Enable Javscript for better performance
13. கஜா!- Dinamani

சுடச்சுட

  
  jews_-_sivasami

   

  ‘‘சிவசாமி! இன்னிக்கு, கிருபாசங்கரி தெரு மாதவன் வாந்தார்டா. நீ அப்போ கடைக்குப் போயிருந்தே. ரெண்டு நாளா அவருக்கு ஜலதோஷமாம். மெட்ராஸ் பாஷையில் சொல்லணும்னா ‘ஜல்ப்பு’. இருமல் செருமல் எல்லாம் சேர்ந்துண்டு ஒரே அவஸ்தைன்னார்’.

  ‘அவரை சங்கீதக் கச்சேரிக்குப் போகச் சொல்றதானே அண்ணா. இந்த மாதிரி ஆட்கள்தான் வந்து உக்காந்து பாட்டைக் கேக்கவிடாம கழுத்தை அறுத்திண்டு இருப்பாங்க. அண்ணா, என்னோட மாமா ஒருத்தர் நன்னிலத்திலே இருக்கார். காருக்கு டீஸல் விடற மாதிரி, அப்பப்போ தொண்டைக்குள்ள Cough syrup-ஐ பாட்டில் பாட்டிலா உள்ளே போடுவார். ‘அப்பதாண்டா என் வண்டி போகும்’னு சொல்வார். சில சமயங்களில், அதை பிரெட் டோஸ்ட்டின் மேலே கெட்சப்பா தடவிண்டு சாப்பிடுவார். கையில் சர்க்கரையை எடுத்திண்டு, அதில் நாலஞ்சு சொட்டு நீலகிரித் தைலத்தை விட்டு, பெருமாள் கோவிலில் பட்டர் கொடுக்கும் தீர்த்தத்தை முழுங்கிற மாதிரி ஒரே வாயிலே முழுங்கிடுவார். வாரத்துக்கு ஒரு தடவை, கொதிக்கிற தண்ணியிலே ஒரு ஸ்பூன் விக்ஸை போட்டு, ஹார்லிக்ஸா கலக்கிவிட்டு, துணியால் போர்த்திண்டு ஆவி பிடிப்பார். இவ்வளவு முஸ்தீபுகள் செஞ்சும், ‘கண்ணனை நினைக்காத நாளில்லையே’ங்கிற மாதிரி, அவர் மூக்கை உறிஞ்சாத நாளே இல்லைன்னு சொல்லலாம். கல்யாணம் கார்த்திகைக்குப் போனால், தாலி கட்டும் நேரத்தில், அவரை மேளக்காரர் பக்கத்தில் உட்கார வெச்சிடுவாங்க. ‘சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் போனா, இவருடைய கிரகதோஷங்கள் நீங்கினாலும் நீங்கலாம். ஆனா ஜலதோஷம் போகாது’ன்னு கேலி பண்ணறதுண்டு. அந்தக் காலத்திலே தவம் பண்ணிண்டிருந்த ரிஷிகள் நடுநடுவே தும்முவார்களான்னு தெரியலே. ஒரு தபஸ்வியான ராட்சஸனுக்கு, சிவபெருமான் எக்குத் தப்பா வரம் கொடுத்தா, அதைப் பலிக்காமப் பண்ண நந்திகேஸ்வரர் ‘அச்சு’னு ஒத்தைத் தும்மல் போடுவாரா? இதையெல்லாம் ஆராயணும்ணா’.

  ‘சிவசாமி, என்ன ஆச்சுடா உனக்கு? ஜலதோஷத்தப் பத்தி ஏதோ BLOG எழுதறா மாதிரி பொளந்து கட்டறே? அதை விடுடா? கஜாவைப் பத்தி பேசுடா. கஜா வருவாரா? மாட்டாரா?’

  ‘அண்ணா! அவர் வருவார்னா, வரமாட்டார். வரமாட்டார்னா வருவார்’.

