சாவித்ரி - 23. நித்திரை!

1981. புனிதமான கிறிஸ்துமஸ் இரவு. தேவனின் வருகையைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் உலகம் அசந்து விழி மூடிய நேரம். 1954ன் 'ஜெய’ கார்த்திகையின் அர்த்த ராத்திரிப் பொழுதில் ஜெமினியிடம் அடைக்கலம் புகுந்தவர் சாவித்ரி.

1981. புனிதமான கிறிஸ்துமஸ் இரவு. தேவனின் வருகையைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் உலகம் அசந்து விழி மூடிய நேரம். 1954ன் 'ஜெய’ கார்த்திகையின் அர்த்த ராத்திரிப் பொழுதில் ஜெமினியிடம் அடைக்கலம் புகுந்தவர் சாவித்ரி. துன்மதி ஆண்டின் மார்கழியில் அண்ணாநகர் குடிலில் அநாதையாக நிராதரவான நிலையில்  உறக்கம் கலையாமலே விடை பெற்றுக் கொண்டார்.

ஜெமினி நினைத்திருந்தால் அங்கேயே  மயானத்தில் சாவித்ரியுடைய ஈமக்கடன்களுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம்.

கர்த்தர் மட்டுமா பாவங்களைப் பொறுத்துக் கொள்கிறார். நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள தேவாலயத்தின் பின் புறத்தில் வசித்ததாலோ என்னவோ, கணேசனும் சாவித்ரியின்  தவறான நடவடிக்கைகளை  மன்னிப்பதில் அவர் ஒரு மகாத்மா என்றே நிருபித்தார்.

அதிகாலைக்குள் சாவித்ரியின் புகழ் உடல் ஜெமினியின் வீட்டை வந்து சேர்ந்தது. காதல் ஜோடியைத் தொலைத்துத் துடிதுடிக்கும் தலைவனைச் சுற்றி அவரது நேற்றுப்பூ புஷ்பவல்லி, இல்லத்தரசி பாப்ஜி ஆகியோரும் கதறி அழுதார்கள்.

சாவித்ரிக்கு அஞ்சலி செலுத்தத் தென்னகத் திரையுலகம் திரண்டு நின்றது.கணேசனின்  சொந்த இல்லத்தில் இருந்தே சாவித்ரியின் இறுதி யாத்திரை புறப்பட்டது. அதை நேரில் கண்ட  மனோரமா உள்ளம் நெகிழ்ந்து கூறியவை:

ஜெமினி கணேசன் மாதிரியான பிராமின் வீட்ல  அவ்ளோ சுலபமா அந்த மாதிரி இறந்தவர் உடலை உள்ளே கொண்டு வர முடியாது.

ஜெமினி ஸ்டுடியோ முதலாளி எஸ்.எஸ்.வாசன்  உடம்பையே அவரோட பங்களா வெளி வாசலில் பெஞ்சு மேல படுக்க வெச்சிருந்தாங்க.

சாவித்ரி அக்காவை வீட்டுக்கு உள்ளேயே மிக முக்கியமான கூடத்துல வெச்சிருந்தாங்க.

ஒரு மனைவிக்குத் தர வேண்டிய மரியாதையை உத்தரவாதத்தை ஜெமினி கொடுத்தார். அதை நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.’

பிராப்தத்துக்குப் பிறகு சாவித்ரியை நிர்கதியாக ஜெமினி தவிக்க விட்டு விட்டதாக கலைச் சமூகம் குற்றம் சாட்டியது. நடிகையர் திலகத்தின் வீழ்ச்சிகளுக்குக் காரணம் ஜெமினி எனப் பழி சுமத்தியது.

சாவித்ரி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து போனதைக் கண்டும் காணாமல் சுயநலமாக நடந்து கொண்டார் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு ஏசினார்கள்.

பொல்லாதவர்கள் கூறும் பொய்களின் கனத்தை ஜெமினியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது அந்தரங்கத்தின் எல்லை தாண்டி அந்நியர்கள் அவதூறு பரப்பினர்.

கொடைக்கானல் ரெட்லின்ச் காதல் மாளிகை ஜெமினிக்கு சொந்தமான விலை மதிப்பற்ற சொத்து. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை உள்ளிட்ட சினிமாக்களின் ஷூட்டிங் அங்கு நடைபெற்றுள்ளது. ஜெமினி தனது மகள்கள் கமலா- ரேவதி இருவரின் மேற்படிப்புக்காக மணிபால் போக நேர்ந்தது.

