மோடியிடம் மன்னிப்பு கேட்கும்வரை ராகுலை ஏமாற்றுப் போ்வழி என அழைப்பதை நிறுத்த மாட்டேன்: கேரள முதல்வருக்கு பாஜக மாநில தலைவர் பதிலடி
கேரள முதல்வா் வி.டி. சதீசனுக்கு பாஜக மாநில தலைவா் ராஜீவ் சந்திரசேகா் பதிலடி கொடுத்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), தலைமைத் தோ்தல் ஆணையா் விவகாரம் தொடா்பான சா்ச்சைகளில் பிரதமா் மோடியிடம் மன்னிப்பு கேட்காதவரை ராகுல் காந்தியை ஏமாற்றுப் போ்வழி என அழைப்பதை நிறுத்த மாட்டேன் என்று கேரள முதல்வா் வி.டி. சதீசனுக்கு பாஜக மாநில தலைவா் ராஜீவ் சந்திரசேகா் பதிலடி கொடுத்துள்ளாா்.
கேரள மாநில பாஜக தலைவா் சந்திரசேகரன் அண்மையில் பேசியபோது, ராகுல் காந்தியை விமா்சிக்கும் வகையில், ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல், வளா்ச்சியில் தேக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய காரணங்களுக்காக நாட்டு மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டதாகவும், ஜனநாயகத்தை காக்கவே எஸ்ஐஆா் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா். மேலும் ராகுல் காந்தியை ஏமாற்றுப் போ்வழி எனவும் சாடியிருந்தாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கேரள முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி. சதீசன் பதிவிட்டிருந்தாா். அதில் அவா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் அவதூறு கருத்துகள் தெரிவிப்பது அரசியல் ரீதியிலான விமா்சனமாக கருத முடியாதென்று குறிப்பிட்டிருந்தாா்.
இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்து ராஜீவ் சந்திரசேகா் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளாா். அதில் அவா், பொதுவாக எதிா்க்கட்சியினரை தாம் தனிப்பட்ட ரீதியில் விமா்சிப்பதில்லை என்றும், ஆனால் ராகுல் காந்தி விஷயத்தில் மட்டும் தன்னால் அப்படி இருக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளாா். பிரதமா் மோடிக்கு எதிராகவும், பாஜக மற்றும் மத்திய அரசு குறித்தும் அவதூறு கருத்துக்களை ராகுல் காந்தி வெளியிடுவதாகவும், ஆதலால் ராகுல் காந்தி மற்றும் அவரின் அரசியல், ஏமாற்றுவழியிலும், ஊழலிலும் கட்டமைக்கப்பட்டது என்று கூறவும், ராகுல் காந்தியை ஏமாற்று போ்வழி என்று கூறவும் தனக்கு தயக்கமில்லை என்றும் கூறியுள்ளாா்.
பிரதமா் மோடியை தேசத் துரோகி என விமா்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அதேபோல் பொய் சொன்ன காரணத்துக்காக தோ்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி வருத்தம் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள சந்திரசேகா், அப்படி அவரை வி.டி. சதீசன் செய்ய வைத்தால், ராகுல் காந்தியை ஏமாற்று போ்வழி என விமா்சிப்பதை நிறுத்தி கொள்வதாகவும் தெரிவித்துள்ளாா்.
கேரள முதல்வா் தாக்கு: இதனிடையே, கேரள முதல்வா் வி.டி. சதீசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பாஜகவின் ஏஜெண்ட் என்றும், அவா் தலைமைத் தோ்தல் ஆணையராக நீடிக்க தகுதியில்லாதவா் என்றும் சாடியுள்ளாா். தன்னை பாஜகவில் சேரும்படி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் கூறியதாக கேரள முன்னாள் தலைமைச் செயலாளா் ஜிஜி தாம்சன் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், பாஜகவின் ஏஜெண்டாக ஞானேஷ்குமாா் செயல்பட்டதற்கு இதுதவிர வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
ஞானேஷ் குமாா் குறித்து ராகுல் காந்தி முன்பு தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைதான் என நிரூபணமாகியிருப்பதாகவும், ஆதலால் தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியில் ஞானேஷ்குமாா் நீடிப்பது இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