  ‘சிவசாமி, முன்னெல்லாம் உறவுக்காரங்க முன்னே பின்னே தகவல் குடுக்காமத்தான் வந்திறங்குவாங்க. கிச்சாமின்னு என்னோட உறவுக்கார் ஒருத்தர், ‘டேய் பஞ்சாமி, உன்னைப் பாக்கணும்னு தோணித்து, அதான் கிளம்பி வந்துட்டேன்னு, மனைவி மக்களோட புயல் மாதிரி வந்து இறங்கி, நாளன்னிக்கு உங்க ஊர்லே கருட சேவையாமே, தரிசனம் பண்ணிட்டுப் போறேன்டா’ன்னு டேரா போட்டுட்டு, அப்புறம் கருட சேவையும் தாண்டி, சாத்துமறை, அது இதுன்னு சொல்லி, ஒருவழியா அரை மனசோட கிளம்புவார். அது மாதிரிதான் புயல்களும் வரும். அதுவும், நாகப்பட்டினத்து மேலேதான் அதுக்கு ப்ரீதி. ஆனா, எல்லாரும் அதுமாதிரி இல்லே. சிவராமன்னு ஒருத்தர், பக்கா ஜென்டில்மேன். ஒரு வாரம் முன்னோலே லெட்டர் போட்டுடுவார். குறிப்பிட்ட நாளைச் சொல்லி, அன்னிக்கு மூன்று பேரா வந்தா தங்கிட்டுப் போக வசதியான்னு கேட்டுட்டு, இரண்டு நாளைக்கு முன்னே தந்தியும் அடிச்சி உறுதிப் படுத்திக்குவார். ஆனா, என்ன செய்வார் சொல்லு பார்ப்போம்?’

  ‘வரமாட்டாரா அண்ணா?’

  ‘சரியாச் சொன்னடா. வரமாட்டார். TRIP CANCELLED-னு எக்ஸ்பிரஸ் தந்தி கொடுத்திடுவார். இப்போ வர, வராதிருக்கிற புயல் எல்லாம் அப்படித்தானே? அது சரி, கார்த்தால வந்த மாதவனுக்கு என்ன கவலைன்னு உனக்குத் தெரியுமா?’

  ‘தெரியாது அண்ணா?’

  ‘ஆமாம், நான் சொன்னாத்தானே தெரியும்? அவரோட பேரனுக்கு நவம்பர் பதினஞ்சாம் தேதி மொதப் பொறந்தநாளாம். காது குத்தப் போறதாம். அதுக்காக, அமெரிக்காலேருந்து பொண்ணு, மாப்பிள்ளை, பேரன் எல்லாம் வந்திருக்காளாம். வீட்டு மாடியிலே ஷாமியானா எல்லாம் போட்டு மேளதாளத்தோட கிராண்டா பண்ணப் போறதாம். அன்னிக்குள்ள என்னோட மூக்கடைப்பு போயிடணும்னு சொல்லி மருந்து கேட்டார். சொன்னேன். அத்தோட, கஜா வருமா வராதான்னு ஜோஸ்யம் சொல்லச் சொன்னார். நான் சிவசாமிடா. ரமணன் இல்லியே..’

  ‘அண்ணா, ரமணன் எல்லாம்தான் ரிடையர் ஆயாச்சே. வானிலை அறிக்கையை கிண்டல் பண்ணி, பஞ்ச்சிலே ஒரு ஜோக் பார்த்தேன்’.

  ‘பஞ்ச்சா? அந்தப் பத்திரிகை எப்பவோ நின்னுபோச்சு இல்லே?’

  ‘பழைய பஞ்ச் அண்ணா. அதுல, ரேடியோவிலே செய்தி அறிவிப்பாளர், அடுத்ததா வானிலை அறிக்கைன்னு சொல்லிட்டு, பக்கத்திலே திறந்து இருக்கிற ஜன்னல் வழியா கையை விட்டுப் பார்த்துட்டு, இன்னும் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்னு நனைந்த கையைத் துடைச்சிண்டே சொல்வார்’.

  ‘சிவசாமி, நீ நம்ம கஜாக்கு வாடா. வீட்டில மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிரெட், அரிசி, புளி, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, ரவை, சேமியா, மேகி எல்லாம் இருக்கோல்லியோ?’

  ‘வேணது இருக்கு அண்ணா. போன புயல் ரெட் அலர்ட்டின்போதே வாங்கினது’.

  *

  அன்று சாயந்திரம் அயோத்யா மண்டபம் பக்கத்திலே பஞ்சாமியைப் பார்த்த மாதவன், மூன்று முறை தும்மல்களை ஒத்தைப்படையா போட்டு, தன்னுடைய உபாதை குறையவில்லை என்று குறிப்பால் உணர்த்தினார்.

  ‘வேற மருந்து வேணா எழுதித் தரேளா?’ என்று கேட்டு, கோட்டாவில் இருந்த மீதி நான்கு தும்மல்களையும் போட்டு, ஆரிய கௌடா சாலையையே அதிரவைத்தார்.

  ‘வேணாம். நான் குடுத்ததே போறும், சரியாயிடும்’ என்று பஞ்சாமி கழண்டுகொண்டார். ஆரிய கௌடா சாலையில் நடப்பது என்றால், அவருக்கு சிம்ம சொப்பனம். ‘சாமி, பூ வாங்கிண்டு போ சாமி. ஜாதி முல்லைன்னு’ சொன்ன பூக்காரி பக்கம் திரும்பாமல் நடையைக் கட்டினார். ஜலதோஷத்தைப் பத்திப் பேசின மாதவன், கஜாவைப் பற்றி ஏன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘ஐய! சாமி. பூ வாங்கிணு போ சாமி. முல்லப் பூ, மல்லிப் பூ, ஜாதி’ங்கிற’ பூக்காரியின் மறு ஒலிபரப்பு அவர் காதில் விழவில்லை.

  *

  கால்களை சற்றே அகலப் பரப்பி, வீட்டு ஹாலில் சென்டர் பண்ணி நின்றுகொண்டு, பஞ்சாமியின் எட்டு முழ மயில் கண் வேஷ்டிகளை சிவசாமி நீட்டாக மடித்துக்கொண்டிருந்தான்.

  ‘அடேய் சிவசாமி. வழியிலே மாதவனைப் பாத்தேன்’.

  ‘சந்தோஷம் அண்ணா’.

  ‘இதிலே என்னடா சந்தோஷம் வந்துடப் போறது’.

  ‘அப்படி இல்லே அண்ணா. மாதவன் சார் கொஞ்சம் உசந்த சரக்கு. அப்படிப்பட்ட மனுஷாள் எப்பவுமே ஒரு திருப்பதியோட, சந்தோஷத்தோட இருப்பாங்க. அல்பங்களெல்லாம் எப்பவுமே ஒரு அதிருப்தியோட இருப்பாங்க’.

  ‘சிவசாமி, இது உன்னோட சொந்த சரக்கா?’

  ‘இல்லேண்ணா, கன்ஃப்யூஷியஸின் வார்த்தைகள். சீன அரசியல்வாதி, வேதாந்தி.’ அவர் என்னை மறுபடியும் வந்து பார்த்தார்’.

  ‘யாருடா, கன்ஃப்யூஷியஸா?’

  ‘விளையாடேதோங்க, அண்ணா! மாதவன். அவர் என்னைப் பார்த்ததிலே சந்தோஷம்னார்’.

  ‘அப்படியா? பிரமாதம்டா. அப்படி உங்கிட்டே என்ன பார்த்தார். இல்லே, நீ என்ன சொன்னே?’

  ‘சொல்றேன் அண்ணா. அவரோட அமெரிக்கப் பேரன் அதுல்யாவோட (ஈடு இணையற்றவன்னு அர்த்தமாம்) மொதப் பொறந்த நாள் நவம்பர் 15-ம் தேதிதானே. அதுக்கா ஏகப்பட்ட தடபுடல் எல்லாம் பண்ணி இருக்காராம். ஆனா, கஜா வந்து தடுக்கக் கூடாதில்லையா. அதுக்காக, என்னை ஒரு உபாயம் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன்’.

  ‘அட! சைனாக்காரங்கதான் ஒலிம்பிக்ஸ்போது மழை பெய்யக் கூடாதுன்னு ஏதோ விஞ்ஞான தகிடுதத்தம்லாம் பண்ணி மேகங்களை பீஜிங்கிலேருந்து விரட்டினாங்களாம். அது மாதிரி ஏதான சொய்யறேன்னு சொன்னியா?’

  ‘அதெல்லாம் இல்லேண்ணா. ஒரு ஸ்லோகத்தை அடிக்கடி உச்சரிக்கச் சொன்னேன் அண்ணா?’

  ‘ஸ்லோகமா? என்ன ஸ்லோகம்? எந்த சாமி மேலே?’

  ‘மாதவனோட இஷ்ட தெய்வம் பிள்ளையார் மேலே’.

  ‘என்ன ஸ்லோகம்டா?’

  ‘உங்களுக்கே இத்தனை நேரம் தெரிஞ்சிருக்கணுமே. அண்ணா கஜானனம், பூதகணாதி சேவிதம்னு..’

  ‘ஆ..மாம்?! அதிலே கஜா வர்றதே. சிவசாமி நீ சூரன்டா’.

  ‘எல்லாம் அந்தப் பிள்ளையாரோட அனுக்கிரகம், அண்ணா! தீபாவளி பட்சணத்திலே ரவா லாடும், முள்ளுத் தேங்குழலும் பாக்கி இருக்கு. கொண்டு வரட்டுமா?’

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai