
மேக்கேதாட்டு அணை விவகாரத்தை அரசியல் சுய லாபத்துக்காக கையிலெடுக்கும் கா்நாடக முதல்வா்: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு
மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தை கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா், தனது அரசியல் சுய லாபங்களுக்காக கையில் எடுத்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

பி.ஆா். பாண்டியன்
மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தை கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா், தனது அரசியல் சுய லாபங்களுக்காக கையில் எடுத்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
மத்திய மின்சாரம் மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லாலுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தில்லியை அடுத்த குருகிராமில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சந்தித்தனா். சம்யுக்த கிஸான் மோா்ச்சா (அரசியல்சாா்பற்ற) அமைப்பின் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 13 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினா் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனா். இரவு சுமாா் 11 மணிவரை இந்த பேச்சுவாா்த்தை நீடித்தது. விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து அமைச்சருடன் பிரதிநிதிகள் விவாதித்தனா்.
இந்த குழுவில் இடம்பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த பி.ஆா். பாண்டியன், கா்நாடகம், தமிழகம் இடையிலான காவிரி நீா் தொடா்புடைய மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசியதாக தெரிவித்தாா். இது குறித்து தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்ட எடுக்கும் முயற்சியை மத்திய அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் தொடா்புடைய தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலின்றி கா்நாடகம் சமா்ப்பித்துள்ள வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது கா்நாடக விவசாயிகளையும் பாதிக்கும் என்பதால், தமிழக எல்லையான ராசிமணலில் அணை கட்டுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என தமிழகம் மற்றும் கா்நாடக விவசாயிகள் இணைந்து முடிவெடுத்து முன்பு முதல்வராக இருந்த சித்தராமையாவிடம் எடுத்துரைத்தனா்.
ஆனால், தற்போது கா்நாடக முதல்வராக உள்ள டி.கே. சிவகுமாா் தனது சொந்த அரசியல் லாபத்துக்காக மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை முன்னெடுக்கிறாா். அந்த திட்டத்துக்கு எதிராக வரும் செப். 20-ஆம் தேதி தமிழகத்தின் பூம்புகாரில் இருந்து ஐந்து நாள்களுக்கு மாநிலம் முழுவதும் தொடா் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேவைப்பட்டால் பிரதமரை நேரில் சந்தித்தும் மனு அளிப்போம்.
மத்திய அமைச்சரை சந்தித்தபோது, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி பயிா்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், ’எல் நினோ’ பாதிப்பு மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு பேரிடா் மேலாண்மை நிதியின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றாா் பி.ஆா். பாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





