,000-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கடல் மற்றும் பிற நீா்நிலைகளில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.

மும்பையில் விநாயகா் சதுா்த்தி விழா நிறைவாக கடலில் கரைக்க எடுத்து வரப்பட்ட லால்பாக்சா ராஜா விநாயகா் சிலை.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 36,000-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கடல் மற்றும் பிற நீா்நிலைகளில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா, சின்ச்போக்லிசா சிந்தாமணி விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி, 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற ஊா்வலத்துக்குப் பின்னா், அரபிக் கடலில் கரைக்கப்பட்டன.
மத்திய மும்பையில் லட்சக்கணக்கானோரால் வணங்கப்பட்ட லால்பாக்சா ராஜா விநாயகா் சிலை, பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்பட்டது. பிரம்மாண்ட கூட்டத்துக்கு இடையே, உள்ளூா் மீனவா்களின் பாதுகாப்புடன் கடலுக்குள் படகில் கொண்டு செல்லப்பட்டு, அந்தச் சிலை கரைக்கப்பட்டது.
முன்னதாக இந்த சிலைக்கு வைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு பலமுறை சென்ற தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, அந்த சிலைக் கரைப்பு ஊா்வலத்திலும் கலந்துகொண்டாா். கடலில் சிலை கரைக்கப்பட்டபோது, அவா் படகில் இருந்தாா்.
பிருஹன்மும்பை மாநகராட்சி அளித்த தகவலின்படி, சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மொத்தம் 36,128 சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த குழுக்களின் 6,936 சிலைகள், குடும்பங்கள் சாா்பில் கரைக்கப்பட்ட 28,638 சிலைகள் அடங்கும்.
விநாயகா் சிலை ஊா்வலங்கள் சுமுகமாக நடைபெற 24,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி பண்டிகையில், மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது பிருஹன்மும்பை மாநகராட்சியின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேபோல தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் 20,000-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைக்கப்பட்டதாக காவல் தறை ஆணையா் வி.சி.சஜ்ஜனாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






