Enable Javscript for better performance
3. அகம் புறம் அறம்- Dinamani

சுடச்சுட

  

   

  ஒருநாள், சாணக்கியரைப் பார்க்க ஒரு சீன யாத்ரீகர் வந்தார். சீன யாத்ரீகர் என்றதும் யுவாங் சுவாங்கா என்று நம் மூளை கேட்கும். அல்ல. இவர் வேறு. இவர் குவாங் புவாங்காக இருக்கலாம். யாரோ. அவர் வந்தபோது இரவு நேரம். சாணக்கியர் எண்ணெய் விளக்கொன்றின் வெளிச்சத்தில் ஒரு தாளில் ஏதேதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதி முடித்ததும் சீன நண்பரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு விளக்கை அணைத்தார். பின்பு வேறொரு அகல்விளக்கை ஏற்றினார். முதல் விளக்கை ஏன் அணைத்தார், இரண்டாவது விளக்கை ஏன் ஏற்றினார் என்று சீனருக்குப் புரியவில்லை. ஒருவேளை அது அந்த ஊரின் பழக்கம்போல என்று அவர் எண்ணிக்கொண்டார். ஆனால் தன் சந்தேகத்தைக் கேட்கவும் செய்தார். அதற்கு சாணக்கியர் சொன்ன பதில் இருக்கிறதே, அடடா அதுதான் இங்கே ‘ஹைலைட்’. அவர் சொன்னார்:

  ‘நண்பரே, நீங்கள் வந்தபோது நான் அரசாங்க வேலையாக இருந்தேன். அந்த விளக்கின் எண்ணெய்க்கான பணம் அரசாங்க பொதுக்கருவூலத்திலிருந்து வருகிறது. வேலை முடிந்துவிட்டது. உங்களோடு பேசுவது என் தனிப்பட்ட விஷயம். அதற்கு அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்துவது தவறாகும். அதனால்தான் அந்த விளக்கை அணைத்துவிட்டு என் காசில் எரியும் என் வீட்டு விளக்கை ஏற்றினேன்’!

  என் மனதை மிகவும் கவர்ந்த வரலாற்று நிகழ்ச்சி அல்லது கதை இது. அறம் என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதிலாக இக்கதையைச் சொல்லிவிடலாம். வேறு விளக்கங்களே தேவையில்லை. ஆமாம். அறத்தால் வருவதே இன்பம் என்று வள்ளுவர் சொன்னதை ஏற்கெனவே சொன்னேன். அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாமென்று நினைக்கிறேன். ஏனெனில் இன்றைக்கு நம் நாட்டில், அரசில், அதிகாரத்தில், அலுவலகத்தில், வாணிபத்தில், ஏன், குடும்பத்தில்கூட இல்லாமல் போய்க்கொண்டிருப்பது அறம்தான். அதன் விளைவாக சந்தோஷமும் பொய்யானதாக, போலியானதாக, தாற்காலிகமானதாக மாறிக்கொண்டிருக்கிறது.

  நியாயமாக நடந்துகொள்வதே அறம் என்று புரிந்துகொண்டால் போதாது. அறத்தை நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதனால்தானே என்னவோ அறம் பற்றி வள்ளுவர் பல குறள்களில் பேசுகிறார்.

  மனித வாழ்வின் இருகூறுகளான அகம், புறம் இரண்டையும் அணைத்துக்கொள்வதாக உள்ளது அறம். அகம் என்பது நாம், புறம் என்பது நமக்கு வெளியில் உள்ள சமுதாயம், உலகம் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் இது எல்கேஜி விளக்கம் மட்டுமே. உண்மையில் அறம் என்பது பல நுட்பங்களை உள்ளடக்கியது.

  ஒரு மனிதனை வைத்தே அறத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமெனில் மனம் சம்பந்தப்பட்டதை அகம் என்றும், செயல் சம்பந்தப்பட்டதை புறம் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் புறத்தில் எது நடக்க வேண்டுமென்றாலும் முதலில் அது அகத்தில்தான் தொடங்க வேண்டும். குழந்தை வேண்டுமென்றால் முதலில் பெண்ணின் மீது ஆசை வேண்டுமல்லவா? சாப்பாடு வேண்டுமென்றால் அதற்கு முன்னர் பசி என்று ஒன்று வரவேண்டுமல்லவா? இப்போதெல்லாம் பசிக்கு யார் சாப்பிடுகிறார்கள்? ‘டைம் பாஸுக்கு’ம் சாப்பிடலாம் என்று எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நின்றுகொண்டு நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது!

  மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் என்று வள்ளுவர் கூறுவது கவனிக்கத்தக்கது. மனதில் உள்ள அழுக்குகளை நீக்குவது அறம்தான். அழுக்காறு எனும் பொறாமை, அவா எனும் பேராசை, வெகுளி எனும் கோபம், இன்னாச்சொல் எனும் கடும் சொல் இவை நான்கும் இல்லாமல் இருப்பதும் அறம்தான் என்று வள்ளுவர் மேலும் விளக்குகிறார். ஒரு மனிதன் தனக்குள் எப்படி அறத்தை உருவாக்கிக்கொள்வதென்று இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.

  அடுத்த மனிதனிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருமுறை ரமண மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு காவிய பதிலைச் சொன்னார். அது என்ன தெரியுமா?

  ‘அடுத்தவர் என்று யாருமில்லை’!

  நெத்தியடி என்பது அதுதான்! அறத்தின் உச்சபட்ச வெளிப்பாடு என்று அதை நான் சொல்வேன். ‘உங்களுக்கு நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதைப்போன்றதையே அடுத்தவருக்கும் விரும்புங்கள்’ என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். அறம் என்றால் என்ன என்பதற்கு இந்த நபிமொழி ஒரு விளக்கமாக உள்ளது என்றே சொல்லிவிடலாம். ஆமாம். நாம் எப்படி வாழ்கிறோம் என்று கொஞ்சம் யோசித்தாலே இது விளங்கிவிடும்.

  வீட்டில் நம் யாருக்குமே பிடிக்காத ஒரு உணவுப்பண்டம் மிஞ்சிவிடும்போது அதை உடனே ‘கருணை கூர்ந்து’ வேலைக்காரிக்கோ வேலைக்காரருக்கோ கொடுத்துவிடுவோம்! இந்தக்கால வேலைக்காரர்கள் இப்படி மீந்ததையெல்லாம் தீண்டித் திருக்கண்ணால் பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம்!

  ஆனால் அது உண்மையான தர்மமாகுமா? அறம் சார்ந்த செயல்பாடா? இல்லை என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் நாம் அதற்கு ஒரு விளக்கம் சொல்வோம். அந்த வேலைக்காரிக்கு அது தேவைப்படுகிறது. அதுகூட இல்லாமல்தானே அவள் இருக்கிறாள்! பரவாயில்லை, வீணாய்ப்போக இருப்பதை ஒரு மனிதருக்குக் கொடுத்தால் அவர் பசியாவது அடங்குமல்லவா?

  எல்லாம் சரிதான். ஆனால் நாம் கொடுத்ததன் பின்னால் உள்ள நோக்கம் என்ன? நமக்கு அந்த உணவு பிடிக்கவில்லை என்பதுதானே! பிடிக்காததைக் கொடுப்பது எப்படி அறமாகும்? ஒரு மிக்ஸி கடையில் இப்படி விளம்பரம் செய்திருந்தார்கள். ‘உங்களுப் பிடிக்காததை எங்களிடம் கொடுத்துவிட்டு உங்களுக்குப் பிடித்ததை எடுத்துச் செல்லுங்கள்’! அது ஒரு ‘எக்ஸ்சேஜ்’ வியாபார உத்தி. நமக்குப் பிடிக்காத உணவு, உடை போன்றவற்றை தானம் செய்வதும் இப்படிப்பட்ட வணிக உத்திதானே தவிர, அது எப்படி அறமாகும்?!

  இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் வெட்டிக்கொல்ல வந்தால், கொன்றவருக்கும் கொல்லப்பட்டவருக்கும் நரகம்தான் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். அதைக்கேட்ட தோழர்கள் திகைத்தார்கள். இது எப்படி நியாயமாகும்? கொன்றவருக்கு நரகம் சரி. ஆனால் கொல்லப்பட்டவருக்கும் ஏன் நரகம்? விளக்கம் கேட்டார்கள். அப்போது நபிகளார் சொன்னார்கள்: ‘இருவருமே ஒருவரையொருவர் கொலை செய்யத்தானே வந்தார்கள்? இவர் சாகாவிட்டால் அவர் செத்திருப்பார். அவர் சாகாவிட்டால் இவர் செத்திருப்பார்’!

  நபிகளாரின் விளக்கத்தில் ஓர் அழகான உண்மை ஒளிந்துள்ளது. அறம் என்பதை நாம் நம் வசதிக்குத் தக்கபடி புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் ஆண்டவன் அப்படிச் செய்யமாட்டான். செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தையும் அதன் தூய்மையையுமே அவன் பார்க்கிறான்.

