Enable Javscript for better performance
6. கண்டவர் விண்டது- Dinamani

சுடச்சுட

  
  ramakrishna-paramahamsa2

   

  சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அதற்குரிய சிறப்புகள் இருக்கும். ஆனால் சோழநாடு சோறுடைத்து என்று இப்போது சொல்ல முடியாது. இப்போது அது சோகமுடைத்தாகிவிட்டது! சொல்லும் நெல்லுமாக, வயலும் செயலுமாக இருந்த காலம் போய், சோலைகளெல்லாம் சாலைகளாக மாற்றம் பெறும் காலமாகிவிட்டது! போகட்டும். நான் சொல்ல வந்தது வேறு. சோழநாடு சோறுடைத்து என்பது (ஒருகாலத்தில்) சோழ நாட்டின் சிறப்பாக இருந்தது. அதைப்போல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொல்ல வேண்டுமெனில், ‘பாரத நாடு பரம்பொருளுடைத்து’ என்று சொல்ல வேண்டும்! ஆமாம். ஆன்மிகத்தில் இந்த உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ள நாடுகளில், பண்பாடுகளில் இந்தியத் திருநாடு முதன்மையானது என்று சொல்ல வேண்டும். ஞானிகளால் நிரம்பி வழிந்த நாடு நமது. நாம்தான் அவர்களைப் புரிந்துகொள்ளவில்லை. இல்லையெனில், புத்தர் இந்தியாவை விட்டுப் போயிருப்பாரா?

  நம்மோடு வாழ்ந்த மாபெரும் ஞானிகளை நாம் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம். ரமண மகரிஷியைப் பற்றிக்கூட பால் ப்ரண்டன் A Journey Into Secret India என்று புத்தகம் எழுதிய பிறகுதானே நாம், அட அப்படியா என்று மூக்கில் விரலை வைத்தோம். இந்தப் பக்கம் ரமணரைப்போல அந்தப்பக்கம் வாழ்ந்த ஒரு மாபெரும் ஞானி ராமகிருஷ்ண பரமஹம்சர்.

  அவர் மிகவும் தனித்தவர். அவரைப் போன்ற ஒரு ஞானியைப் பார்க்கவே முடியாது அல்லது பார்ப்பது வெகு அபூர்வம். அவ்வளவு விஷேஷமானவர். உண்மையின் மனித வடிவம் அவர். ஜாதி, மதம், நிறம், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சத்தியம் அவர். அவரது வாழ்க்கையையும் வார்த்தைகளையும் உற்று கவனிப்பவர்கள் யாரும் அவருக்கு தம் மனதில் மிக உயர்ந்த இடம் கொடுக்காமல் இருக்கவே முடியாது.

  அவரது சொற்களுக்கு எப்படி அவ்வளவு ஆற்றல் வந்தது? அவை அவரது அனுபவத்திலிருந்து வருபவை. சத்தியத்தீயில் தன்னைப் புடம்போட்டுக்கொண்டவர். கேட்ட உடனேயே நம் மனத்துக்குள் அவரது சொற்கள் புகுந்துகொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது. பரமஹம்சர் படிக்காதவர்! அவர் பெயரைக்கூட அவருக்கு சரியாக எழுதத் தெரியாது!

  என்ன, ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் உண்மை. பள்ளிக்கூடத்துக்குப் போவதற்கு குடும்பத்தினர் வற்புறுத்தியபோது, ‘என் வாழ்நாள் பசியை எந்தக் கல்வி போக்குமோ அந்தக் கல்வியே எனக்கு வேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறியவர் அவர்.

  படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் புரியுமாறு எப்போதும் பேசியவர் அவர். ஒரு உதாரணம் சொல்கிறேன். கடவுளைக் காண முடியுமா என்று பலர் பல நேரத்தில் அவரிடம் கேட்டுள்ளனர். அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? இதுதான்:

  ‘கடவுளைப் பார்க்க யார் விரும்புகிறார்கள்? பணம், மனைவி, மக்களுக்காக குடம் குடமாக அழுகிறார்கள். கடவுளுக்காக ஒரு நாள் அழுதால்கூடப் போதும். நிச்சயமாக அவனைக் காணலாம்’!

  மனத்தின் ஆழத்துக்குள் இறங்கும் அளவுக்கு இவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் சொல்ல அவரால் மட்டுமே முடியும்.

