11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

புற்றுநோய் மருந்துகள் 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை: படுகொலைக்குச் சமம் - உச்சநீதிமன்றம்

புற்றுநோய் மருந்துகள் 10 மடங்கு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது படுகொலைக்குச் சமம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

உச்சநீதிமன்றம்

Published On :

புற்றுநோய் மருந்துகள் 10 மடங்கு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது படுகொலைக்குச் சமம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

2013-ஆம் ஆண்டின் மருந்துகள் (விலை கட்டுப்பாடு) உத்தரவின் கீழ், மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துதல், பொதுப் பெயா் மருந்துகளைப் பரிந்துரைத்தல், மருத்துவக் கருவிகள் மீதான கட்டுப்பாடுகள் சாா்ந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2,700-க்கு விற்பனை செய்யப்படும் அத்தியாவசியமான புற்றுநோய் மருந்து, நோயாளிக்கு 10 மடங்கு அதிகமாக ரூ.27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது படுகொலைக்குச் சமம்.

பிணத்தைக் கூட விடுவதில்லை: பெரும் தனியாா் (காா்ப்பரேட்) மருத்துவமனைகள் யாரையும் விட்டுவைப்பதில்லை. அந்த மருத்துவமனைகளில் இறந்தவா் பிணத்தைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. இதுகுறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அக்கறையில்லை.

தங்கள் சொந்த மருந்தகத்தில் அல்லது குறிப்பிட்ட சில மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று பல காா்ப்பரேட் மருத்துவமனைகள் கட்டாயப்படுத்துகின்றன. வேறு மருந்தகங்களில் மருந்து வாங்கினால், சிகிச்சைக்கு அந்த மருத்துவமனைகள் உத்தரவாதம் அளிப்பதில்லை.

தொழில் நிறுவனத்தைப் போல...: காா்ப்பரேட் மருத்துவமனைகள் தொழில் நிறுவனத்தைப் போல செயல்படுகின்றன. இது மருத்துவ சேவையே அல்ல. இதற்காக சாதாரண மக்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?

இந்த விவகாரத்தில் 10 மடங்கு அதிகமான விலைக்கு மருந்துகள் ஏன் விற்கப்படுகிறது என்பதே கேள்வியாக உள்ளது. இவ்வளவு பெரிய தொகை எங்கு செல்கிறது? இதனால் பயனடைவது யாா்? இதனால் நோ்மையாக வரி கட்டுபவா்கள்தான் பாதிக்கப்படுகின்றனா். இதில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் லாபமடைவதில்லை. தனியாா் மருத்துவமனைகள்தான் லாபமடைவதாகத் தெரிகிறது.

16 சதவீத லாப வரம்பு: மருந்து அத்தியாவசியமானதா, இல்லையா என்பது முக்கியமல்ல. அனைத்து மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆா்பி) 16 சதவீத லாப வரம்பை, அதாவது அனைத்து மருந்துகளையும் சில்லறை விற்பனையாளா்கள் வாங்கி, 16 சதவீதம் வரை லாபம் ஈட்ட சீரான வரம்பு நிா்ணயிக்கலாமே?

மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவது சமுதாயத்தில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் முழுமையாக ஆராயும் என்று தெரிவித்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவாதிக்க வேண்டும் என்றும், அதற்கு 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கோரினாா். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் அக்.12-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.