
கொலை வழக்கில் 24 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட கொலையாளி!
தில்லியின் வனப்பகுதியில் ஒருவரின் தலையில் கற்களால் நசுக்கி கொலை செய்த 48 வயதான நபரை 24 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

24 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட கொலையாளி - சித்திரிப்பு
தில்லியின் வனப்பகுதியில் ஒருவரின் தலையில் கற்களால் நசுக்கி கொலை செய்த 48 வயதான நபரை 24 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பிகாரைச் சேர்ந்த ஃபெரோஜ் என்பவர், குருகிராமில் உள்ள 'இண்டஸ்ட்ரியல் மாடல் டவுன்ஷிப்' பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரு ஆண்டுகளாக தையல்காரராகப் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
35 வயதான கலாம் அன்சாரி என்பவரைக் கொன்றதாக ஃபெரோஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று துக்ளகாபாத் கோட்டை அருகில் உள்ள வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கற்களால் மூடப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் அந்த நபர் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இறந்தவர் பிகாரைச் சேர்ந்த அன்சாரி என்பது பின்னர் அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், அன்சாரி 2001-ஆம் ஆண்டில் ஃபெரோஜுடன் இணைந்து வேலை தேடி தில்லிக்கு வந்தது தெரியவந்தது" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நடத்திய விசாரணை பற்றி காவல்துறையினர் கூறுகையில், "ஃபெரோஜின் சகோதரர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அன்சாரியின் வீட்டின் முன்பாக அவர் தற்கொலை செய்துகொண்டார். தனது சகோதரரின் தற்கொலைக்கு அன்சாரியின் குடும்பமே பொறுப்பு என்று ஃபெரோஜ் சந்தேகித்து பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிப். 15, 2002 அன்று, அன்சாரியை அழைத்துக் கொண்டு தில்லி வனப்பகுதிக்குச் சென்ற ஃபெரோஜ் கற்களால் அவரது தலையை நசுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் பிகாருக்குத் திரும்பி அன்சாரி எங்கிருக்கிறார் என்பது பற்றி தவறான தகவல்களை அளித்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
அவரைக் கண்டறியும் முயற்சியை மீண்டும் தொடங்கிய குற்றப்பிரிவுப் போலீசார், கடந்த இரு மாதங்களில் பிகாருக்குப் பலமுறை சென்று கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனை நடத்தினர்.
பழைய ஆவணங்களை ஆய்வு செய்து, தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் கிடைத்த தடயங்களைப் பின்தொடர்ந்து ஃபெரோஜின் நடமாட்டம் குறித்த தகவல்களைக் காவல்துறைக் குழுவினர் சேகரித்தனர்.
இறுதியில், அவர் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதை போலீசார் கண்டறிந்தனர். அவரது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கொலைக்குப் பின் தனது கிராமத்துடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட ஃபெரோஜ், தனது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் மறைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு மாறி மாறிச் சென்று வசித்து வந்த நிலையில் 24 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டார். அவருக்குத் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
The police have traced a 48-year-old man 24 years after he killed a person in a forest area in Delhi by crushing their head with stones.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