  பரமஹம்சரும் விவேகானந்தரும்

  இதுமட்டுமல்ல, அவரது பிரதான சீடரான ஸ்வாமி விவேகானந்தரை அவர் சந்தித்தது ஒரு வித்தியாசமான ஆனால் மறக்க முடியாத அனுபவம். விவேகானந்தரை பரமஹம்சரிடம் அறிமுகப்படுத்தியவர் ராம்சந்த்ர தத்தா என்பவர். கடவுளைக் காட்ட முடியுமா என்பதுதான் விவேகானந்தரின் பிரதான கேள்வியாக எப்போதுமே இருந்தது. அதற்கு பரமஹம்சரின் பதில் ரொம்ப அழகானதும் முக்கியமானதுமாகும். அவர் சொன்னார்:

  ‘கடவுள் இருக்கிறார். பாலில் வெண்ணெய் உள்ளது. ஆனால் அதைக் காண, குளிர்ந்த தனியிடத்தில் தயிரைக் கடைய வேண்டும். எனவே, ஆசைப்படுவதால் மட்டும் கடவுளைக் காண முடியாது. தனிமையில் பல சாதனைகளையும் மன ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்’.

  இப்படி பதில் சொன்னது மட்டுமின்றி, விவேகானந்தரைப் பார்த்தவுடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘ரொம்ப காலதாமதமாக வந்திருக்கிறாய். ஏன் நீ இவ்வளவு காலம் என்னைக் காத்திருக்க வைத்தாய்?’ என்று கேட்டார். விவேகானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இவருக்கென்ன பைத்தியமா?’ என்றுதான் தன்னை அழைத்து வந்தவர்களிடம் அவர் சொன்னார்.

  கல்லூரிக் காலத்திலிருந்தே, காணும் துறவிகளிடமெல்லாம், ‘கடவுளைக் காட்ட முடியுமா?’ என்றுதான் விவேகானந்தர் கேட்பது வழக்கம்! யார் காட்டுவார்கள்?! ‘கடவுள் ஒரு விவாதப் பொருளல்ல. கடவுள் என்பது ஓர் அனுபவம்’ என்று ஓஷோ அழகாகச் சொன்னார்.

  ஆனால் அந்தக் கேள்வியை பரமஹம்சரிடம் கேட்டபோது, ‘உன்னைப் பார்ப்பதைவிடவும் தெளிவாகப் பார்த்துள்ளேன்; உன்னிடத்தில் பேசுவதைவிட நெருக்கமாகப் பேசியுள்ளேன்’ என்று பரமஹம்சர் பதில் சொன்னார்!

  எந்த ஞானியால் இப்படிப் பதில் சொல்ல முடியும்? கண்டவர் விண்டிலர் என்று சொல்வார்கள். கடவுளை தனக்குள் உணரும் அனுபவம் ஏற்பட்டவர்கள் அதை மற்றவர்களுக்கு வார்த்தைகளால் விளக்க முடியாது. ஆனால் பரமஹம்சர், ரமணர், ஷிர்டி சாய்பாபா போன்ற சிறப்பு ஞானிகளால் மட்டுமே எளிமையாகப் புரியவைப்பது சாத்தியம். அப்படிப்பட்ட ஞானிகள் வாழ்ந்த நாட்டில் பிறந்தது நம் கொடுப்பினை. அரேபியாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு வாழ்ந்த தோழர்களைப்போல நாமும் இந்திய மண்ணில் வாழும் கொடுத்துவைத்தவர்கள்.

  ‘இந்த ஜாடி, கோப்பை, நாம் எல்லாருமே கடவுளாம்! இதைவிட அபத்தமாக ஒன்றும் இருக்க முடியாது’ என்று ஒருமுறை விவேகானந்தர் சொன்னார். அப்போது பரமஹம்சர் பதில் ஒன்றும் சொல்லாமல் விவேகானந்தரைத் தொட்டார். தொட்டவுடன் எல்லாமே கடவுள்தான் என்ற உண்மையை ஸ்வாமி விவேகானந்தர் உணர்ந்துகொண்டார்!

  புரட்சியாளர்

  பரமஹம்சர் ஒரு புரட்சியாளரும்கூட. ராணி ராசமணி என்பவரால் அவர் தட்சிணேஷ்வர் காளி கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் கோயிலில் பரமஹம்சர் பாடிக்கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்த ராணி ராசமணியை திடீரென்று கன்னத்தில் அறைந்தார்! ஏனெனில், பரமஹம்சரை பாடச்சொல்லிவிட்டு ராணி அப்போது ஒரு வழக்கைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார்! உள்ளத்தின் ரகசியத்தை அறிந்த ஞானி என்பதைவிட, தன் எஜமானியையே கன்னத்தில் அறையும் துணிச்சல் கொண்டவர் என்பதுதான் இங்கே விஷேஷம்!

  மாற்று மதப் பயிற்சிகள்

  இஸ்லாம், கிறிஸ்தவம் என மாற்று மதங்களின் சடங்குகள், பயிற்சிகள் மூலமாகவும் இறையனுபவம் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு பரமஹம்சர் வெற்றிபெற்றுள்ளார். உண்மைக்கும் மதமில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்த்தியுள்ளார்.

  1886-ல் இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். அல்லாஹ்வின் பெயரை திக்ர் (உச்சாடனம்) செய்ய ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் ஹிந்துக் கடவுளர்களை மறந்தார். காளி கோயிலுக்கும் போகவில்லை. மூன்றே நாட்களில் ஒளிபொருந்திய வடிவமொன்றைக் கண்டார். அது முஹம்மது நபியாக இருக்கலாம். மெதுவாக அந்த உருவம் அவரோடு இணைந்தது என்று The Gospel of Sri Ramakrishna என்ற நூல் கூறுகிறது (பக்.46).

  1874-ல், கிறிஸ்தவ சமய சாதனைகளைச் செய்தார். மூன்று நாட்கள் காளி கோயிலுக்குச் செல்லவில்லை. நான்காம் நாள் இயேசுவைச் சந்தித்து தழுவிக்கொண்டார் என்று அதே நூல் அதே பக்கம் கூறுகிறது.

  பரமஹம்சரின் இந்த முயற்சிகளையும் அவற்றின் பின்னால் உள்ள நோக்கத்தையும் புரிந்துகொண்டால், நம் நாட்டில் மதக் கலவரங்களே வர வாய்ப்பில்லாமல் போகும். நம் நாட்டு மக்களுக்கும் அப்படியோரு புரிந்துகொள்ளல் ஏற்பட்டுவிடாதா என்று என் மனம் ஏங்குகிறது. சமீபத்தில் நடந்த சூஃபி மாநாட்டில்கூட ‘பரமஹம்சரும் பீரப்பாவும்’ என்ற தலைப்பில்தான் நான் பேசினேன்.

  இன்ஷா அல்லாஹ்

  முஸ்லிம்கள் அடிக்கடி ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ’இறைவன் நாடினால்’ என்று அதற்குப் பொருள். இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நாம் நினைத்தபடி நடப்பது சாத்தியம் என்னும் உண்மையை நமக்கு நாமே உணர்த்திக்கொள்ள அந்த வாக்கியம் உதவும். ஆனால், இந்த வாக்கியத்தைச் சொல்பவர்களெல்லாம் அந்த உண்மையை உணர்ந்துதான் சொல்கிறார்களா அல்லது பழக்கதோஷத்தில் சொல்கிறார்களா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்தான். எனக்குத் தெரிந்து பழக்கத்தின் வேகத்தில்தான் பலர் சொல்கிறார்கள். குறிப்பாக, தங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்தில் வாக்களிக்க வேண்டுமென்றால் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லிவிடுவார்கள்!

  ஆனால், ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற சொற்றொடர் நமது பொய்யான சுயத்தை அழிக்கிறது. இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் சாத்தியம் என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறது. ‘நான் செய்வேன்’ என்ற அகந்தையை வேரறுக்கிறது. பரமஹம்சரின் வாழ்விலிருந்து அந்த உண்மையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

  ஒருமுறை கிரிஷ் கோஷ் என்ற சீடர், ‘சரி, நான் அதைச் செய்கிறேன்’ என்று சொன்னார். உடனே பரமஹம்சர், ‘அப்படியெல்லாம் அகந்தையுடன் பேசக் கூடாது. இறைவன் நாடினால், நான் செய்வேன் என்று சொல்ல வேண்டும்’ என்று திருத்தச் சொன்னார்! அதாவது, இன்ஷா அல்லாஹ் என்று சொல்லச் சொல்லியிருக்கிறார்! உண்மையான ஞானிகள் எதையுமே தாங்கள் செய்வதாக எண்ணுவதே இல்லை. எல்லாம் இறைவனின் செயல் என்பதை உணர்ந்துகொண்டவர்களாயிற்றே!

  ஞானிகளுடைய இன்னொரு குணம், எல்லாவற்றுக்கும் இறைவனையே பொறுப்புதாரர் ஆக்குவது. ஒருமுறை பரமஹம்சர் சொன்னார்: ‘ஆண்டவனிடம் வக்காலத்துக் கொடுத்துவிடு. நல்லவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் துன்பம் விளையாது. அவர் விரும்புவதைச் செய்யட்டும்’. முஸ்லிம்கள் இதையே அரபியில் ‘ஹஸ்புனல்லாஹு வ நி’மல் வகீல்’ என்று கூறுவார்கள். இறைவனே உனது வக்கீலாக இருக்கட்டும் என்று பொருள்!