  துரியோதனனைப் போன்ற தீயவர்கள் அழிவதில் நியாயம் உண்டு. ஆனால் பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றவர்களும் மடிவதில் என்ன நியாயம் என்று கிருஷ்ணரிடம் கேட்கப்பட்டபோது அவர் ஒரு பதிலைச் சொன்னார். அறம் என்றால் என்னவென்பதைப் புரிந்துகொள்ள அது நிச்சயம் நமக்கு உதவும்.

  அவர்களெல்லாம் தன்னளவில் நல்லவர்கள்தான். ஆனால் திரௌபதியின் துகில் உரியப்பட்டபோது அவர்கள் மௌனச் சாட்சிகளாக மட்டுமே இருந்தார்களே ஏன்? அது தப்பு என்று தெரிந்த பின்னர் தடுத்திருக்க வேண்டாமா? அங்கே அவர்கள் அறம் தவறிவிட்டார்கள். அதனால்தான் அவர்களுக்கு அந்த முடிவு! தீயசெயலுக்குச் சாட்சியாக இருந்தாலும் அது தீயசெயலைச் செய்ததற்கு, அறம் தவறியதற்கு ஒப்பானதாகும். அதன் விளைவு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?

  மஹாபாரதத்தின் அடிச்சரடே அறம்தான். அறத்தின் குரலாக கௌரவர்கள் பக்கம் விதுரன் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தான். ஆனால் யாருமே கேட்கவில்லை. திருதராஷ்டிரன் உட்பட. எது அறம், எது அதர்மம் என்று புரிந்துகொள்கின்ற பார்வையற்றவன் அவன். யுத்தத்தின் முடிவு அதர்மவாதிகளுக்குத் தோல்வியாகவும், மரணமாகவும், துக்கமாகவும் இருந்தது. ஆனால் தர்மத்தின் பக்கம் நின்றவர்களுக்கு வெற்றியும் சந்தோஷமும் இறுதியில் கிடைத்தது.

  காப்பியத்தில், கதையில் வேண்டுமானால் இப்படி நடக்கலாம். ஆனால் நாட்டில், உலகில் இப்படி நடக்கவில்லையே என்ற கேள்வி எழலாம். வேனில் ஏறி நின்று, மனிதர்களின் நெற்றியை, நெஞ்சைக் குறிபார்த்து சுட்டதில் உள்ள அதர்மத்தின் பலனை உத்தரவு கொடுத்தவர்கள் இன்னும் அனுபவிக்கவில்லையே! தர்மத்துக்காகப் போராடியவர்கள் இறந்துபோனார்களே என்று கேட்கலாம். எட்டு வயது சிறுமியை கதறக்கதற பாலியல் வன்கொடுமை செய்து, வெட்டிப் புதைத்த கொடுங்கோலர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். கேள்வி நியாயமானதே.

  ஜாதி, மதம், இனம், நிறம் இவற்றின் பெயரால் மனிதர்களின் மனம் மற்றும் உடல் மீது வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் அந்த நேரத்தில் சந்தோஷமடையலாம். அது துரியோதனாதிகளுக்கு கிருஷ்ணரின் சேனை கிடைத்த மாதிரியான சந்தோஷம். ஆனால் அந்த தாற்காலிக சந்தோஷம் உண்மையானதல்ல. அது துன்பத்தின் இன்னொரு முகம். உண்மையான முகம் வெளிவரும் நாளில் அவர்கள் யாரும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள்.

  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

  பிற்பகல் தாமே வரும்

  என்று வள்ளுவர் தீர்க்கதரிசனத்தோடு ஒரு குறளை அப்படிப்பட்டவர்களுக்காகவே எழுதியுள்ளார். தீமை செய்தவர்களுக்கு அந்த தீமை ‘பூமராங்’ ஆகும் நாளில் அது புரியும். அதுவரை பொறுமை காக்க வேண்டியுள்ளது. பொறுமையாளர்களோடு நிச்சயமாக நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதாக அருள்மறை கூறுகிறது. Wait and see என்று சொல்வார்களே, அது.

  ஒரு இளவரசிக்கு ஒருநாள் காலில் முள் குத்தியது. உடனே ராஜா பிரதம மந்திரியை அழைத்து, ‘இந்த நாட்டில் உள்ள சாலைகளையெல்லாம் பதனிடப்பட்ட தோலால் மூடு. என் இளவரசியின் காலில் எந்த முள்ளும் குத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டார்! பிரதம மந்திரி என்றதும் ரெக்கைகள் இன்றியே எந்நாளும் வெளிநாடுகளுக்குப் பறந்துகொண்டிருக்கும் வேறு யாரையும் பற்றி நான் பேசுவதாக நினைத்துவிட வேண்டாம். சாலை என்றதும் எட்டுவழிச் சாலை அல்ல.

  கதையில் வரும் பிரதம மந்திரி மக்கள் நலனைப் பற்றி சிந்திப்பவர். அறிவாளி. அவர் யோசித்தார். நாட்டில் உள்ள சாலைகளையெல்லாம் மூடும் அளவுக்கு பதனிடப்பட்ட தோலுக்கு எங்கே போவது? அப்படியே செய்வதானாலும் எத்தனை ஆயிரம் ஆடுமாடுகளைக் கொல்ல வேண்டிவரும்?

  சும்மா மாட்டுக்குத் தீனிபோட இழுத்துக்கொண்டு போனால்கூட கொல்வதற்காகக் கொண்டுபோவதாகச் சொல்லி முதியவரை அடித்துக்கொன்றுபோடும் கொலைகாரர்கள் உள்ள நாட்டைப்பற்றியெல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனாலும் அவருக்கு ஓர் அருமையான கருத்து தோன்றியது. நாடுபூரா ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அதற்கு பதிலாக, இளவரசியின் அழகுக்கால்களுக்கு பதனிடப்பட்ட தோலில் செய்யப்பட காலணிகள் செய்துகொடுத்துவிட்டால்! அவரது யோசனை பலன் கொடுத்தது. இளவரசியின் கால்கள் முள்ளில் இருந்தும், அந்த நாடு அநாவசிய செலவிலிருந்தும் தப்பித்தன. கால்நடைகளும் காப்பாற்றப்பட்டன. அந்தக் காலத்தில் மந்திரிகளெல்லாம் அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள்! முக்கியமாக பிரதம மந்திரி!

  போகட்டும். கதையின் செய்தி என்னவெனில், பிரச்னையைத் தீர்க்க உலகை மாற்ற வேண்டியதில்லை. உங்களை மாற்றிக்கொண்டால் போதும். ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதற்குக் காரணம் தீவிர சதை உணர்வு மட்டுமல்ல. தீவிர மத உணர்வும் அதில் உள்ளது. தங்கள் மதம் சார்ந்தவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற முட்டாள்தனத்தின் வெளிப்பாடு. அது அவர்களுக்குப் புரியும்போது அறம் தழைக்கும். உண்மையான சந்தோஷம் நிச்சயம் திரும்பும்.

  அப்போ குழந்தை குட்டிகளை, சொந்தங்களை இழந்தவர்களின் துக்கத்துக்கு ஏது மருந்து என்ற கேள்வி நிற்கிறது. ஆனால் பதில் இல்லாமல் அல்ல. இழப்பு சோகமானதுதான். சந்தேகமில்லை. ஆனால் மரணம் என்பது இயற்கையாகவோ கட்டாயமாகவோ கொடுக்கப்பட்டாலும் அது இறந்தவர்களுக்கான விடுதலைதான். அதற்காக விடுதலை கொடுத்தவர்கள் என்று சொல்லி கொலைகாரர்களைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லவரவில்லை. கொல்பவர்கள் யாரும் நிரந்தரமாக உயிரோடு இருக்கப் போவதில்லை. It’s just a question of time. அவ்வளவுதான். இன்று நீ, நாளை நான். அப்புறம் மறுமை, சொர்க்கம், நரகம் என்றெல்லாம் உள்ளது. அதற்குள் இப்போது நான் போகவிரும்பவில்லை. அதிலெல்லாம் எனக்கு முன் அனுபவம் கிடையாது!

  மனிதனாக ஏற்படுத்திக்கொள்ளும் சந்தோஷம் தாற்காலிகமானது. கொலை, கொள்ளை, பணம், பதவி, அதிகாரம் என்று எந்த ரூபத்தில் அது வந்தாலும் சரி. ஆனால் உண்மையான சந்தோஷம் எந்தக் காரணமும் இல்லாமல் உள்ளிருந்து பிரவகிப்பது. ஒரு அழகான குழந்தையைப் பார்க்கும்போது, நிலவைப் பார்க்கும்போது, தென்றல் வீசும்போது – இப்படியெல்லாம் நடக்கும்போது நமக்குள் உருவாகிறதே அதுதான் உண்மையான சந்தோஷம். உருவாக்கப்படுவது சந்தோஷமல்ல. உருவாவதே சந்தோஷம்.

  ஆனால் அந்த சந்தோஷம் ஒருவருக்குள் உருவாக வேண்டுமென்றால் அவர் அறவழியில் நடப்பவராக இருக்க வேண்டும்.

  அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

  புறத்த புகழும் இல

  என்று வள்ளுவர் அடித்துக்கூறியதன் பொருள் விளங்கியதா?

  இன்னும் உண்டு…

  *

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai