Enable Javscript for better performance
9. ஊரறிந்த ஊப்ஸ்!- Dinamani

சுடச்சுட

  

  9. ஊரறிந்த ஊப்ஸ்!

  By ஜெ. ராம்கி  |   Published on : 11th June 2018 11:49 AM  |   அ+அ அ-   |    |  

  3

   

  ஊப்ஸ் பற்றி தெரியாத ஐ.டி. ஆசாமிகள் இருக்க முடியாது. சி++, பாஸ்கல் பிரபலமாக இருந்த காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட கான்செப்ட் என்றாலும், ஜாவா அறிமுகமான காலத்தில்தான் பல இடங்களில் புழக்கத்துக்கு வந்தது. பக்கம், பக்கமாக புரோகிராம் எழுதும் பழக்கத்தை விட்டொழித்து, புத்திசாலித்தனமாக எட்டே எட்டு வரிகளில் எழுதிவிட முடியும் என்பதை இதுதான் சாத்தியப்படுத்தியது. ஊப்ஸ் (Object Oriented Programming) என்பது ஒரு புரோகிராமிங் வடிவம். பின்னர் படிப்படியாக பல்வேறு இடங்களில் விஸ்தரிக்கப்பட்டது, டேட்டாபேஸ் உட்பட.

  ஊப்ஸ் என்பது ஆப்ஜெக்டை அடிப்படையாகக் கொண்டது. அதென்ன ஆப்ஜெக்ட்?  ஒரு வடிவம், பொருள் என்று சொல்லலாம். ஆப்ஜெக்ட் என்னும் வடிவத்துக்குள் என்னதான் இருக்கும்? இரண்டு முக்கியமான விஷயங்கள் இருந்தாக வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது ஆப்ஜெக்ட்! ஒன்று டேட்டா, இன்னொன்று மெத்தட்.

  மெத்தட் என்பது உள்ளிருக்கும் டேட்டாவை வெளியே எடுப்பதற்கான வழிமுறை. டேட்டா என்பது உள்ளீடாக இருக்கும் விஷயம். சரி, எதற்காக மெத்தட்? ஒரு உதாரணத்தை பார்ப்போம். பிளஸ் டூவில் தேர்ச்சிபெற்ற மாணவர்களது கணக்கில் எத்தனை மதிப்பெண், அறிவியலில் எத்தனை மதிப்பெண் என்பதை சேமித்தால் போதுமானது. மொத்த மதிப்பெண்கள் எத்தனை, கட் ஆப் எவ்வளவு என்பதையெல்லாம் தேவைப்படும்போது கணக்கிட்டுக்கொள்ளலாம். எப்படி கணக்கிடுவது என்பதைத்தான் மெத்தட் சொல்லப்போகிறது.

  எதற்காக ஆப்ஜெக்ட்? ரொம்ப சிம்பிள். ஈசியாக புரோகிராம் எழுதுவதற்குத்தான். ஒரு மாணவனின் பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டும் ஒரு ஆப்ஜெக்டாக வைத்துக்கொள்ளலாம். அவனது வங்கிக் கணக்கு விவரங்களை இன்னொரு ஆப்ஜெக்டாக வைத்துக்கொள்ளலாம். அகரம் டிரஸ்ட் சார்பாக, தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டால், கவலையில்லை. உடனே அமலுக்கு கொண்டுவந்துவிடலாம். பத்தாயிரம் ரூபாயை பத்து விநாடிகளில் சம்பந்தப்பட்ட மாணவரது வங்கிக்கணக்கில் சேர்த்துவிடலாம்.

  ஊப்ஸை பயன்படுத்தி கோட் எழுதுவது எளிது. எழுதியதை கையாள்வதும சுலபம். ஜாவா, சி++, பைத்தான், பிஎச்பி, ரூபி, பியர்ல், ஆப்ஜெக்ட் பாஸ்கல், டார்ட், ஸ்விப்ட், லிஸ்ப், ஸ்மால்டாக் என பெரும்பாலான புரோகிராமிங் மொழிகளில் ஊப்ஸ் கான்ஸெப்டை பயன்படுத்த முடியும். கிளாஸ் என்பது ஒரு ப்ளூ பிரிண்ட். கிளாஸை பிரதியெடுத்தால் கிடைப்பதுதான் ஆப்ஜெக்ட். இதுபற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். இப்போது டேட்டாபேஸ் சம்பந்தப்பட்ட ஊப்ஸ் விஷயங்களை மட்டும் முதலில் பார்க்கலாம்.

  ஒரு நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளம், பதவி உயர்வு, போனஸ், ஓய்வுக்கால நிதியுதவி, இன்சூரன்ஸ் இவையெல்லாம் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு குறுகிய நேரத்தில் செட்டில் செய்தாக வேண்டும். அதே நேரத்தில், அதை முற்றிலும் ரகசியமாகச் செய்தாக வேண்டும். பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் பெறும் சம்பளம் படு ரகசியமாக காக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றினாலும், சக ஊழியரின் சம்பளத்தை சரியாக தெரிந்துகொள்ளவே முடியாது.

  உறைபொதியாக்கம் என்று தூய தமிழில் சொல்லலாம். என்கேப்சுலேஷன் என்று பரவலாக புழக்கத்தில் உள்ளதையே நாமும் பயன்படுத்துவோம். டேட்டா செக்யூரிட்டியை உறுதி செய்ய பயன்படுவதுதான் என்கேப்சுலேஷன். என்கேப்சுலேஷன் என்பது ஆப்ஜெக்டில் உள்ள மெத்தட்டை அதன் தன்மைக்கு ஏற்றபடி வடிவமைப்பது. ஒரு டஜன் மெத்தட் இருந்தாலும் ஓரிரு மெத்தட் மட்டுமே அனைத்து டேட்டாவையும் பயன்படுத்தமுடியும். பிரைவேட் மெத்தட், சம்பந்தப்பட்ட கிளாஸ்-க்கு மட்டுமே பொருந்தும். வெளியிலிருந்து யாரும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாது. அதனால்தான் என்கேப்சுலேஷன் என்பதை டேட்டா ஹைடிங் என்பார்கள்.

  சரி, நாம் டேட்டா பேஸ் விஷயத்துக்கு திரும்ப வருவோம். ஊப்ஸ் பிரபலமானதால், அதை அடிப்படையாக வைத்து Object Oriented Data Base Management System (OODBMS) அறிமுகப்படுத்தப்பட்டது. நார்மலைசேஷன் செய்யாமல் ஆப்ஜெக்டை அப்படியோ ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம் என்றார்கள். OODBMS, ஆர்டிபிஎம்ஸ்ஸின் அடுத்த வாரிசாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப உலகில் படு தோல்வியை சந்தித்தது.

  (தொடரும்)   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai