Enable Javscript for better performance
5. தகவல் திரட்டு அல்ல, திருட்டு!- Dinamani

சுடச்சுட

  

   

  இணையத்தில் தகவல்கள் பகிரப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மைதான். இணையத்தில் விதிகள் ஏது? ஏதேனும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாலும், அதை நொறுக்குவதற்காகவே சிலர் வருவார்கள். நாமெல்லோரும் இணைய உலகின் அங்கத்தினர்களே… எவரையும் நம்முடைய கைப்பிடிக்குள், கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவர முடியாது. கட்டற்ற சுதந்திரம் என்பதுதான் இணையத்தின் முக்கியமான அம்சம். அதுதான் நிஜம்!

  இணையத்திலிருந்து தகவல்களை திரட்டுவது என்பது அன்றாட வாழ்க்கையின் முக்கியமான நடவடிக்கையாகவே மாறிவிட்டது. ரீசார்ஜா, ஓடு இணையத்துக்கு. டிரெயின் டிக்கெட்? பஸ் டிக்கெட்? பசிக்கிறதா? இணையத்துக்கு போய் இட்லி ஆர்டர் செய்கிறோம். சினிமா முதல் சமையல் குறிப்பு வரை எல்லாமே இணையத்தில்தான் கிடைக்கின்றன. இலவசமாகவே கிடைப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம்.

  தகவல்களைத் திரட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. இணையத்தில் நம்முடைய நடவடிக்கைகளை யாரோ ஒருவர் கண்காணிப்பதும், நம்முடைய அனுமதியின்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதும்தான் பிரச்னைக்குரிய விஷயமாகிறது. ஆனால், நல்ல விஷயங்களுக்கும் சாத்தியமுண்டு.

  உதாரணத்துக்கு நமக்கு ‘காலா’ பட டிக்கெட் வேண்டும். திரையரங்குகளுக்கு நேரில் போய், ஏறி இறங்க முடியாது. இணையத்தில் தேடலாம். கூகுளில் காலா டிக்கெட் என்று தட்டி, என்ட்டர் அடித்தால் ஏராளமான பக்கங்கள் கண்ணில் படும். ஒவ்வொரு பக்கமாக மேய்ந்தால், வலது புறத்தில் விளம்பரங்கள் மின்னுவதைப் பார்க்கலாம். விதவிதமான விளம்பரங்கள். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் படங்கள், அமேஸான் பிரைமில் கபாலி படம், இயக்குநர் ரஞ்சித்தின் பேட்டி, ஹ்யூமா குரெஷியின் கவர்ச்சிப்படம்...

  மேலோட்டமாகப் பார்த்தால் சம்பந்தம் இல்லாததாகத் தெரியும். ஆனால், இவையெல்லாமே காலாவோடு சம்பந்தப்பட்டவைதான். காலா படத்தில் பணியாற்றியவர்களை பற்றிய செய்திகள்… இதெல்லாம் நமக்கு இணையம் அளிக்கும் பரிந்துரைகள், கட்டளைகள் அல்ல. பிடித்திருந்தால் மேற்கொண்டு கிளிக் செய்து சம்பந்தப்பட்ட தளங்களுக்குச் சென்று பார்வையிடலாம். இல்லாவிட்டால், வந்த வேலையை மட்டும் பார்க்கலாம்.

  டிஜிட்டல் மார்க்கெட்டின் சின்ன உதாரணம் இது. கூகுளில் பஜ்ஜி மாவு தேடினால், சமையல் எண்ணெய் விளம்பரங்களும், காய்கறி விளம்பரங்களும் கண்ணில் படும். கூடவே பேலியோ, ஆரோக்கிய குறிப்புகள். இதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டின் பலம். பஜ்ஜி மாவு மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான புத்தகத்தையும் வாங்கவைப்பதுதான் திட்டம். இதுவொரு வியாபார யுக்தி. வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, அவர்களுக்கு விருப்பமான பொருட்களோடு இன்னும் சில பொருட்களையும் தலையில் கட்டிவிடுவது.

