1. எது உண்மை?

1. எது உண்மை?

ஒன்றுபோலவே இருப்பது வேறு. ஒன்றாகவே இருப்பது வேறு. பொத்தாம் பொதுவாக நாம் வெண்மை என்று சொல்லிக்கொள்ளும் வெண்மைக்குள் நூற்றுக்கணக்கான வெண்மைகள் இருக்கின்றன.

‘‘மௌனம்தான் சிறந்த மொழி. குறிப்பால் உணர்த்துவதும், உணர்வுகளால் உரையாடிக்கொள்வதுமே முழுமையான தொடர்பு மொழி’’ என்றார் குரு.

‘‘அப்படியானால் மொழிகள் எதற்கு குருவே?’’ என்றான் சிஷ்யன்.

‘‘அவை மனிதர்களுக்கு பொய் பேசக் கற்றுக்கொடுக்கின்றன’’ என்றார் குரு.

ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை சிஷ்யனுக்கு. அதை அவன் பார்வையிலேயே புரிந்துகொண்டார் குரு.

‘‘வான் நிலா என்ன நிறம்?’’ என்று கேட்டார்.

‘‘வெண்மை’’ என்றான் சிஷ்யன்.

‘‘நீ பருகும் பால்?’’

‘‘வெண்மை’’

‘‘உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிர்?’’

‘‘வெண்மை’’

‘‘உன் பற்கள்?

‘‘வெண்மை’’

"சுவற்றில் அடிக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பு?’’

‘‘வெண்மை’’

‘‘இரவு உணவுக்காக நீ பொடியாக்கி வைத்திருக்கும் தானிய மாவு?’’

‘‘வெண்மை’’

குரு, புன்னகைத்துக்கொண்டு பேசலானார். ‘‘எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறாய் நீ?’’.

பதறிவிட்டான் சிஷ்யன். ‘‘அய்யோ குருவே.. நானா? பொய்யா?!’’

‘‘ஆம். நீ வெண்மை எனச் சொன்ன அத்தனையும் ஒரே நிறத்திலா இருக்கின்றன? அனைத்தையும் அருகருகே வைத்துக் கற்பனை செய்துகொண்டு, அவையெல்லாம் ஒரே நிறத்தில்தான் இருக்கின்றனவா என்று கவனமாகப் பார்த்துச் சொல்’’ என்றார் குரு.

கண்களை மூடினான் சிஷ்யன். மனக்கண்களால் யோசித்தான். கண் திறந்தான். பேசினான். ‘‘ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அனைத்துமே வெண்மைதான். ஆனால், ஒன்றின் வெண்மைக்கும் இன்னொன்றின் வெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது’’.

‘‘அதைத்தான் நான் சொன்னேன். நீ பொய் சொல்கிறாய் என்று" என்றார் குரு.

தலை கவிழ்ந்தான் சிஷ்யன்.

‘‘ஒன்றுபோலவே இருப்பது வேறு. ஒன்றாகவே இருப்பது வேறு. பொத்தாம் பொதுவாக நாம் வெண்மை என்று சொல்லிக்கொள்ளும் வெண்மைக்குள் நூற்றுக்கணக்கான வெண்மைகள் இருக்கின்றன. கருப்பு கலந்த வெண்மை, சிவப்பு கலந்த வெண்மை, காவி கலந்த வெண்மை, நீலம் கலந்த வெண்மை, இப்படிப் பல வண்ணங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயரிட்டுக் குறிப்பிடாமல், எல்லாவற்றையும் வெண்மை என்றே தவறாகக் குறிப்பிடுகிறோம். மொழி இப்படித்தான் பெரும்பாலும் பொய் சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. உண்மையை முழுமையாகக் கடத்துவதில்லை. உணர்வுகளால் பேசும்போதுதான் மனிதன் உண்மையாக இருக்க முடிகிறது’’.

குரு சொன்னதை ஒப்புக்கொண்டதன் வெளிப்பாடாக, மறு வார்த்தை பேசாமல் அவரது கால்களில் விழுந்து வணங்கினான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com