50. தேனாமிர்தம்

தேனை எந்தப் பொருளுடன் சேர்த்தாலும் அது நல்ல பலனையே கொடுக்கிறது. எந்த நிலையிலும் தன் நற்குணத்தை மாற்றிக்கொள்ளாத தேனைத்தான் நல்ல நட்புக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்.
50. தேனாமிர்தம்

நட்பு குறித்து பாடம் கற்பித்துக்கொண்டிருந்தார் குரு. கவனம் சிதறாமல் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

கூடும் நட்பு, கூடா நட்பு பற்றி விளக்கமாகப் பேசினார் குரு.

தொடர்ந்து பேசியதால் தொண்டையைச் செறுமிக்கொண்ட குருவுக்கு தண்ணீர் எடுத்துவந்து குடிக்கக் கொடுத்தான் சிஷ்யன். அவர் அதைப் பருகியபின் தன் கேள்வியை முன் வைத்தான்.

‘‘நல்ல நட்புக்கு நாம் பருகும் தண்ணீரை உதாரணமாகச் சொல்லலாமா குருவே?’’ என்று கேட்டான்.

‘‘எதனால் இப்படிச் சொல்கிறாய்?’’ - சிஷ்யனின் சிந்தனையைக் கிளறிவிட்டார் குரு.

‘‘உடுக்கை இழந்தவனின் கைபோல கருதப்படும் நல்ல நட்பினை, தவித்த வாய்க்குக் கொடுக்கும் தண்ணீராகவும் எடுத்துக்கொள்ளலாம்தானே?’’ என்று பதில் சொன்னான் சிஷ்யன்.

‘‘பாத்திரத்துக்குப் பாத்திரம் தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் தண்ணீரை கூடும் நட்புக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நல்ல நண்பர்களுடன் சேரும்போது நல்லவனாகவும், கெட்ட நண்பர்களிடம் சேரும்போது கெட்டவனாகவும் மாறிக்கொள்ளும் பச்சோந்திக் குணம் அது’’ என்றார் குரு.

தொடர்ந்தார்.. ‘‘மனிதனுக்கு இந்த உலகத்திலேயே கிடைக்கும் தேவாமிர்தம் போன்றது தேன். சிறிய அளவில் தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். ரத்தத்தில் உள்ள தாதுச்சத்தின் அளவு உயரும். வெறும் தேனில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும். குளிர்ந்த நீரில் தேன் சேர்த்துப் பருகினால் தீராத தாகமும் தீரும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகினால் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு நீங்கி, எடை குறையும். பாலில் தேன் கலந்து பருகினால் வயிற்றுப் புண் தீரும். வெதுவெதுப்பான நீரில் தேனையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால் செரிமானம் அதிகரிக்கும். தேனுடன் இஞ்சிச்சாறு சேர்த்துப் பருகினால் ரத்தம் வெகு விரைவாக சுத்தியடையும். தேனில் ஊறவைத்த பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். வெந்நீருடன் தேனையும் மிளகையும் கலந்து பருகினால் ஆஸ்துமா உட்பட சுவாசக் கோளாறுகள் குணமாகும்..’’.

பிரமிப்போடு கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் தேனின் சிறப்புகளை. அதனை எந்தப் பொருளுடன் சேர்த்தாலும் அது நல்ல பலனையே கொடுக்கிறது. எந்த நிலையிலும் தன் நற்குணத்தை மாற்றிக்கொள்ளாத தேனைத்தான் நல்ல நட்புக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்’’ என்றார் குரு.

பலமாகத் தலையசைத்தான் சிஷ்யன்.

‘‘அப்படிப்பட்ட நல்ல நண்பனை அடையாளம் கண்டுகொண்டால், எந்தக் காரணம்கொண்டும் அவனை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கலப்பதுவரைதான் தேன் மருந்தாகப் பயன்படும். நன்கு கொதித்த நீரில் கலந்தாலோ, அல்லது தேனைக் கொதிக்கவைத்தாலோ.. அதன் நற்பண்புகள் தொலைந்துபோகும். நஞ்சாக மாறும் அபாயமும் ஏற்படலாம்!’’ என்று தேனின் சிறப்பையும், நல்ல நட்பின் முக்கியத்துவத்தையும் ஒன்றாகக் கூறி முடித்தார் குருநாதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com