  யாருக்கு, எந்தெந்த பொருட்களில் விருப்பம்? அதைத் தெரிந்துகொள்வதுதான் சவாலான விஷயம். இங்கேதான் டேட்டா அனாலிடிக்ஸ் உதவுகிறது. யார், எப்போது, என்னென்ன பொருட்களை வாங்கினார்கள் என்பதை அலசி, ஆராய்ந்து எதெல்லாம் சந்தையில் நன்றாக விற்கிறது, எதெல்லாம் தேறாத கேஸ் என்பதை அலசுகிறார்கள். இந்தத் தகவல்களைத் திரட்டுவதற்கு ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதரவு தேவை.

  ‘இதை யாரும் தடுக்க முடியாது. ஒரு விஷயத்தை பற்றி நல்ல விதமாக அல்லது தவறானதாகச் செய்யப்படும் விளம்பரங்களை எங்களால் கண்காணிக்க முடியாது. ஆனால், தவறான தகவல் என்று தெரியவந்தால் அவற்றை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்கிறது ஃபேஸ்புக்.

  இங்கிலாந்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, அமெரிக்க தேர்தலில் மோசடி வேலைகள் செய்திருப்பதாக வெளியான செய்திகள்தான் சர்ச்சையை ஆரம்பித்து வைத்தன. எட்டு கோடி பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியோடு திரட்டியிருக்கிறார்கள், அதாவது திருடியிருக்கிறார்கள். 2016-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை வெற்றிபெறவைக்க இவையெல்லாம் உதவியதாகச் சொல்லப்படுகிறது.

  ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை அவர்களது ஒப்புதலின்றி திருடி, அதன்மூலமாக சம்பந்தப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்துகொண்டு, அவற்றையெல்லாம் டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அலெக்ஸாண்டர் கோகன் என்பவர் அறிமுகப்படுத்திய செயலி மூலம் கோடிக்கணக்கானவர்களின் பிரைவசி விஷயங்கள் சுருட்டப்பட்டன. அவையெல்லாம் தேர்தல்களில் மக்கள் மனதை மாற்றியமைக்க உதவி செய்திருக்கின்றன.

  இதையெல்லாம் எப்படி கண்காணிப்பது? ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களால் நீதி பரிபாலனம் செய்யும் இடமாக ஆக முடியுமா? தினமும், ஒவ்வொரு நொடிக்கு ஒருமுறை வெளியாகும் விளம்பரங்களைக் கண்காணிக்க முடியுமா? ஃபேஸ்புக் நிறுவனத்தில் சர்வ நிச்சயமாக அதைச் செய்ய முடியாது. எல்லோரும் பேசுவதற்கு ஃபேஸ்புக் இடமளிக்கிறதா? அனைவருக்கும் இடமளிக்கிறோம் என்று பதிலளித்தார் மார்க். அப்படியென்றால், எந்தத் தடையும் இல்லாமல் பேசுவதற்கு ஃபேஸ்புக் ஒரு பொதுத்தளத்தை கட்டி அமைத்திருக்கிறதா? தீவிரவாதம் பேசும் வாதங்களையும் அனுமதிக்கிறீர்களா என்று அடுத்தடுத்து கேள்விகள் வர ஆரம்பித்தன.

  தீவிரவாதம், வெறுப்புணர்வை தூண்டக்கூடிய விஷயங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை; பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, அச்சுறுத்தும் எந்தவொரு விஷயத்தையும் அனுமதிக்கமாட்டோம் என்றார் மார்க். அதை எப்படி நடைமுறைக்கு கொண்டுவருகிறார்கள் என்பதுதான் விவாதத்துக்குரிய விஷயம்.

  சாமானியர்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பணியில் சேர்க்கும்போதுகூட அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆகவே, ஊழியர்களின் அரசியல் ஈடுபாடு, எந்தெந்த கட்சிக்கு ஆதரவு என்பதெல்லாம் நிறுவனங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே, எதைச் செய்தாலும் சிக்கல்தான்.

  இந்தியத் தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அளித்த தகவல்களை, பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஃபேஸ்புக் மோசடி, இவ்வாண்டின் முக்கியமான நிகழ்வு. இன்னும் பல நிறுவனங்கள் வரிசையில் வரக்கூடும்!

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai