அஞ்சலி தேவி: 2. எங்கெங்கு காணினும்...!

எம்.ஜி.ஆர்.- அஞ்சலிதேவி இணைந்து நடித்த முதல் படம் சர்வாதிகாரி. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் முரசு


எம்.ஜி.ஆர்.- அஞ்சலிதேவி இணைந்து நடித்த முதல் படம் சர்வாதிகாரி. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் முரசு கொட்டியது. மாடர்ன் தியேட்டர்ஸில் அஞ்சலியின் ஹாட்ரிக் வெற்றி! அதற்குக் காரணம் அஞ்சலியின் அபார நடிப்பு!

சர்வாதிகாரியாகத் துடிக்கும் எம்.என். நம்பியாரின் ‘கைப்பாவை மீனாவாக’ வருவார் அஞ்சலி. தளபதி சித்தூர் வி. நாகையா. அவரது மெய்க்காப்பாளன் எம்.ஜி.ஆரை மயக்குவது போல் நடிக்க வேண்டிய கட்டத்தில் நிஜமாகவே அவரைக் காதலிக்கத் தொடங்குவார்.

‘கண்ணாளன் வருவாரே... என் ராஜன் வருவாரே... பேசி மகிழ்வேனே... ’

பி. லீலாவின் லாவண்யமானக் குரலில் கேட்க கேட்கத் தெவிட்டாத கோமள கீதம் இசைப்பார் அஞ்சலி.

காதலன் எம்.ஜி.ஆருக்கு பிரியாவிடை கொடுக்கும் காட்சியில், ‘பறக்கும் முத்தம்’ பரிசளித்து இளம் நெஞ்சங்களைக் குஷிப்படுத்தினார்.

சினிமாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி இருந்த நிலையில் அஞ்சலியின் நடிப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது சர்வாதிகாரி.

காதலுக்கும் கடமைக்கும் நடுவில் அவர் தவிக்கும் தவிப்பு, நடுவில் நிஜம் அறிந்த நாயகனின் புறக்கணிப்பு அத்தனையையும் தன் முகத்தில் காட்டி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் அஞ்சலி.

ஆடலரசி மட்டும் அல்ல. நடிப்பாற்றல் நிரம்பியவர் என்று ருசுப்படுத்தியது. தமிழகத்தில் அஞ்சலியை ஸ்திரப்படுத்தியது.

தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கி, எம்.ஜி.ஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ பட்டம் நிலைக்கக் காரணமாக இருந்த மகத்தான வெற்றிச் சித்திரங்கள் மர்மயோகியும் - சர்வாதிகாரியும்.

சின்னத்திரைகளில் முழு நேர சினிமா ஒளிபரப்பு வரும் வரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டே இருந்தன.

எம்.ஜி.ஆர் - அஞ்சலி இணை பட முதலாளிகளின் ராசியான ஜோடி ஆயிற்று.

மக்கள் திலகம் பற்றி அஞ்சலி-

‘பெண்களை தெய்வமாக மதிப்பவர் எம்.ஜி.ஆர். சில நேரம் ஓடிக் கொண்டிருக்கும் காமிரா நின்றதும், அவர் பார்வை என் மீது படும். உடனே டைரக்டரிடம் போய், கரண்டைக் காலுக்கு மேலே புடைவை தூக்கிக்கொண்டு இருக்கிறது. சரி செய்த பிறகு திரும்பவும் அக்காட்சியை எடுங்கள் என்பார்.

அப்போது தான் எனக்கே விவரம் புரிந்தது. காட்சியின் போதான எம்.ஜி.ஆரின் கவனம் தெரிந்தது. பெண்மையை அவர் மதிக்கும் பண்பு புரிந்தது. எந்த விஷயத்திலும் உன்னிப்பான கவனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். ’

அடுத்தடுத்தத் தொடர் வெற்றிகளால் 1951 அஞ்சலியின் ஆண்டாகிப் போனது. ‘எங்கெங்கு காணினும் அஞ்சலியடா! ’ என்கிற நிலை.

தென்னகமெங்கும் எல்லா டாக்கீஸ்களிலும் வருடம் முழுவதும் அஞ்சலியின் படங்களே ஓடின. ஒரு சுவர் பாக்கி இல்லாமல் அஞ்சலி நடித்த சினிமா விளம்பரங்கள் நீக்கமற நிறைந்திருந்தன.

‘மனமோகன லாவண்யத்துக்கு மற்றொரு பெயர் அஞ்சலி. அதி அற்புத சவுந்தர்யத்துக்கு இன்னொரு பெயர் அஞ்சலி. பட உலகில் இவர் ஒரு மாயக்காரி, மயக்குக்காரி, சிங்காரி, ஸ்வப்ன சுந்தரி. ’ என்றெல்லாம் மூத்த சினிமா நிருபர் நவீணன் அஞ்சலியைப் போற்றி 1951ல் எழுதினார்.

தமிழகத்தின் பெரும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளில் அஞ்சலி பங்கேற்க நல்ல வாய்ப்பை 1954 முதன் முதலாக அளித்தது.

பொன்வயல் ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு. அவருடைய பங்குதாரர் குணச்சித்திரக் கலைஞர் கே. சாரங்கபாணி.

கல்கியின் ‘பொன்மான்கரடு’ என்கிற புதினமே பொன்வயலாக திரையில் அறுவடையானது. கே. சாரங்கபாணியும் கல்கியும் சிறந்த நண்பர்கள்.

‘பொன்மான்கரடு’ உரிமையைப் பெறுவதற்காக டி.ஆர்.ராமச்சந்திரனை, கல்கியிடம் அழைத்துச் சென்றார் கே. சாரங்கபாணி.

‘இந்தக் கதை சினிமாவுக்கு ஏற்றதுதானா...? என்று சிந்தித்து எடுங்கள். என் கதை என்பதற்காக பொன்மான்கரட்டைப் படமாக்கி நஷ்டப்படாதீர்கள்’ என்றார் கல்கி, கே. சாரங்கபாணியிடம்.

‘பட அதிபராக எனது முதல் அனுபவம் பொன்வயல். அதில் என்னுடன் நாயகியாக நடித்தவர் அஞ்சலிதேவி. மிக அருமையாக எங்களுடன் ஒத்துழைத்தார். அவரால் எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் ஏற்படவில்லை.

மிகப் பெரிய ஸ்டாராக இருப்பினும் ஒப்புக் கொண்ட தேதிகளில் சரியாக வந்து நடித்துக் கொடுத்தார். பொன்வயல் வெற்றிகரமாக ஓடி நிறைய லாபத்தைச் சம்பாதித்துத் தந்தது.’ - டி.ஆர். ராமச்சந்திரன்.

‘கதை வசனம் - அறிஞர் அண்ணா’ என்று முதல் முறையாக விளம்பரப்படுத்திய சினிமா சொர்க்கவாசல். அண்ணாவின் பரிமளம் பிக்சர்ஸ் தயாரிப்பு.

‘புதுமுக நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் உச்ச நட்சத்திரம் அஞ்சலி ஜோடி சேருவாரா’ என்கிறத் தயக்கம் அண்ணா உள்பட அனைவருக்கும் இருந்தது.

அண்ணா ஓர் உபாயம் சொன்னார்.

‘தயாரிப்பு நிர்வாகிகளுடன் எஸ்.எஸ். ஆரே நேரில் சென்று, அஞ்சலியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு நடிக்க அனுமதி கேட்கட்டும். அஞ்சலி எடுக்கும் முடிவே இறுதியானது. ’ என்றார்.

சேடப்பட்டி இளம் காளை! சூரிய நிறத்தில் வனப்பும் வசீகரமும் வளம் சேர்க்கத் தன் முன் பணிவாக நின்று, உடன் இணை சேர கோரிக்கை விடுத்த அதிசயத்தை முதன் முதலாகக் கண்டார் அஞ்சலி.

அண்ணாவைத் தேடி வந்து, ‘இவர் தான் என்னுடன் நடிக்கப் பொருத்தமானவர். இவரையே நடிக்க வையுங்கள்... ’ என்றார். புதுமுகம் எஸ்.எஸ்.ஆரை, நொடி நேர யோசனையும் இன்றி ஆதரித்து நாயகனாக அங்கீகரித்தார் அஞ்சலி.

கே.ஆர். ராமசாமி - பத்மினி, எஸ்.எஸ். ஆர்.- அஞ்சலி என்கிற வித்தியாசமான காம்பினேஷனில் வெளியானது ‘சொர்க்கவாசல்’.

பகுத்தறிவுப் பாசறையாகப் புகழ் பெற்று அண்ணாவின் உரிமைக்குரலை எங்கும் தமிழ் முழக்கம் செய்து வெற்றி வலம் வந்தது.

ரா.வே. என்று மிகச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ரா. வேங்கடாசலம் எழுதிய கதையை ஏவி.எம். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் படமாக்கியது. (தமிழில் பெண், தெலுங்கில் சங்கம், இந்தியில் லடுக்கி)

மூன்றிலும் அஞ்சலி- வைஜெயந்திமாலா முதன் முதலாக இணைந்து நடித்தார்கள்.

அஞ்சலியின் ஜோடி ஜெமினி கணேசன். அவர் ஹீரோவாக ஒப்பந்தமான முதல் படம் பெண். அவர் முதன் முதலில் காதல் காட்சியில் நடித்ததும் அஞ்சலியுடன் தான்.

‘நான் மாடிப்படிகளில் ஏறிச் செல்வேன். என் எதிரில் அஞ்சலிதேவி மாடியிலிருந்து இறங்கி வருவார். இருவரும் முட்டிக் கொள்வோம். ’

இதுவே நான் நடித்த முதல் லவ் சீன். எம்.வி. ராமன் டைரக்ட் செய்தார். ஏவி.எம்மில் அதற்காக 40 முறை ஒத்திகை பார்த்தார்கள். காட்சியை எடுத்து முடிக்க ஏழு டேக் ஆகியது. ’ - ஜெமினி கணேசன்.

அஞ்சலியுடன் மிக அதிக வெற்றிப்படங்களில் நடித்த ஒரே தமிழ் ஹீரோ ஜெமினி கணேசன். அதற்கு அரங்கேற்றம் ஏவி.எம்.மின் பெண்.

டி.கே.ஷண்முகம் குழுவினர் நடத்திய வெற்றிகரமான நாடகம் ஸ்ரீதரின் முதல் கதையான ரத்தபாசம்.

‘ ரத்தபாசம்’ படத்தில் நடிப்பதற்காக அஞ்சலிதேவியை அழைத்தோம். நாடகத்தைப் பார்த்த அவர், அதில் கதாநாயகியாக நடித்த எம். என். ராஜத்தின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

‘ராஜம் நன்றாகத்தானே நடித்திருக்கிறார். அவரையே நீங்கள் ஏன் சினிமாவிலும் பயன் படுத்தக்கூடாது? ஒரு சிறந்த கதாநாயகியை நீங்கள் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் பெருமை கிடைக்குமே! ’ என்றார் அஞ்சலி.

அவரது உள்ளம் உயர்ந்தது. சக நடிகையின் வாய்ப்பை நாம் தட்டிப் பறிக்கலாகாது என்று பெருந்தன்மையுடன் பேசினார் அஞ்சலி.

ஸ்டார் வேல்யூவுக்காக அஞ்சலி ரத்தபாசம் சினிமாவில் அவசியம் நடிக்க வேண்டும் என்று விளக்கினோம். அதன் பிறகே சம்மதித்தார்’.- டி.கே. ஷண்முகம்.

ரத்தபாசம் படத்தில் வீதியில் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தும் அழகியாக அஞ்சலி நடித்தார். அவருக்கு ஜோடி டி.கே. ஷண்முகம்.

ரத்தபாசம் மிகப்பெரிய வசூலோடு வெற்றிகரமாக ஓடியது. உடனடியாக ஏவிஎம்.அதை இந்தியில் ரீமேக் செய்தது.

அஞ்சலியின் கவர்ச்சிக் கன்னி இமேஜை அடியோடு உடைத்து எறிந்தது 1955. மார்ச் 12ல் வெளியான பத்மினி பிக்சர்ஸ் ‘முதல் தேதி’, எடுத்த எடுப்பில் அதற்குக் கட்டியம் கூறியது. முழு நீள சோகச் சித்திரம்! நடிகர் திலகத்துடன் அஞ்சலி முதன் முதலாக இணைந்து நடித்தார்.

‘எந்தவொரு கலைஞருக்கும் நடிகர் திலகத்துடன் இணைந்த பின் நடிப்பில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும்! ’ என்பது வரலாறு. அந்தச் சரித்திரத்தில் அஞ்சலிக்கும் முதல் தேதி மூலம் இடம் கிடைத்தது.

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த ஏழைத் தாயாக அஞ்சலி அற்புதமாக நடித்த ‘முதல் தேதி’ வசூலில் தோல்வி அடைந்தது. ஆனாலும் அஞ்சலியின் மாறுபட்ட நடிப்புக்கு மக்களிடையே வரவேற்பு பெருகியது.

‘முதல் தேதி’ தொடங்கி அஞ்சலி மறக்க முடியாத குணச்சித்திர நாயகி ஆனார்!

தாய்க்குலம் அஞ்சலியை நோக்கிக் கை தொழும் நிலையை உண்டாக்கிய திருப்புமுனைச் சித்திரம் கணவனே கண் கண்ட தெய்வம்! 1955ன் கொடும் கோடையில் மே 6ல் திரைக்கு வந்தது.

அண்ணாவின் படைப்பான ‘சொர்க்க வாசலில்’ அஞ்சலியின் நடிப்பு நாராயணன் கம்பெனியாரை வெகுவாகக் கவர்ந்தது. மறு தினமே ‘கணவனே கண் கண்ட தெய்வத்தில்’ ஒப்பந்தம் செய்தார்கள்.

ஏகப்பட்டப் படங்களில் நடித்த போதும் அஞ்சலி வசன ஒத்திகைகளுக்கும் நாள் தவறாமல் சென்றார். நாராயணன் கம்பெனி முதலாளிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களது தயாரிப்புகளில் அஞ்சலிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரிசையில் நின்றன.

பாலகனான மகன் தன் தந்தையைக் காப்பாற்றும் நோக்கத்தில் குகைக்குள் சிக்கிக் கொள்வான். வெளியே அஞ்சலி தலையை முட்டிக் கொண்டு கதறி அழும் உச்சக்கட்டக் காட்சி படமானது.

சினிமா ஷூட்டிங் என்பதை மறந்து அஞ்சலி சுவற்றில் மோதிக் கொண்டதில் நிஜமாகவே நெற்றியில் பலமான காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிவதையும் கவனிக்காமல், உண்மையான தாயாகவே மாறி உணர்ச்சிகளைக் கொட்டி நடித்தார் அஞ்சலி!

அதைக் கண்டு ஒட்டு மொத்த யூனிட்டும் அதிர்ந்தது.

ஷாட் முடிந்தும் அஞ்சலியின் பதற்றம் சற்றும் குறையவில்லை. அன்னை உடல் நடுநடுங்கியபடியே இருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த இடத்திலேயே வெட்டப்பட்ட மரம் போல் மூர்ச்சையாகித் தரையில் விழுந்தார் அஞ்சலி.

ஜெமினிகணேசனும் அஞ்சலியும் ஜோடி சேர்ந்து நடித்தவற்றில் வசூலிலும் ஓட்டத்திலும் வரலாறு படைத்தது கணவனே கண் கண்ட தெய்வம்.

தொடக்கத்தில் வீர சாகஸங்கள் புரியும் வசீகர வாலிபன் விஜயன் - பின்னர் நாக தேவதையின் சாபத்துக்கு ஆளாகி, குரூபியாகவும் கூனனாகவும் உருமாறும் பரிதாபமிக்கத் தோற்றம்- இரண்டிலும் சக்கை போடு போட்டார் ஜெமினி.

கதாபாத்திரமாகவே மாறி விட்டார் என்பார்கள். அஞ்சலி அதையும் கடந்து நின்றார் கண்ணீர் சிந்தும் நடிப்பில்!

கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளையையும் ஒரு சேரக் காப்பாற்றும் பொருட்டு அஞ்சலி, அம்பாளிடம்

‘ஓ! மாதா! மாதா! வந்தருள் விரைந்து நீ தா! ஜெகன் மாதா! ’

என்று பாடி கதறிய போது உடன் சேர்ந்து அழுதது மகளிர் கூட்டம்.

பி. சுசிலாவின் அழியாப் புகழுக்குப் பிள்ளையார் சுழி போட்டு, எம்.ஏ. ராமாராவ்- ஹேமந்த் குமார் இருவர் இசையில் கணவனே கண் கண்ட தெய்வம் படப் பாடல்கள் காலத்தை வென்று வாழ்கின்றன இன்றும்.

‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா

கண் வளராய் என் ராஜா’

தாலாட்டுப் பாடல்களின் தனி மகுடம்!

நாராயணன் கம்பெனியார் இந்தியில் ஜெமினிக்குப் பதிலாக முதலில் திலீப் குமாரை நடிக்க அழைத்தார்கள். அவருக்குப் படத்தையும் போட்டுக் காட்டினார்கள். அதன் பிறகே ‘தேவதா’வில் ஜெமினி ஹீரோ என்று தீர்மானமாயிற்று.

ஆனால் நாயகி அஞ்சலி என்பது ஆரம்பத்திலேயே முடிவான ஒன்று!

தேவதா இந்திப் பட விளம்பரங்களில் அஞ்சலியின் பெயரே முதலில் காணப்பட்டது. அதனை அடுத்து ஆர். கணேஷ், வைஜெயந்திமாலா என்று பட்டியல் தொடர்ந்தது.

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...?,

பொன்னான வாழ்வு மண்ணாகிப்போமா துயரம் நிலைதானா? ’

போன்ற மிக இனிமையான சூப்பர் ஹிட் பாடல்களுக்காகவே தமிழ் நாட்டில் நிரந்தரமாக ஓடியது ‘டவுன் பஸ். ’ 1955 தீபாவளி வெளியீடு.

எம்.என். கண்ணப்பா என்கிற அதிகம் பிரசித்தி பெறாத கலைஞருடன் அஞ்சலி ஜோடியாக நடித்திருந்தார்.

அஞ்சலிக்கு மிக வித்தியாசமாக ‘அமுதா’ என்கிறத் ‘தனியார் பேருந்து நடத்துனர்’ வேடம்.

கண்டக்டர் யூனிபார்மில் தலையில் தொப்பியும், கூலிங் கிளாசுமாக ரைட் சொல்லி, முதலும் கடைசியுமாகத் தோன்றிய ஒரே லேடி சூப்பர் ஸ்டார் அஞ்சலி மட்டுமே.

1956 -ன் கோடையும் ஜெமினி - அஞ்சலி ஜோடிக்குத் தொடர்ந்து பெருமை சேர்த்தது. காரணம் தாபி சாணக்யா இயக்கி வெளியான ‘காலம் மாறிப் போச்சு’ ஏழை விவசாயிகளின் துயரங்களை அப்பட்டமாகச் சொன்னது. ஓஹோ என்று ஓடி அநாயாசமாக வசூலித்தது.

‘ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்னண்னே’ சூப்பர் ஹிட் பாடலை நாட்டுப் புறங்களில் இப்போதும் பெரிசுகள் பாடக் கேட்கலாம்.

அதே ஆண்டின் இறுதியில் ஜெமினி-அஞ்சலியின் அடுத்த பம்பர் ஹிட் மாதர் குல மாணிக்கம். சாவித்ரி - ஏ. நாகேஸ்வரராவ் மற்றொரு இணை.

சாவித்ரியின் தாய் மண்ணான விஜயவாடாவில் ‘பாலராஜூ’ பிரமாதமாக ஓடியது. அதில் அஞ்சலி ஆடிய நாட்டுப்புற நடன அசைவுகள் பாலகி சாவித்ரிக்கு அத்துபடி. நினைவு தெரிந்த நாள் முதலாக அஞ்சலியின் ரசிகை!

அஞ்சலி மாதிரியே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சாவித்ரி, அவருடன் இணைந்து நடித்த ஒரே தமிழ்க் குடும்பச் சித்திரம் மாதர் குல மாணிக்கம். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெற்றிக்கனியைப் பறித்தது.

‘அரியலூர் ரயில் விபத்து’ என்ற நிகழ்கால சம்பவத்தைக் கொண்டு உடனடியாக உருவான சினிமா. டைரக்டர் டி.பிரகாஷ் ராவ்.

காலம் மாறிப் போச்சு, மாதர் குல மாணிக்கம் இரு படங்களின் தொடர் வெற்றியும் வசூலும் அஞ்சலிக்கு ஆரத்தி எடுக்க வைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com