அப்போது ரெட்லின்ச் பங்களாவின் புதுமனை புகுவிழாவைவைச் சிறப்பாக முன்னின்று நடத்தித் தந்தவர் சாவித்ரி.

ரெட்லின்ச்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் பெரிய கட்டடம் அப்ஸர்வேட்டரி ரோட்டில் இருந்தது. அதன் பெயர் பினாபாணி. ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை ஜெமினி 55,000/- ரூபாய்க்கு  சாவித்ரி பெயரில் வாங்கினார்.

நிஜத்தில் நடந்தது என்ன என்று ஜெமினி கூறிய போது காலம் கடந்து விட்டது. நாம் புதிய நூற்றாண்டுக்கு வந்து விட்டோம்.  இருந்தாலும் அவரது வாக்குமூலம் மிக முக்கியமானது.

'என்னை  மனதார வாழ்த்தி, பினாபாணி வீட்டுச் சாவியைக் கொடுங்கள்.’ என  என் காலில் விழுந்து சாவித்ரி ஆசீர்வாதம் வாங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதே சாவித்ரி அடுத்த ஆறேழு வருடங்களில் எனக்கு, வீட்டு வாசலைக் காட்டி வெளியேறச் சொன்னாள்.

அப்போது நான் துடிதுடித்துப் போனேன். நான் உயிருக்கும் மேலாகக் காதலித்து மணமும் புரிந்து கொண்டேன் சாவித்ரியை. எச்சரிக்கை உணர்வில் தொடர்ந்து படமெடுக்க வேண்டாமென்று நான் தடுத்தேன். தடையாக இருந்த என்னையே அவள் தூக்கி எறிய முற்பட்டாள். நல்ல வழியைச் சொல்லி எச்சரித்தேன். என்னை வீட்டை விட்டு வெளியே போகும் படி சாவித்ரி சொன்னாள்.

மொதல்ல சரஸ்வதி போயிடும். அப்புறம் லஷ்மி போயிடும். பின்னே சக்தி போயிடும். நீ ரொம்பக் கஷ்டப்படுவே’ என்று எச்சரித்து விட்டுத்தான் போனேன். நான் சொன்னது போல் ஒன்றன் பின் ஒன்றாக அவளை விட்டுப் போகத்தான் செய்தது.’

--------------

'சாவித்ரி 1981ல் சாகவில்லை. 1971ல் பிராப்தம் எடுத்த போதே செத்து விட்டாள். சிவாஜியின் தம்பி வி.சி.ஷண்முகம் கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கவே  சாவித்ரி அநேக இன்னல்களுக்கு ஆளானாள். ஷண்முகம் தான் சாவித்ரியை சாக அடிச்சது.’ என்றெல்லாம் ஜெமினி தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பொருமினார்.

'பிராப்தம்’ - சிவாஜி கணேசனோடு அவள் சேர்ந்து நடித்து தயாரித்த படம். தோல்வியைக் கண்டது. மாளிகை மாதிரி இருந்த வீடு - நிலம்  எல்லாவற்றையும் இழந்தாள்.  உடல் நலம் கெட்டு நோய்வாய்ப்பட்டு படுக்கையிலும் விழுந்தாள்.  நடந்ததைப் பார்த்து நான் மனத்துக்குள் வேதனைப் படத்தான் முடிந்தது. ஏதும் செய்ய முடியவில்லை.

நினைத்ததைச் செய்ய தடை சொல்லும் போது தூக்கி எறிவதும் பிடிவாதம் பிடிப்பதும் குழந்தைத்தனம்.  ஆனால் வயதானவர்கள் அப்படி நடந்து கொண்டால்  அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.  சாவித்ரியின் நிலைமையும் அப்படித்தான் ஆனது.

சுற்றி இருப்போரின் பேச்சைக் கேட்டு  எடுப்பார் கைப் பிள்ளையாகச் செயல்பட்டாள்.  பிராப்தம் என்ற ஒரே படத்தில் தனக்கிருந்த வீடுகள் எல்லாவற்றையும் அடமானம் வைத்து இழந்தாள். ஹபிபுல்லா சாலையில் இருந்த மூன்று வீடுகளும் பறி போயின.  கொடைக்கானல் வீடு குழந்தைகள் பெயரில் இருந்தது. அதனால் அது மட்டும் தப்பித்தது.

பெண்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுவதே அதிசயம்!  மகளிரே நிர்வகித்த சங்கம் சாவித்ரிக்கு 'நடிகையர் திலகம்’ பட்டமளித்து கவுரவித்தது. ஆனால் கடைசி நாள்களில்  துணை இல்லாது, பண பலத்தை இழந்து படுக்கையில் விழுந்தது தான் மிச்சம்.

சாவித்ரியைப் பிரிந்து நான் துக்கப்பட்டேன். திரை உலகக் கலைஞர்கள் என்னைத் தேடி வந்து ஆறுதல் கூறியது நிஜம். ஆனாலும் பிரிவு தாங்காமல்  தூக்க மாத்திரை சாப்பிட்டேன். என்னைக் காப்பாற்ற ஓடி வந்தது டாக்டர் நண்பர்கள். ஆனால் சாவித்ரியை அந்த மருத்துவர்களால் கூடக் காப்பாற்ற முடியவில்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ் எனப் பல கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்த வந்தார்கள். சாவித்ரிக்குப் பிள்ளையாக சில படங்களில் நடித்த கமல் மட்டும் வரவே இல்லை.

சாவித்ரிக்குத் தாலி கட்டிய கையால் இறுதிச் சடங்கையும் செய்து அனுப்பி வைத்தேன். சாவித்ரி என்னை விட்டுப் பிரிய நினைத்தாலும் அவள் விட்டுப் போன கடமைகளை எல்லாம் நான் விட்டுக் கொடுக்காமல் செய்து முடித்தேன்.’ - ஜெமினி கணேசன். 

திரையில் மனம் போல் மாங்கல்யம் கண்டு நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தார்கள். பிராப்தம் அன்யோன்யமான அவர்களைப் பிரித்தது.

சினிமா  காமிராவின் தூரிகை நிழல்களில் ஜோதி மயமாக ஒளி வீசிய உன்னத காதல் ஜோடி. முதல் பதினைந்து ஆண்டுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து, அடுத்தப் பதினைந்து வருடங்களில் அதற்கான அன்பின் அடையாளங்களைத் தொலைத்தும் மறைந்ததே ஜெமினி-சாவித்ரியின்  நிஜ பிராப்தம்!

சாவித்ரி சவுபாக்யவதி. அவருக்கு விஜயவாடாவில் சிலை நிறுவி இருக்கிறார்கள். மறைந்த மகத்தான கலையரசிகளில்   தென் இந்தியாவிலேயே நடிகையர் திலகத்துக்கு மட்டுமே நினைவுச் சின்னம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திரையுலகில் வானமே எல்லையாக விஸ்வரூபம் எடுத்துச் சாதனைகளின் ஆகாயமாக விரிந்து பரந்த சாவித்ரி, வாழ்வின் மிச்சத்தில் அதல பாதாள சாராய சாக்கடைகளிலும் விழுந்து புரண்டார். துயரத்துக்கு வடிகால் தேட பெண்கள் அனைவரும் தாய் வீட்டைத் தஞ்சம் அடைவார்கள்.

சாவித்ரி நினைத்திருந்தால் பிராப்தம் தோல்விக்குப் பிறகு எஞ்சியுள்ளத் தன் சொத்துக்களை விற்று விஜயவாடாவுக்குச் சென்று ஆந்திர சகோதரர்களின் துணையோடு சுகமாக வாழ்ந்திருக்கலாம்.

அவர் நம் பண்பாட்டின் அடிச்சுவட்டில் ஏனோ புகுந்த வீட்டை மறக்காமல், காதலன் கணேசன்  சுவாசிக்கும்  சென்னை காற்றையே விசுவாசித்து வாழ்ந்து மறைந்தும் போனார்.

இந்தியாவில் தேவதாஸ்  இந்தியில் (கே.எல். சைகால்-ஜமுனா, திலீப் குமார்-சுசித்ராசென், ஷாருக்கான்-ஐஸ்வர்யாராய்  நடிப்பில்)மூன்று முறையும்,

தமிழில் 1937  மற்றும் 1953ல், தெலுங்கில் இரு தடவைகளும் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் இமாலய வசூலில் சிகரம் தொட்டது ஏ. நாகேஸ்வர ராவ்- சாவித்ரி நடிப்பில் வெளுத்து வாங்கிய தமிழ் - தெலுங்கு இரு மொழி தேவதாஸ் மாத்திரமே.

இன்றைய 'ஒக்கடு, ஸ்ரீமந்துடு-  புகழ் மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணாவும் அவரது துணைவி எலந்தப்பயம் புகழ் விஜய நிர்மலாவும் 1974ல் தேவதாஸ் படத்தைத் தெலுங்கில் வண்ணத்தில் தயாரித்து நடித்தார்கள். அதற்குப் போட்டியாக ஏ. நாகேஸ்வர ராவ் - சாவித்ரி நடித்த கருப்பு வெள்ளை தேவதாஸ் ரிலிசானது.

புதிதாக வந்த தேவதாஸ் படு தோல்வியைத் தழுவ, ஓல்டு தேவதாஸ் வழக்கம் போல் தூள் கிளப்பியது. நடிகையர் திலகத்தின் ஆற்றல் இளைய தலைமுறையினரையும் கவர்ந்தது. மீண்டும் மீண்டும் ஆந்திர ரசிகர்கள் தேவதாஸ் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமூட்டினர்.

'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்!’ என நடிப்பில் என்றோ நிருபித்த சாவித்ரிக்குப் புகழ் கிரிடம் சூட்டுவது தமிழச்சிகளின் தலையாய கடமை!

அம்மா தலைமையிலான தமிழக அரசு 'நடிகர் திலகம் சிவாஜி’ பெயரில் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அதே போல் சாவித்ரியின் நினைவாகவும் புதிய பரிசு ஒன்றை அறிவிக்க வேண்டும். தமிழர்கள் நடிகையர் திலகத்துக்குக் கட்டாயம் செய்ய வேண்டிய மரியாதையாக அது காலமெல்லாம் நிலைத்திருக்கும்.

அது மட்டுமல்ல. மத்திய அரசில்  நர்கீஸ் பெயரில் ஆண்டு தோறும் அவார்டு தருகிறார்கள். சுதந்தரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் நடுவண் பரிசுகள் எதுவும் தமிழர்கள், தென் இந்தியர்கள் பெயரால் வழங்கப்படுவது கிடையாது. இதுதானா தேசியம்?

அங்கும் நமது எம்.ஜி.ஆர்., சிவாஜி, சாவித்ரி, பெயரால் விருதுகள் வழங்க தமிழக முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும்.

 நமது ஞாபகங்களின் தாலாட்டில் சாவித்ரி நிம்மதியாக, மிகத் தைரியமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். தனக்கு இணையான இன்னொரு நடிப்புச் சுரங்கம் யுகங்கள் தோறும் தேடினாலும், நிச்சயம் கிடைக்காது என்கிற நெஞ்சுறுதியின்  நிறைவில் நடிகையர் திலகம் தொடர்ந்து தூங்கட்டும்!

சாவித்ரி கோமாவில் விழுவதற்கு முன்பு மன நிறைவோடு வார இதழ் ஒன்றில்  ரசிகர்களிடம் கடைசியாக இதயம் திறந்து பேசியவை:

'நான் நினைத்துச் சாதிக்காத விஷயங்களே கிடையாது. எதிர்காலம் என்பது நமது கையிலா இருக்கிறது? பல ஆண்டுகளாக நான் கலைத்துறையிலேயே இருந்து விட்டேன். வாழ்வில் எத்தனையோ குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் கலையை விட்டு என்னால் அகலவே முடியாது.

நான் வளர்ந்தது கலையில். வாழ்ந்தது கலையில். வாழ இருப்பதும் கலையில் தான். அதே போல் நான்  கடைசியாக போவதும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

அரசன் அன்று காப்பான் தெய்வம் நின்று காக்கும்!’ என்பது  என்னைப் பொறுத்த வரையில் நிஜம்!

மனித உருவத்தில் இரக்கமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் இருந்து என்னை இன்னல்களுக்கு ஆளாக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் இருந்தாலும்,

நான் வணங்கும் தெய்வம் மனித உருவில் தான் என்னை ஆசீர்வதிக்கிறது என்று எண்ணும் போது, ஏதோ  சில நாள்கள் நான் பட்ட வேதனையெல்லாம் மறந்து போய் விடுகிறது.

எளிய வாழ்க்கையை மேற்கொண்டாலும் என் மனத்துக்கு ஒரு நிறைவும் அமைதியும் கிடைக்கிறது.

மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுகிறது. பாசமலர் அப்படியல்ல. நாளாக நாளாக அதற்கு வாசம் அதிகம்.

உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மணம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை! ’- சாவித்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com