Enable Javscript for better performance
6. கோட் கொடுத்த கொடை!- Dinamani

சுடச்சுட

  
  chapter6pict3

   

  டேட்டாவை எப்படி கையாளுவது என்பதுதான் 1970வரை சவாலான விஷயமாக இருந்தது. டேட்டாவை சேகரிப்பது, சேமிப்பது, தேவைப்படுமபோது அவற்றை வெளியே எடுப்பது போன்ற அடிப்படை விஷயங்களுக்குக்கூட புரோகிராம் எழுதவேண்டி இருந்தது. ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், சேமித்துவைத்த அத்தனை டேட்டாவும் அவ்ளோதான்! ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே டேட்டாவை கையாளும்போதும் சிக்கல் எழுந்தது. Create, Read, Update, Delete என்னும் CRUD ஆபரேஷன் அத்தனை சுலபமான விஷயமில்லை.

  டேட்டாவை சேகரித்து வைத்துக்கொண்டாலும், அதை பராமரிப்பதும் மேம்படுததுவதும் முக்கியமான பணிகள். கிரெட் ஆபரேஷனை திறம்பட நடத்துவதென்பதுதான் டேட்டாபேஸ் குறித்த ஆய்வின் தொடக்கமாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒரு புரோகிராம். அவற்றை ஒவ்வொன்றாக மட்டுமே இயக்க முடிந்தது. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுததி, ஒரு சட்டகமாக்கி தரப்பட்டதுதான் DBMS என்னும் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்.

  ஒரு தெருவில் குடியிருக்கும் மக்களில் அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, முன்பெல்லாம் 40 பக்கத்துக்கு புரோகிராம் எழுதியாக வேண்டும். ஒவ்வொன்றுக்கும் புரோகிராம் எழுதி, அதை இயக்கி, ரிப்போர்ட் எடுப்பதற்கு அதிக காலம் தேவைப்பட்டது. அதற்குள் 20 பேருக்கு மருத்துவக் காப்பீடு கிடைத்திருக்கும். 4 பேர் பரலோகம் போய் சேர்ந்திருப்பார்கள்.

  எட்கர் கோட் (Edgar F. Codd) பற்றி பேசாமல், டேட்டாபேஸ் என்னும் அதிசய உலகத்தை கடந்துவிட முடியாது. தனி ஒருவராக பெரும் சாதனையை செய்தவர். ரிலேஷனல் டேட்டாபேஸ் என்னும் அற்புதத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர். அதன்மூலம் நவீன தொழில்நுட்பத்துக்கு முன்னுரை எழுதினார். கடந்த 40 ஆண்டுகால தொழில்நுட்ப வளர்ச்சியைத் தீர்மானித்தவர்.

  எட்கர் கோட்

  ஒருவர் எவ்வளவோ பெரிய சாதனைகளைச் செய்திருந்தாலும், ஏதாவது ஒரு சாதனைதான் பிரதானமாகப் பேசப்படும். மற்றதையெல்லாம் மக்கள் மறக்கடித்துவிடுவார்கள். இந்தியா மட்டுமல்ல, உலகளவில் பல நூற்றாண்டுகளாக நிலவும் சாபக்கேடு இது. லவாசியர் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர். உயிரியியல், கணிதத்திலும் கெட்டிக்காரர். மெட்ரிக் முறை என்னும் அளவீட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் என்பதெல்லாம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

  கோட், இன்னொரு லவாய்சியர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கணிதமும், வேதியியலும் படித்தவர். கம்ப்யூட்டர் கேம்ஸின் அடிப்படையான சி.ஏ. என்னும் செல்லுலார் ஆட்டோமேட்டான் அவரது முதல் கண்டுபிடிப்பு. டிஸ்கிரீட் கணிதத்தின் அடிப்படையை வைத்து அது உருவாக்கப்பட்டது. கணிதம், அறிவியல், உயிரியில், நுண்ணுயிரியல் போன்ற பல்துறை வித்தக அறிவுதான் இதை சாத்தியப்படுததியது. சி.ஏ., கம்ப்யூட்டர் கேம்ஸ் துறையில் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது.

  கோட், இரண்டாம் உலகப்போர் நேரத்தில் பிரிட்டிஷ் விமானப்படையில் பைலட்டாக பணிபுரிந்திருக்கிறார். உலகப்போர் முடிந்தபின்னர் அமெரிக்கா வந்தவர், ஐபிஎம் நிறுவனத்தில் புரோகிராமராக பணியில் சேர்ந்துகொண்டார். கணிணி அறிவியலில் பட்டம் பெற்றார். கணிதம், அறிவியல் மீதிருந்த ஆர்வம், கணிணி அறிவியல் துறையிலும் அவரை வழிநடத்தியது. கலிஃபோர்னியாவில் பணியாற்றியபோதுதான், டேட்டா அரேஞ்ச்மெண்ட் என்னும் தகவல்களைச் சீரமைப்பது பற்றிய கோட் ஆய்வுகள் மேற்கொண்டார். ரிலேஷனல் மாடல் பற்றியும், தகவல்களை சேகரித்துவைத்து, பரிமாறிக்கொள்ளும் தகவல் வங்கிகளைப் பற்றியும் பேசினார். ஆனால், அவர் பணியாற்றிய ஐபிஎம் நிறுவனம் இதில் ஆர்வம் காட்டவில்லை.

  ஐபிஎம் வாடிக்கையாளர்களுக்கு, கோட் மீது நம்பிக்கை இருந்தது. ஐபிஎம் நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்தார்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்காக, வேண்டாவெறுப்புடன் ஐபிஎம் ஒரு புதிய புராஜெக்டை ஆரம்பிக்கவேண்டி இருந்தது. சிஸ்டம் ஆர் என்று பெயரிடப்பட்ட அந்த புராஜெக்ட்டுக்கு கோட் ஆலோசகராக இருந்தார். ஆனால், யாரும் அவரது பேச்சை கேட்கவில்லை. ஐபிஎம் நிறுவனத்துக்கும் கோட்-க்கும் இடையே இருந்த இடைவெளியை மற்றவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள், தங்களுடைய இஷ்டத்துக்கு புராஜெக்ட்டை வழிநடத்தினார்கள். ஐபிஎம் நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை.

  கோட், ஆல்ஃபா என்னும் மொழியை அறிமுகப்படுத்தினார். ரிலேஷனர் டேட்டாபேஸ்-க்கு ஆதாரமான முதல் கணிணி மொழி இதுதான். ரிலேஷனல் கால்குலஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மொழி. ஆனால், கோட் கண்டுபிடிப்பான ஆல்பாவை ஐபிஎம் டீம் கண்டுகொள்ளவில்லை. வேறு ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இன்று உலகம் முழுவதும் மிகப்பிரபலமான டேட்டாபேஸ் அடிப்படை மொழியான ஸிகியூல்தான் அது. SEQUEL என்னும் டேட்டாபேஸ் மொழி பின்னர் மேம்படுத்தப்பட்டு எஸ்கியூல் (SQL) ஆனது. அதற்குப் பின்னர் ஆரக்கிள் நிறுவனத்திடம் அடைக்கலமானது.

  கோட், ஸிகியூல் மொழியில் சில மாற்றங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்தார். ஆல்ஃபாவை யாரும் பயன்படுத்தாவிட்டாலும், ஆல்ஃபாவில் இருந்த சில விஷயங்கள் ஸிகியூலில் இடம்பெற்றது என்னவோ உண்மைதான். ஸிகியூலைவிட ஆல்ஃபாவை ஐபிஎம் அங்கீகரித்து, உலகம் முழுவதும் கொண்டு சென்றிருந்தால், ஒருவேளை டேட்டாபேஸ் வளர்ச்சி இன்னும் துரிதமாகியிருக்கும். ஆல்ஃபா, ஆதரிப்போர் இல்லாமலே ஆகிவிட்டது.

  கோட் கவலைப்படவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரிலேஷனல் மாடல் பற்றிய தன்னுடைய முதல் ஆய்வை தூசி தட்டினார். A Relational Model of Data for Large Shared Data Banks என்று அந்த முதல் ஆய்வை தொடர்ந்தார். ஏராளமான ஆய்வுகளும், விவாதங்களும் நடந்தன. டேட்டாபேஸ் உலகின் முக்கியமான காலகட்டம் அது.

  1980-ல் கோட் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. ரிலேஷனல் அல்ஜீப்ராவை அடிப்படையாகக் கொண்டு, Query என்பதற்கான முதல் விதை விதைக்கப்பட்டது. ரிலேஷனல் டேட்டாபேஸ் தொழில்நுட்பம், கோட் விதியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான். கோட் விதி, அவரை ரிலேஷனல் டேட்டாபேஸின் தந்தை என்னும் புகழை பெற்றுத் தந்தது.

  இன்று நடுரோட்டில் நின்றுகொண்டு, நான் எங்கே இருக்கிறேன் என்று கூகிள் மேப்பிடம் கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பதையெல்லாம் கூகிள் மேப் தீர்மானிக்குமளவுக்கு தொழில்நுட்பம் உச்சம் பெற்றிருக்கிறது. ரிலேஷன் டேட்டாபேஸ் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதற்கு அடிப்படையாக அமைந்ததுதான் கோட் விதி!

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai