சுடச்சுட

  

  33. மறக்க முடியாத யுவராஜ் சிங்கின் அதிரடி ஆறு சிக்ஸர்களும், ஜோஸ் பட்லரின் எழுச்சியும்!

  By ராம் முரளி.  |   Published on : 11th January 2019 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Jos-Butler-and-Partner-have-got-married

   

  ‘ஒரு திரைப்பட நடிகர் தனது கதாப்பாத்திரத்திற்கு உரிய நியாயத்தை முழுமையாக அந்த கதாப்பாத்திரத்துடன் தன்னை பிணைத்துக் கொள்வதன் வாயிலாக சேர்ப்பிக்கிறார். அது போல, மைதான பால்கனியில் நாம் அமர்ந்திருக்கும் போது களத்தில் நிலவுகின்ற சூழலை அவதானித்து, நமது செயல்பாடு அன்றைய போட்டியில் எவ்விதமாக அமைய வேண்டுமென முன் திட்டமிடுகிறோம். பின்னர் களத்தில் இறங்கும்போது அதனை செயல்படுத்துவது மிகுந்த சிரமமான காரியமாக இருந்தாலும், அந்தக் கதாப்பாத்திரத்தை அடையவதற்குரிய வழிவகைகளை நாம் கண்டடைந்தாக வேண்டும். முழுவதுமாக முன்திட்டமிட்ட ஒரு உருவாக களத்தில் நாம் செயலாற்ற வேண்டும்’ – ஜோஸ் பட்லர்

  செப்டம்பர் 19, 2007 – இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத தினம். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த சர்வதேச அளவிலான இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில், இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் அன்றைய தினத்தில் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக்கும், கவுதம் கம்பீரும் நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தார்கள், இருவருமே ஆளுக்கொரு அரை சதத்தை குவித்து தமது பங்களிப்பை வெகு சிறப்பாக பூர்த்தி செய்துவிட்டு பெவிலியன் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், இறுதி சில ஓவர்களில் ரன்களை வேகமாக குவித்து இந்திய அணியை மேலும் வலுவான இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லும் பொறுப்பு மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் கைகளில் இருந்தது.

  ஒருபுறம் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களான பிலின்டாப் மற்றும் ஸ்டீவ் பிராட் மிகுந்த ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட்டு வந்தனர். முன்னதாக, எப்போதும் களத்தில் மிக அதிக சீற்றத்துடன் காணப்படும் பிலின்டாப், இந்திய பேட்ஸ்மேன்களை சீண்டியபடியே இருந்தார். 18-வது ஓவரை வீசிய பிலின்டாப், அந்த ஓவரின் போது மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரையுமே வம்பிழுக்க  தவறவில்லை. அந்த ஓவரின் முடிவில், இந்திய அணி 159 ரன்களை சேர்த்திருந்தது. பிலின்டாப்பின் செய்கைகளை இறுக்கமான முகத்துடன் யுவராஜ் சிங் அப்போது கடந்திருந்தார்.

  எனினும், ஸ்டீவ் பிராட் வீசிய 19-வது ஓவரில் வெளிப்பட்ட யுவராஜ் சிங்கின் ஆட்டம் பிலின்டாப்பால் அவர் அடைந்திருந்த கொந்தளிப்பு மிகுந்த மனோநிலையின் ஒட்டுமொத்தமான எதிர்வினையாக அமைந்திருந்தது. பிராட் வீசிய அந்த ஓவரின் ஒவ்வொரு பந்தையும், ஒவ்வொரு திசையில் சிக்ஸர்களாக யுவராஜ் சிங் பறக்கவிட்டார். அவரது சீற்றம் மெல்ல மெல்ல விஸ்தாரித்தபடியே இருந்ததே தவிர, குன்றியிருக்கவில்லை. வெறி பிடித்தாற்போல, அந்த ஓவரின் அத்தனை பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசி நொறுக்கினார் யுவராஜ் சிங். கண்களில் கண்ணீர் உருள, இருள் படிந்த முகத்துடன் பிராட் அந்த ஓவரை நிவர்த்தி செய்துவிட்டு குனிந்த தலை நிமிராமல் நகர்ந்துச் சென்றார். இத்தனைக்கும் பிராட் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்.

  சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக யுவராஜ் சிங்கின் 36 ரன்கள் நிலை பெற்றுவிட்டன. அன்றைய போட்டியில், 18-வது ஓவரின் முடிவில் 159 ரன்களில் இருந்த இந்திய அணி அடுத்த இரண்டே ஓவர்களில் 218 ரன்களை தொட்டிருந்தது. வெறும் 12 பந்துகளில் தனது அரை சதத்தை யுவராஜ் சிங் கடந்திருந்தார். உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்களில் மனங்களில் யுவராஜ் சிங் அழிவியலாத தனது முத்திரை இன்னிங்ஸின் மூலமாக என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறார்.

  கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசப்படுவதும் இது முதல் முறை அல்ல. 1968-ல் இந்த சாதனை முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. முதல்தர போட்டியான அதில், கிளாபோர்கன் அணியை எதிர்த்து விளையாடிய நாட்டிங்கம்ஷர் அணி வீரரான சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ்தான் இந்த சாதனையை முதலில் நிகழ்த்தியவர். இந்திய அணி சார்பாக ரவி சாஸ்திரி ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். போலவே, சர்வதேச ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிப்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். முதல்தர போட்டிகளில், அலெக்ஸ் ஹெய்லி, மிஸ்பாக் – உல் – ஹக், ரோஸ் வொய்ட்லி முதலியோரும் இந்த இமாலய இலக்கங்களை அடைந்திருக்கிறார்கள். ஆனால், இருபது ஓவர் வகைமையில் இந்த சாதனையை முதல் முதலாக நிகழ்த்தியவர் யுவராஜ் சிங்தான். அவருக்கு அடுத்ததாக, சர்வதேச அளவிலான இருபது ஓவர் போட்டிகளில், ஒரு ஓவரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருப்பது பட்லர் விளாசிய 32 ரன்கள்.

  2012 செப்டம்பரில் நடைபெற்ற அப்போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நிகழ்ந்தது. அதில் மூன்றாவது இருபது ஓவர் போட்டியில்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. முன்னதாக மழையின் காரணமாக ஒவ்வொரு அணியும் வெறும் 11 ஓவர்கள் மட்டுமே விளையாட அனுமதிப்பட்டிருந்தார்கள். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்த இங்கிலாந்து அணியின் கடைசி ஒருசில ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் களம்புகுந்த பட்லர் தனக்கெதிராக வீசப்படுகின்ற எந்தவொரு தவறவிட தயாராக இருக்கவில்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பர்னல் வீசிய 10 ஓவர் மைதானம் முழுக்க சிதறி தெறித்தது. பட்லர் தனது உறுதியான ஷாட்டுகளின் மூலமாக ஒவ்வொரு பந்துகளையும் விளாசிக் கொண்டிருந்தார். மூன்று சிக்ஸர்கள் உட்பட அந்தவொரு பட்லர் சேர்ப்பித்திருந்தது மொத்தமாக 32 ரன்களை.

  பட்லரின் இத்தகைய அதிரடியான ஆட்டம்தான் வெகு குறைந்த ஓவர்களை கொண்டிருந்த அப்போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை அடை காரணமாக அமைந்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியை வென்றெடுக்கவும், பட்லரின் பங்களிப்பே பிரதான காரணமாக அமைந்தது. முடிவில் இந்திய அணியின் நம்பிக்கைகளில் ஒருவராக முன்காலங்களில் திகழ்ந்த யுவராஜ் சிங்குக்கு அடுத்த இடத்தில், இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் குவிக்கப்படுகின்ற இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக பட்லரினுடையது நிலைத்திருக்கிறது.

  தொடர்ச்சியான குறிப்பிட்டு சொல்லும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவும், இங்கிலாந்து அணிக்கு எப்போதும் தன்னால் இயன்ற வகையில் சிறப்பாக பங்களிப்பை வழங்கவும் தான் விரும்புவதாக பட்லர் குறிப்பிடுகிறார். ‘தொடர்ச்சியாக நன்கு விளையாடுவதுதான் முக்கியமானது. இதனை அடைய நான் மிகச் சாதாரண செயல்களைத்தான் பின்பற்றி வருகிறேன். எனது உணவு முறையை கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்து வருகிறேன். தொடர்ச்சியாக பயிற்சிகளில் எனது நேரத்தை செலவிடுகிறேன். அதோடு, எனது மனத்தை ஒருமுகப்படுத்தவும், அதனை எவ்வித சிதறல்களும் இல்லாமல், கூர்மையாக கையாளவும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்’.

  ஒரு விளையாட்டு வீரருக்கு அவரது உடல் தகுதி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த அளவிற்கு ஒரு விளையாட்டாளர் தனது உடலின் உறுதிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அதிக அக்கறை செலுத்துகின்றாரோ அந்த அளவுக்கு அவர்களது பங்களிப்பும், பன்மடங்காக பரிணமித்தபடியே இருக்கும். விராட் கோலியில் இருந்து, ஏபி டிவில்லியர்ஸ், மார்ட்டின் கப்டில், மாக்ஸ்வல், பொல்லார்ட் என உலகின் பல அதிரடி ஆட்டக்காரர்களும், தங்களது உடல் கட்டுமானத்தின் மீது வெகுவான கவனத்தை கொண்டிருப்பவர்கள்தான். பட்லர் பொதுவாக, தனது இன்னிங்க்ஸை துவங்குவதற்கு முன்னதாக தேன், முட்டை, வாழை முதலிய சத்து மிகுந்த சீரான உணவு முறையை கடைப்பிடிப்பதே வழக்கம். களத்தில் சோர்வுறாமல், நிலைத்து நின்று விளையாடுவதற்கான ஊட்டச்சத்தை இந்த உணவு வகைகளே அவருக்கு வழங்குகின்றன. அதே போல, ஒரு போட்டித் துவங்குவதற்கு முந்தைய தினத்தில் இருந்து உணவு கட்டுப்பாட்டை மிக கறாராக கடைப்பிடிப்பவராக பட்லர் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு மிகுந்த செயலூக்கம் அளிக்கின்ற அவரது ஆக்ரோஷமான ஆட்ட வெளிப்பாட்டிற்கு, இந்த உணவு கட்டுபாடும் ஒரு முக்கிய காரணமென்று பட்லர் குறிப்பிடுகிறார்.

  கிரிக்கெட் விளையாட்டின் மிகத் தீவிரமான ஆட்டக்காரர்களில் ஒருவராக அறியப்படுகின்ற பட்லரின் மற்றைய உற்சாகமும், குதூகலமும் நிரம்பிய முகத்தை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவர் பதிவேற்றுகின்ற புகைப்படங்களின் மூலமாகவே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அதுவும், அவரது நீண்ட கால தோழியும், தற்போதைய மனைவியுமான லூயிஸுடன் இணைத்திருக்கின்ற சூழல்களில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் நாம் காண்பது காதலின் போதைமிகு பீறிடல்களில் திளைத்திருக்கின்ற பட்லரை.

  2017-ம் வருடத்தில் அக்டோபர் 21-ம் தேதி பட்லருக்கும் லூயிஸுக்கும் திருமணம் நிகழ்ந்தது. அதுவரையிலும் நல்லதொரு தோழியாக இருந்து கொண்டிருந்த லூயிஸ், மிஸஸ் பட்லராக அன்றைய கணத்தில் இருந்து புதிய வாழ்வில் பட்லருடன் இணைந்து விட்டாள். இருவரும் வெவ்வேறு நாடுகளுக்கு சந்தர்ப்பம் வாய்திடும் போதெல்லாம் பயணம் புரிவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக, கிரிக்கெட் நிமித்தமாக பல நாடுகளுக்கு பட்லர் பயணிக்கையில் உடன் லூயிஸும் சேர்ந்து கொள்ளும் வழக்கமிருக்கிறது. ‘புதிய நிலவெளிகளை எனது மனைவி லூயிஸுடன் இணைந்து அனுபவம் கொள்கிறேன்’ என்று அவ்வப்போது புதிது புதிதான புகைப்படங்களை பதிவிடுவது அவரது வழக்கமாக இருக்கிறது.

  முன்னொரு காலத்தில், கிரிக்கெட் விளையாட்டின் மீதான தீவிர பற்றினால் சரியாக விளையாட முடியாத சூழல்களில் தனித்து அமர்ந்து அழுதுவிடும் இயல்பை கொண்டிருந்த பட்லர் இப்போது தனது ஒட்டுமொத்த வாழ்க்கையின் பிரதிமையாக லூயிஸை கருதுகிறார். அவரது நிறைவும், குறைவுமான பல ஆட்டச் சூழல்களில், பட்லரை அரவணைத்து மிகுதியான நம்பிக்கையை வளர்ப்பவராக லூயிஸ் திகழ்கிறார். கேளிக்கை உணர்வுமிக்க, நிறைவான மகிழ்ச்சிகரமான தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

  தனிப்பட்ட வாழ்க்கையிலும், கிரிக்கெட் வாழ்க்கையிலும் இனி வரும் காலங்கள்தான் பட்லருக்கு அதிக பொறுப்புகளை கோருகின்றவையாக இருக்குமென்றாலும், தற்போதே வாழ்வனுபவங்கள் சார்ந்து ஆழமான புரிதல்களை கொண்டிருக்கும் பட்லர் எந்தவொரு தருணத்தையும் சிறப்புற கையாளுவார் என்பதில் சந்தேகமேயில்லை. இங்கிலாந்து அணி ரசிகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலான ரசிகர்களும் அவரது தொடர்ச்சியான ஒளிரும் இன்னிங்க்ஸ்களை எப்போதும் கொண்டாடத் தயாராகவே இருக்கிறார்கள். பட்லரும் தனது அசாத்திய திறன் மற்றும் நுண்ணறிவுடன் மீண்டும் மீண்டும் கிரிக்கெட் சகாப்தத்தில் பல வான வேடிக்கைகளை நிகழ்த்துவார் என்பதில் எந்தவொரு மாறுபட்ட கருத்தும் இல்லை. ஏனெனில் ‘சுயநம்பிக்கையொன்றே என்னை முன் செலுத்திக் கொண்டிருக்கிறது’ என்று சொல்லுகிறவர் அவர்.

  (சிக்ஸர் பறக்கும்…)   

   

   

    

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai