
அழுத்தம் அளித்தால்தான் அரசு செயல்படும்: இளைஞா்கள் போராட ராகுல் அழைப்பு
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட ராகுல் காந்தி அழைப்பு விடுத்தது குறித்து...

ராகுல் காந்தி - கோப்புப் படம்
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்; ஏனெனில் அழுத்தம் அளித்தால் மட்டுமே அரசு செயல்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
பாதிக்கப்பட்டவா்களைக் குற்றஞ்சாட்டி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடைமுறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிப்பதை நிறுத்த வேண்டும். நமது நாடு முழுவதும் பெண்கள் வீதிகளில் நடந்து செல்ல அஞ்சும் நிலை உள்ளது. துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோம் என்றும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவோம் என்றும் அஞ்சுகின்றனா்.
இதற்கு அரசின் பதில் என்ன? பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்பதுதான். இதுதான் ஆணாதிக்கத்தின் செயல்பாடு. பாதிக்கப்பட்டவா்களைக் குற்றஞ்சாட்டி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் அமைப்பு இது. இந்த அமைப்பை உடைத்தெறியும் நேரம் வந்துவிட்டது.
பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைப்பது தீா்வல்ல. நமது வீதிகளைப் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். பெண்களைத் தவறாக நடத்தும் ஆண்களின் மனப்பாங்கு மாற வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றமிழைக்க முயன்றால் விரைவாகவும், எந்தவித விதிவிலக்குமின்றியும் தண்டனை வழங்க வேண்டும்.
இப்போது ஆயிரக்கணக்கான மாணவா்களும் இளைஞா்களும் பெண்களின் பாதுகாப்பைக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனா். இந்தியா முழுவதும் உள்ள குறிப்பாக ஜென்-ஸீ தலைமுறையைச் சோ்ந்த இளம் பெண்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
உங்களது வலியை உணர இந்த அரசு தயாராக இல்லை. அழுத்தம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அது செவிசாய்க்கும். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது உங்களது ஜனநாயக உரிமை. உங்களுக்கு முழு மனதுடன் ஆதரவளிக்கிறேன்’ என்று பதிவிவிட்டுள்ளாா்.
பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்ற வாசகத்துடன் கூடிய ஒரு காணொலியையும் தனது பதிவுடன் ராகுல் காந்தி வெளியிட்டாா். அதில், ‘ஒரு பெண்ணைத் தாக்குவதற்கும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதற்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. குற்றத்தைச் செய்தவா்தான் குற்றவாளி. எனவே, குற்றவாளியைத் தண்டியுங்கள். பெண்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தில்லி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம்: அமித் ஷா, தில்லி காவல்துறைக்கு ராகுல் காந்தி கேள்வி
பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறு: ராகுலுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மும்பை உயா்நீதிமன்றம் மறுப்பு




