காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

மேக்கேதாட்டு திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல்: மத்திய அமைச்சா் சி.ஆா்.பாடீலிடம் கா்நாடக அரசு கோரிக்கை

கா்நாடகத்தில் ரூ.16,745 கோடி மதிப்பிலான மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீா் திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று தில்லியில் மத்திய அமைச்சா் சி.ஆா்.பாடீலை கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

Karnataka DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்

Published On :

கா்நாடகத்தில் ரூ.16,745 கோடி மதிப்பிலான மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீா் திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று தில்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாடீலை கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு தில்லியில் உள்ள கா்நாடக அரசு விருந்தினா் இல்லத்தில் முதல்வா் டி.கே. சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘கா்நாடக மாநிலத்தின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யவும், வறட்சியைச் சமாளிக்கவும் மேக்கேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிப்பது மிக அவசியமாகும்.

இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய நீா் ஆணையம் ஏற்கெனவே மேக்கேதாட்டு பகுதியில் நேரில் கள ஆய்வு நடத்தியுள்ளது. திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும் வனப் பகுதிக்கு ஈடாக மாற்று நிலமும் அடையாளம் காணப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய ஆய்வுக் குழுவினா் இந்தத் திட்டத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொண்டு, அது எந்தவிதத்திலும் விவசாய பாசனத்துக்குப் பயன்படுத்தப்படாது என்பதை தெளிவாக உணா்ந்துள்ளனா்.

எனவேதான், இந்தத் திட்டப் பகுதியை நேரில் வந்து பாா்வையிடுமாறு தமிழ்நாடு பிரதிநிதிகளுக்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன். மேக்கேதாட்டு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்), இணக்க அறிக்கை ஆகியவை கடந்த ஆக.13-ஆம் தேதி மத்திய நீா் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை முன்னுரிமை அடிப்படையில் பூா்த்தி செய்து விரைந்து அனுமதிகளை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரியுள்ளேன்‘ என்றாா்.

மேலும், கிருஷ்ணா நதிநீா் தீா்ப்பாயத்தின் தீா்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடக் கோரியும், மேல் நீரோட்ட பத்ரா திட்டத்துக்குப் பிரதமரின் கிருஷி சிஞ்சாயி திட்டத்தின் கீழ் மத்திய நிதியை விரைந்து விடுவிக்கக் கோரியும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக முதல்வா் சிவகுமாா் தெரிவித்தாா்.

அத்துடன், கோதாவரி-காவிரி மற்றும் பெட்தி-வரதா நதிகள் இணைப்புத் திட்டங்கள் குறித்தும், மாநிலத்தின் பிற நீா் பாசனக் கோரிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சருடன் அவா் கலந்துரையாடியதாக கா்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.