  பொன்மொழிகள்

  பரமஹம்சரின் வாய்மொழிகள் அத்தனையுமே பொன்மொழிகள்தான். சத்தியத்தைத் தவிர வேறெதையுமே அவர் பேசியதில்லை. நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பொன்மொழிகளாலேயே ஒரு புத்தகம் போட்டுவிடலாம். என்றாலும் சில பொன்மொழிகளையாவது சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே உங்களுக்காக சில இங்கே:

  • வெண்ணெய்யை அடுப்பில் வைத்தால் அதிலுள்ள தண்ணீரெல்லாம் வற்றும்வரை அது படபடவென பொரிந்துகொண்டிருக்கும். எல்லாம் வற்றியவுடன் நிசப்தமாகிவிடும். இறையனுபவம் பெற்ற ஒருவன் மௌனமாகிவிடுவான்.

  இது எல்லா ஞானிகளுக்கும் பொருந்தும். ஆனால், சமுதாயத்துக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டிய கடமை கொடுக்கப்பட்ட ஞானிகளுக்குப் பொருந்தாது. உதாரணமாக, பரமஹம்சருக்கே இது பொருந்தாது. ஏனெனில், அவர் சில விவேகானந்தர்களை உருவாக்கவேண்டி இருந்தது. எனவே அவர் பேசினார்.

  • இதயக்கோயிலில் இறைவனைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால், முதலில் மனத்தைச் சுத்தமாக்கு. மனம் தூய்மை ஆகிவிட்டால், அந்தப் புனித ஆசனத்தில் இறைவன் வந்து அமர்வான்.

  இதுவும் மிகமுக்கியமான உபதேசமாகும். சூஃபித்துவத்தின் அடிப்படையே இதுதான். இதயத்தை சுத்தமாக்குவது. தூய்மையான இதயம்தான் இறைவனின் அர்ஷ் / இருக்கை என்று சூஃபிகள் உணர்த்தியுள்ளார்கள். ஆனால், ஆன்மிகத்தில் ‘இதயம்’ என்ற சொல் லப்டப் பேசும், ரத்தத்தை உடலுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும், (சிலருக்கு) ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருக்கும் உறுப்பு அல்ல. இதயம் கனிந்த, இதயப்பூர்வமாக என்றெல்லாம் சொல்கிறோமே அந்த இதயம்!

  • பசுவின் பாலானது அதன் உடல் முழுவதும் பரவிக் கிடந்தாலும், அதன் காம்புகளில் இருந்துதான் பாலைக் கறக்க முடியும். காதுகள், கொம்புகள் வழியாக எடுக்க முடியாது. அதேபோல, கடவுள் எங்குமிருந்தாலும், அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனித ஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார்.
  • புலியும் கடவுள்தான். அதற்காக அதைக் கட்டியணைத்துக்கொள்ள முடியாது. புலியிடமிருந்து ஒதுங்கிப் போ என்று சொல்பவர்களும் கடவுள்தானே!
  • மிருக உணவு பக்தனுக்கு ஏற்றதல்ல. அதே சமயம், ஒருவன் இறைவனை நேசித்தால் இறையருள் கிடைக்கும். காமினி காஞ்சனையில் இருக்கும் ஒருவன், அரிசியும் பாலும் மட்டுமே உண்டாலும் அவனுக்குக் கேடுதான். இறைவனை அடைய வேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும், அது கடவுளர்களின் உணவைப் போன்றதாகும்.

  பரமஹம்சர் நிறைய சொல்லியிருக்கிறார். என்றாலும் இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கலாம் என்று கருதுகிறேன்.

  • டாக்டர்களும் வைத்தியர்களும் தருகின்ற எதையும் என்னால் சாப்பிட முடிவதில்லை. அவர்கள் மக்களின் கஷ்டத்தைப் பணம் பண்ணுகிறார்கள். அவர்களின் பணம் ரத்தத்தால் தோய்ந்தது போலுள்ளது (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு பக்கம் 488). ஆஹா, எவ்வளவு உண்மை!
  1. ஸ்ரீ ரா மகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு
  2. The Gospel of Sri Ramakrishna

  இந்த இரண்டு நூல்களையும் படிப்பது ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அற்புதப் பயன்களைத் தரும். நிறைய விஷயங்களில் தெளிவைப்பெற அவை உதவும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் இவற்றை சிபாரிசு செய்கிறேன்.

   இன்னும் சோறு உண்டு…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai