சரோஜா தேவி: 11. கார்... கவர்ச்சி... கர்வம்...!

1970ல் சரோ நடித்த சிநேகிதி, கண்மலர், மாலதி ஆகிய மூன்றிலும் ஜெமினியே ஹீரோ.

1970ல் சரோ நடித்த சிநேகிதி, கண்மலர், மாலதி ஆகிய மூன்றிலும் ஜெமினியே ஹீரோ.

கண்மலர் படத்தில் எஸ். ஜானகியின் குரலில் சரோ பாடுவதாக வரும் பக்திப்பாடல்

‘பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா’

கண்ணதாசன் புருவம் உயர்த்தி வியந்து நோக்கிப் பாராட்டிய வாலியின் பாடல். சூப்பர் ஹிட் ஆகியது.

இரட்டை இயக்குநர்களான திருமலை - மஹாலிங்கம் அவர்களது குருவான கிருஷ்ணன் - பஞ்சுவின் டைரக்ஷன் மேற்பார்வையில் இயக்கிய படம் கண்மலர்.

நாலு டைரக்டர்கள் பங்கேற்ற ஒரு சினிமாவில் நாயகியாக நடிக்கிற வாய்ப்பு சரோவுக்கு முதலும் கடைசியுமாக அமைந்தது. வி.கே. ராமசாமி தயாரித்த கண்மலர் வசூல் வெளிச்சம் பெறவில்லை.

1970 தீபாவளிக்கு வெளியானது மாலதி. கே.எஸ். ஜி. இன்னொரு ஜாக்பாட்டை எதிர்பார்த்தார். அவர் இயக்கிய முதல் படம் படுதோல்விப் படமாக மாலதி மாறிப் போனது.

1972 நவம்பரில் டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் ‘சக்திலீலை’ வெளியானது. 1971 தீபாவளிக்கு ரிலிசான கே.எஸ். ஜி.யின் ஆதி பராசக்தி பெற்ற வெள்ளிவிழா ஓட்டத்தையும், வசூலையும், வெற்றியையும் கண்டு வண்ணத்தில் உருவான சினிமா.

தமிழில் ‘மாரி அம்மனாக’ பரசுராமனின் தாயாராக சரோ பங்கேற்ற முதல் பக்திச் சித்திரம்.

எம்.ஜி.ஆர். மூலம் பிரபலமான சரோ, ஜெ, மஞ்சுளா ஆகியோர் இணைந்து நடித்த ஒரே படம். மூவரும் வெவ்வேறு எபிசோட்களில் தோன்றினர்.

1974 தைத் திருநாள் வெளியீடு ‘பத்துமாதபந்தம்’ இயக்கம் கிருஷ்ணன் - பஞ்சு. கலரில் காட்டப்பட்ட குடும்பக்கதை. பானுமதி, ராஜஸ்ரீ, ஏவி.எம். ராஜன், முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, மூன்று வேடங்களில் மனோரமா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களுடன் சரோவும் நடித்த படம்.

‘சரோஜாதேவியை நாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறோமோ, இல்லையோ, அவர் தன் நடிப்புத் திறனை மறந்துவிடவில்லை’ என்று குமுதம் ‘பத்துமாத பந்தம்’ விமரிசனத்தில் குறிப்பிட்டது.

1970 தொடங்கி இந்திய சினிமாவில் ‘நியூவேவ்’ என்கிற புதிய வார்த்தைப் பிரயோகம் எட்டுத் திக்கிலும் ஒலித்தது. மெல்ல மரபுகளை மீற ஆரம்பித்தன திரைக்கதைகள்... படுக்கையறைக் காட்சிகளுடன் கூடிய ஏ சான்றிதழ் படங்கள் தமிழிலும் அதிகமாக வெளிவரத் தொடங்கின.

திரும்பிய திசைகளிலெல்லாம் ஸ்ரீவித்யா, மஞ்சுளா, லதா, சுபா, பிரமீளா, ஜெயசித்ரா, ஜெயசுதா, போன்ற புதுமுகங்களின் அணிவகுப்பு.

கொடி கட்டிப் பறந்த சீனியர் நாயகிகள் அதனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அம்மா வேடங்களுக்குத் தாவ வேண்டியதாயிற்று. சரோவுக்கும் அதே நிலைமை.

ஆனால் அவர் ஹீரோயின் அந்தஸ்தை அத்தனைச் சீக்கிரத்தில் இழந்து விட விரும்பவில்லை.

அத்தகைய சூழலில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் சரோஜாதேவியின் மிக முக்கிய பேட்டி வெளியானது. சரோ அதில் மனம் திறந்து பேசியிருந்தார்.

‘சரோ வாய்ஸ் பூவுக்குள் பூகம்பமாகி’ பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இளைய தலைமுறை ஒட்டு மொத்தமாக அதிர்ந்தது. அதன் சில பகுதிகள் உங்களுக்காக-

‘நீங்கள் புகழுடன் விளங்கிய போது இருந்த படவுலகிற்கும், இன்றைக்கிருக்கும் படவுலகிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூற முடியுமா?’

‘காமிரா, இசையமைப்பு ஆகியவற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால், கதையமைப்பின் தரம் தாழ்ந்திருக்கிறது.

‘பாசமலர், ஆலயமணி, எங்க வீட்டுப் பிள்ளை’ போன்ற சிறந்த படங்கள் இப்போது தயாரிக்கப்படுவதில்லை.

உணர்ச்சிவயப்படக் கூடிய கதைகளைப் படமாக எடுக்காமல், பொழுது போக்கிற்காகத்தான் தயாரிக்கிறார்கள். இம்மாதிரி தொடர்ந்து படமெடுப்பது திரையுலகை மிகவும் பாதிக்கும்.

முன்பெல்லாம் கதாநாயகிகளாக நடிக்கிறவர்கள் மிக அழகாக, உடல் அமைப்பு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துப் படங்களில் நடிக்க அழைப்பார்கள்.

இப்போதெல்லாம் நடிகைகள் சாதாரணமாக இருந்தாலும் போதும் நடிக்க அழைக்கிறார்கள். புதுமுகங்களைத் தேடும் தயாரிப்பாளர்கள் அப்புதுமுகங்களின் ‘அழகை’ இப்போது பார்ப்பதில்லை.

‘நீங்கள் இன்றையப் புதுமுகங்களுக்கு கூறும் அறிவுரை என்ன?’

‘இன்றையப் புதுமுகங்கள் ‘நவரஸ’ நடிகைகளாக நடந்து கொள்கிறார்கள். தொழிலில் பற்றில்லாமல், பல இடங்களில் பலவிதமாக நடந்து கொள்வதைத்தான் ’நவரஸ நடிகைகள்’ என்று குறிப்பிட்டேன்.

நடிகை என்று கூறும் போதே கவர்ச்சி, கிளாமர் என்று கூறப்படுகிறது. அதனால் ஒரு நடிகைக்குப் பல சிக்கல்கள் வருகின்றன.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ‘தான் ஒரு நடிகை’ என்பதை மறந்து, நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றால், மிகவும் ஆபாசமாக இருக்கும். ஏனென்றால், ‘நடிகையே கவர்ச்சி’- அதற்கு மேல் கவர்ச்சி உடை என்றால் ?

கவர்ச்சியையும் கவர்ச்சியையும் கூட்டினால் ஆபாசம் தான் பதிலாக வரும்.

ஒரு முறை மிகப்பெரிய காரை வாங்க பம்பாய் சென்றிருந்தேன். அப்போது திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் பெரிய கார் வாங்கும் விஷயத்தைச் சொன்னேன். அப்போது அவர்,

‘ நீ ஒரு பிரபலமான நடிகை. சிறிய காரில் ஆடம்பரமில்லாமல் சென்றாலே உன்னை எல்லாரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். கூட்டம் கூடி விடும்.

பெரிய காரில் ஆடம்பரத்துடன் சென்றால், நடிகைதானே என்று பார்க்க விரும்பாதவர்கள் கூட, காரின் கவர்ச்சியில் மயங்கி, உன்னைக் காண வருவார்கள். கூட்டம் அதிகமாவதால் பலருக்கும் துன்பம்.

பொது வாழ்வில் பிரபலமாகும் போது, நாம் சாதாரணமாக ஆடம்பரமில்லாமல் இருப்பதே நல்லது. படவுலகில் இருந்து வெளியே தள்ளப்பட்ட பிறகும் கூட, ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்.’ என்று கூறினார்.

உடனே கார் வாங்கும் எண்ணத்தைக் கை விட்டேன்.

நடிகை என்னும் போது அவளுடைய செய்கைகளையும், அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஆகையால், நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.’

‘உங்களை மிகவும் கர்வம் பிடித்தவர் என்று கூறுகிறார்களே...?’

‘என்னிடம் வந்தவர்கள் கர்வம் பிடித்தவர் போல் பழகியிருக்க வேண்டும். நானும் அவர்களிடம், அவர்கள் நடந்து கொண்டாற் போல் நடந்து கொண்டேன். அதனால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க வேண்டும்.

உங்களிடம் இப்போது நல்லவிதமாகத்தானே நடந்து கொள்கிறேன்?’

‘தமிழ்ப்பட உலகில் உங்களுக்கு மீண்டும் வரவேற்பு இல்லையே, ஏன்?’

‘நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவள்.

குடும்ப விவகாரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டு, படத் தொழிலையும் கவனிக்க எனக்கு நேரமில்லை. ஆகையால் அதிகமான படங்களில் நடிக்க நான் விரும்புவது கிடையாது.

தமிழில் நடிக்க அடிக்கடி சென்னை வர வேண்டும். அதனால் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடிவது இல்லை. மேலும் பல தமிழ்ப்படங்களின் கதையமைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தமிழ் சினிமாவில் எனக்கு வரவேற்பு இல்லை என்று கூற முடியாதே!

‘ஒரு நடிகை திருமணமான பின்பும் கலைத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’

‘அந்த நடிகையின் கணவரின் மன நிலையைப் பொறுத்துதான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும். தன் மனைவி திருமணத்துக்குப் பின்னும் நடிக்கலாம் என்று கணவர் அனுமதித்தால் நடிக்கலாம். கணவரின் அனுமதி தான் திருமணமான ஒரு நடிகைக்கு முக்கியம்!’

‘சமீபத்தில் பார்த்த தமிழ்ப்படங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியுமா?’

‘ஒரு நியூவேவ் படம் தான் நான் சமீபத்தில் பார்த்தேன். இடைவேளை வரை கதையே கிடையாது. இடைவேளைக்கு முன்பும் பின்பும் சில ஆபாச, அருவருப்பான காட்சிகள், வேண்டாத இடத்தில் பாடல்கள், காபரே நடனக்காட்சிகள்... ஏ சர்டிபிகேட் பெற்ற படம் அது!

கதையமைப்பு சரியில்லாவிடின் எந்தப் படமும் உருப்படாது. கதை வலிவு இல்லாத படங்கள் தயாரிப்பாளர்களை மட்டும் அல்லாமல், அதில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளையும் பாதிக்கும்.

அதில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை நடித்திருக்கிறார். அவர் இந்தப்படம் வந்த பிறகு வேறு எதிலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கேள்வியுற்று வேதனைப்பட்டேன்.

தமிழ்த்திரை உலகம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி? ஏதாவது, ஒரு வழி செய்ய வேண்டாமா ?

தரமான கதையுள்ள சிறந்த படங்களை எடுத்தால் மக்கள் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார்கள்...?’

--------------------

1974க்குப் பிறகு சரோ நடித்து ஒரு மாமாங்கம் கடந்தும் எந்தத் தமிழ்ப்படமும் வெளிவரவில்லை.

1986 ஏப்ரல் 18. ‘எந்தத் தீய பழக்கங்களும் இல்லாதவர் என் கணவர்!’ என்று இறுமாந்திருந்த சரோவுக்குக் கடுமையான அதிர்ச்சி.

அவரது அன்பான கணவர் ஹர்ஷாவுக்கு எதிர் பாராத விதமாக தீடீர் மாரடைப்பு. தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ. அவரது உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தது.

21 ஆம் தேதி இதய வலி அதிகரிக்க, பகல் பன்னிரெண்டரை மணி அளவில் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி ஹர்ஷா காலமானார்.

அரசுப் பணிகளின் கூடுதல் சுமை காரணமாக, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் சட்டென்று பெங்களூர் சதாசிவம் நகருக்குச் சென்று, சரோவுக்கு ஆறுதல் சொல்ல இயலவில்லை.

அதனால் அவரது ‘இரங்கல் ஓலை’ சரோவுக்கு அனுப்பப்பட்டது. முதல்வரின் மடலில் -

‘தங்கள் கணவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஹர்ஷாவின் பூத உடல் கனஹள்ளியில் சரோவுக்குச் சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கண்ணீரும் வற்றும் படி சரோ அழுது தீர்த்தார். இனி அழக் கண்ணீர் ஸ்டாக் இல்லை என்ற நிலை. அத்தகைய அசாதாரண நிலை கண்களுக்கு ஆபத்தை உண்டாக்கியது.

சரோவின் கண்களை ‘டாக்டர் பத்ரி நாத்’ பரிசோதித்தார். உடனடியாக சிகிச்சை செய்யாவிடின் பார்வை பறி போகக் கூடிய அபாயம் உண்டென்றார்.

பத்ரி நாத்தின் வழிகாட்டுதலின் படி சிங்கப்பூரிலிருந்து வந்து சேர்ந்தன சிறப்பு மருந்துகள். பாதிக்கப்பட்ட சரோவின் கண்களில் தேவையான அளவு விடப்பட்டன. அவை விழிகளில் ஊற ஊற விண்மீன் பார்வை மீண்டும் வெளிச்சம் பெற்றது.

ஏறக் குறைய குறுகிய காலத்தில் இருபது ஆண்டுகளில் சரோவின் மண வாழ்வு நிறைவு பெற்றது. சரோ 48 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

சரோவை மறவாமல் மனத்துக்குள் தீராத நேசம் நெய்தவர்களுக்கு அகவை ஒரு பொருட்டா என்ன...?

தங்களின் கனவுக்கன்னி கைம்பெண்ணாகக் காட்சியளித்ததில், தென்னாட்டு கனவான்கள் துடிதுடித்துப் போனார்கள்.

அத்தகைய தர்ம சங்கடமானத் துயர நிலை மேலும் தொடர்வதை, மேட்டுக்குடியினர் யாரும் விரும்பவில்லை.

சரோவை மறுமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமாக வாழத் தலைப்பட்டார்கள்.

‘பணத்துக்காக உங்களை விவாஹம் செய்ய விரும்புவதாக எண்ண வேண்டாம். என்னிடமும் வற்றாத செல்வமும், ஆயிரம் ஏக்கர் கணக்கில் டீ எஸ்டேட்களும் உள்ளன...’

என்று சொத்துப் பத்திரங்களின் பட்டியலை அனுப்பினார்கள்.

‘கல்யாண வசந்தம்’ போதும் என்று தோன்றியது சரோவுக்கு. மீண்டும் மணப்பந்தலை எண்ணிப் பார்க்கவும் அவர் மனம் மறுத்தது.

‘தனிமையிலே இனிமை காண முடியுமா’ என்று சினிமாவில் பாடி நடித்தவர், வாழ்வில் அமைதியை வேண்டி விரும்பிப் பெற யோகாவில் மூழ்கி விட்டார்.

1988ல் மிலிட்டரி டாக்டராக சரோ மீண்டும் அரிதாரம் பூச சந்தர்ப்பம் வாய்த்தது. படம் - தியாகராஜனின் பூவுக்குள் பூகம்பம்.

1989ல் ஜெமினி கணேசன் ஜோடியாக, விஜயகாந்த் அம்மாவாக பி. வாசுவின் பொன்மனச்செல்வன், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியின் மகிமை சொல்லும் பக்திச் சித்திரம் - ஒரே தாய் ஒரே குலம்.

1993 தீபாவளிக்கு மனோபாலா இயக்கத்தில் சிவாஜியுடன் பாரம்பரியம் ஆகியவை சரோ நடிப்பில் வெவ்வேறு கால கட்டங்களில் ரிலீசாயின.

அவை எதுவும் சரோவுக்குப் புதிய புகழ் மாலையைச் சூட்டவில்லை.

1997ல் ஒரு வித்தியாசமான முயற்சி ஒன்ஸ்மோர். நடிகர் திலகம் - சரோஜாதேவி இணைந்து நடித்த கடைசிப்படம்.

1963ல் மகத்தான வெற்றி அடைந்த ‘இருவர் உள்ளம்’ படத்தின் தொடர்ச்சி. தயாரிப்பு ரீமேக் டைரக்டர் சி.வி. ராஜேந்திரன். இயக்கம் எஸ். ஏ. சந்திரசேகர்.

சிவாஜி கணேசனின் மிக அதிகப் படங்களை இயக்கியவர் ஏ. சி. திருலோக சந்தர். அவரது இல்லத்தில் முதல் நாள் படப்பிடிப்பு நடைபெற்றது ‘ஒன்ஸ் மோர்’ விசேஷம்!

இருவர் உள்ளம் படத்தின் முக்கிய காட்சிகளும் ஒன்ஸ் மோர் சினிமாவில் இடம் பெற்று ஓட்டத்துக்கு உதவியது.

பிரிந்து வாழும் அன்னை - தந்தையை ஒன்று சேர்க்கும் மகனாக விஜய் தோன்றினார். விஜய் - சிம்ரன் வெற்றி ஜோடி பங்கேற்ற முதல் வண்ணச் சித்திரமும் கூட. மக்களின் வரவேற்பை பெற்று 100 நாள்கள் ஓடி வசூலை அள்ளியது.

2009 தீபாவளி வெளியீடு ‘ஆதவன்’ . சூர்யா - நயன்தாரா இணையுடன் சரோவுக்குப் பாட்டி வேடம்.

‘அன்பே வா’ காலத்து அலங்கார பூஷணியாக ஆதவனில் பருவக்குமரிகளுக்கு நிகராக சரோஜாதேவி காட்சி அளித்தார்.

சரோவுக்கே உரிய கம்பீரமான தோரணையும், கிளிப் பேச்சும் அவரை இருபத்தியோராம் நூற்றாண்டு மழலைகளிடம் எளிதாகக் கொண்டு சென்றது. இயக்கம் கே.எஸ். ரவிகுமார்.

சரோவை வடிவேலு கலாய்க்கும் ஒவ்வொரு காட்சியும், ஜனங்களிடையே பெரும் கலகலப்பை ஏற்படுத்தின. ஆதவன் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்தன.மிக்கப் பெருந்தன்மையுடன் தன்னை வைத்து காமெடி செய்ய சரோ ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்!

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நாடோடி மன்னனில் வண்ணப் பகுதியில் நாயகியாக அறிமுகமாகி, கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பான ஆதவனுடன் சரோவின் நடிப்பு வாழ்க்கை தற்காலிகமாகப் பூர்த்தி அடைந்துள்ளது. அது மேலும் தொடர இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

நாடோடி மன்னனும் - ஆதவனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரி கொண்டக் கலைப்படைப்புகள் என்பது எதேச்சையான ஒற்றுமை.

-------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com