5. அதான் எனக்குத் தெரியுமே! நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த டி. பி. முத்துலட்சுமி! 

வீட்டுக்குள் தங்கவேலு நுழையும் போது இருட்டாக இருக்கும்.
5. அதான் எனக்குத் தெரியுமே! நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த டி. பி. முத்துலட்சுமி! 

நகைச்சுவை என்பது இன்று வாழ்க்கையிலும் சரி திரைப்படங்களிலும் சரி குறைந்து வருகிறது. வாழ்க்கை சூழலில் ஓட்டத்தில் இருக்க, அதற்கேற்ற வகையில் அவசர கதியில் மீம்ஸ் என்ற பெயரில் நகைச்சுவை சுருங்கிப் போய்விட்டது காலக் கொடுமை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல. அந்த குறுகிய நகைச்சுவையை குறை சொல்வதற்கு ஏதுமில்லை. அந்த நொடி பார்த்து, ரசித்து, மறந்தும் போய்விடுவோம். அவ்வளவே. ஆனால் காலத்தால் அழியாத நகைச்சுவை படைப்புக்களை இலக்கியத்தில், திரைப்படங்களில் படைத்தவர்கள் தமிழர்கள் என்ற பெருமை பழம் பெருமையாகிவிட்டது சோகம். நகைச்சுவைக்கும் ஆபாசத்திற்கும் வித்யாசம் தெரியாமல் இரட்டை அர்த்த வசனங்களால் ரசிகர்களை ஈர்க்க முயற்சித்தனர். இன்றும் அது தொடர்கிறது என்றாலும், பழைய படங்களில் காணப்பட்ட அர்த்தச் செறிவுள்ள நகைச்சுவை இன்று எங்கு தேடினாலும் கிடைக்காது. ஆண்கள் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த அதே காலகட்டத்தில் தனது தனித்துவமான நடிப்பால் பிசிறில்லாத வசன உச்சரிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் டி.பி.முத்துலட்சுமி. முத்துலட்சுமி என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வருவது அறிவாளி படத்தில் பூரி காமெடிதான். இந்தப் படத்தில் படித்த அறிவாளி கணவன், அவனுக்கு படிக்காத மக்கு மனைவி. கணவராக தங்கவேலு நடிக்க, மனைவி பாத்திரத்தில் முத்துலட்சுமி நடித்திருப்பார்.

வீட்டுக்குள் தங்கவேலு நுழையும் போது இருட்டாக இருக்கும். ஏன் விளக்கை ஏற்றவில்லை என்று அவர் கேட்க அதற்கொரு விளக்கம் தருவார் முத்துலட்சுமி. கடைசியில் அவரே மின்சார விளக்கை எரியச் செய்துவிட்டு, கதவுக்கு பின்னால் ஸ்விட்ச் இருக்கிறது அதை போட்டால் லைட் எரியும்னு சொல்லி தந்திருக்கேனே ஏன் செய்யலை என்று கேட்க அதற்கு அவர் எரிந்துவிடும் என்று அயந்து போடவில்லை என்பார். ஸ்விட்ச் என்று சொல் என்று சொற்பயிற்சியை அவர் ஆரம்பிக்க சொஜ்ஜி, சூழ்ச்சி என்று பிழையாகவே கூறுவார். அதன் பின் ரேடியோவில் நண்பன் ஆளவந்தானின் சொற்பொழிவைக் கேட்க வேண்டும் ஃபைலை கொடு வா என்று கேட்க, ஃபைலை பயல் என்று புரிந்து கொண்டு அழைக்க முனைவார் முத்துலட்சுமி. ஒருவழியாய் அவருக்கு அதை புரிய வைத்து எடுத்து வரச் செய்வார். மனைவியை அருகில் அமரச் சொல்ல அதற்கு
அவர், ‘ஆம்பளைங்க முன்னால் பெண்கள் உட்கார கூடாது’ என்று பதில் சொல்வார். 'பெண்களுக்கு சம உரிமை இருக்கு. நாங்க பெண்களுக்கு சமமான சீட்டு வேணும்னு போராடிட்டு இருக்கோம், நீ இப்படி சொன்னா எப்படி, பெண்கள் ஆண்களுக்கு சமத்துவமா இருக்கணும் என்று கூறுவார்.

ஒரு நாள் வீட்டுக்கு அவர் திரும்புகையில் மனைவி குரட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பார். தங்க லட்சுமி என்று அழைக்க அவர் பதறி எழுந்து உடனடியாக அவரை அமர வைத்து காலை பிடிக்க என்னவென்று தங்கவேலு பதற, இருங்க பூட்ஸ் கழட்டறேன் என்று சொல்ல, அதுக்கு இப்படி காலையே கழட்டறியே என்பார். அடுத்து உள்ளே சென்று முதலில் ஒரு வாளியை எடுத்துவருவார். தங்கவேலு அதைப் பார்த்து திகைப்பதற்குள் உட்சென்று மீண்டும் ஒரு கூஜா நிறைய தண்ணீருடன் திரும்ப வருவார். அப்போதுதான் தங்கவேலுக்கு நினைவுக்கு வரும். ஒரு நல்ல மனைவியின் இலக்கணம் என்னவென்று மனைவிக்கு கற்றுக் கொடுத்திருப்பார். அதை செவ்வனே வரிக்கு வரி விடாமல் கடைப்பிடிக்கத் தொடங்கியிருந்திருக்கிறார் முத்துலட்சுமி. அதாவது மாலையில் களைத்து வீடு திரும்பும் கணவனுக்கு உதவிகள் செய்து, குடிக்கத் தண்ணீர் உள்பட அவருக்கு வேண்டிய பணிவிடைகளை இன்முகத்துடன் செய்யவேண்டும் என்பதே அது. எப்படி இதையெல்லாம் நான் சரியாக செய்தேனா என்று பாராட்டை எதிர்ப்பார்த்து முத்துலட்சுமி தங்கவேலுவிடம் கேட்க, அதற்கு அவர் கிண்டலாக, எல்லாம் சரியாத் தான் இருக்கு ஆனால் hard டாka இருக்கு என்பார். hard என்றால் என்ன என்று அப்பாவியாக முத்துலட்சுமி கேட்க, அதற்கு விளக்கமாக கொஞ்சம் கடுபிடியா இருக்கு....ரொம்ப கொடூரமா..ம்ம்...அதாவது முரட்டுத்தனமா இருக்கு என்பார். போகப் போக
பழகிடும் என்று சமாதானமாகிவிடுவார். முத்துலட்சுமி சற்றும் சளைக்காதவராக கைகட்டி ஏங்க இன்னும் என்ன செய்யணும் என்று கேட்க அறிவுரைகளை வழங்குவார். பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று அவர் கூற, உங்க முதுகுக்கு பின்னால் தூங்கி மூஞ்சிக்கு முன் எழுந்துக்க எப்படி முடியும்? என்பார். அதன் பின் அதற்கு சரியான விளக்கம் கொடுப்பார்.

மறுநாள் சமையல் அறையினுள் முத்துலட்சுமி இருக்க தங்க லட்சுமி என்று ஒருவித தாளகதியில் குரல் கொடுப்பார் தங்கவேலு. ஓடி வந்து என்னவென்று கேட்ட மனைவியிடம் என்ன பண்றே என்க, என்ன பலகாரம் செய்யணும்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்பார் முத்துலட்சுமி. எனக்கு பூரி உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும் போல இருக்கு என்று அவர் கூற, அதைத்தான் நானும்ச் செய்யலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன் என்று ஒரு போடு போடுவார். 'நேத்து மசாலா தோசை செஞ்சியே....தோசை தான் இருந்தது மசாலா எவனோ லவட்டிட்டுப் போயிட்டார். சரி பூரி கிழங்கு உனக்கு செய்யத் தெரியுமா என்று கேட்க அவருடைய முக பாவனையைப் பார்த்து சரி நான் சொல்லித் தரேன் இப்படி உட்காரு என்று அவரை அமர அமைத்து பூர் சுட சொல்லித் தரத் தொடங்குவார்.

தங்கவேலு - ஒரு குண்டானை எடுத்து அரை ஆழாக்கு கோதுமை மாவை எடுத்து தலைல கொஞ்சம் தண்ணி கொட்டி....

முத்துலட்சுமி - அதான் எனக்கு தெரியுமே

தங்க - மாவை நல்ல பிசஞ்சி

முத்து - அதான் எனக்குத் தெரியுமே

தங்க - அப்பறம் என்ன செய்யணும்

முத்து - அது எனக்குத் தெரியாதே

இப்படி அவர் சொல்லிக் கொடுக்கும் போது தெரியும் தெரியும் என்று சொல்லி பதில் கேள்வி கேட்டால் தெரியாது என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பதில் சொல்லும் அந்தக் காட்சி அற்புதமான ஒரு நகைச்சுவை காட்சி டி.பி.முத்துலட்சிமியின் நடிப்பாற்றலுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஆரவல்லி என்ற படத்தில் முத்துலட்சுமிக்கு சிங்காரவல்லி என்ற கதாபாத்திரம். அரசியும் தோழியும் ஆன மைனாவதியிடம் அவர் பேசும் வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியது. உதாரணத்துக்கு, அரசி தனிமையில் மன சஞ்சலத்துடன் இருப்பாள். தோழி சிங்காரவல்லியிடம் சில கேள்விகள் கேட்பாள். அதற்கு அவள் நறுக்கென்று சிரிப்புடன் பதில் சொல்வாள். நிம்மதியயைக் கொலைக்காத கனவு இந்த வயதில் எப்படி சாத்தியம்

இளவரசி : மாடப்புறா எதை நினைத்து ஏங்கி நிற்கிறது?

தோழி : நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலை அதை வாட்டுது, அதான்..

இளவரசி : அல்லி ஏன் நிலவைக் கண்டு மயங்குது?

தோழி : அதெல்லாம் ஒண்ணுமில்லை. நிலவு வராட்டியும் அல்லி மலரத்தான் செய்யும். வேலையத்த புலவர்கள் அப்படியெல்லாம் எழுதி வைச்சிட்டாங்க

இளவரசி : கோவில்களில் ஏனடி கடவுள்களை ஜோடியாக வைத்திருக்கின்றனர்?

தோழி : ஏம்மா அவ்ளோ பெரிய கோவில்ல ஒரே ஒரு கடவுள் மட்டும் தனியா இருந்தா பயமா இருக்காது அதான் ஜோடியா இருக்காங்க

இளவரசி : போடி....

என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, அவளைத் தொடர்ந்து செல்வாள் சிங்காரவல்லி.

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டி.பி.முத்துலட்சுமி 1950-60-ம் ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தார். டி.பி.முத்துலட்சுமி நடித்த சில திரைப்படங்கள் ராஜாம்பாள் (1951), வளையாபதி (1952), தாய் உள்ளம் (1952), பராசக்தி (1952), மனோகரா (1954), பொன் வயல் (1954), ராஜி என் கண்மணி (1954), சுகம் எங்கே (1954) துளி விஷம் (1954), கணவனே கண் கண்ட தெய்வம் (1955), பாசவலை (1956), நான் பெற்ற செல்வம் (1956), மக்களைப்பெற்ற மகராசி (1957), மாயா பஜார் (1957), சக்கரவர்த்தி திருமகள் (1957), முதலாளி (1957), வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958), வண்ணக்கிளி (1959), தங்கப்பதுமை (1959), அடுத்த வீட்டுப் பெண் (1960), படிக்காத மேதை (1960), ஹரிச்சந்திரா (1968), அன்னையின் ஆணை, அனுபவி ராஜா அனுபவி, இருவர் உள்ளம், ஏழை உழவன், ஓர் இரவு, கடன் வாங்கி கல்யாணம், குணசுந்தரி, கொஞ்சும் சலங்கை சந்திரலேகா, டவுன் பஸ், திரும்பிப்பார், திருவருட்செல்வர், தேவமனோகரி, பத்மினி, பாரிஜாதம், பிரேம பாசம், பொன்முடி, போர்ட்டர் கந்தன், மகாபலி சக்கரவர்த்தி, மகேஸ்வரி, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, வாழ்க்கை ஒப்பந்தம், வாழவைத்த தெய்வம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜமீந்தார்.

தூத்துக்குடியில் பொன்னைய்ய பாண்டியர், சண்முகத்தம்மாள் ஆகியோரின் ஒரே மகள் முத்துலட்சுமி. டி.பி.முத்துலட்சுமி அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் பெற்றோருக்குத் தெரியாமல் சென்னைக்கு வந்துவிட்டார். சென்னையில் அவருடைய உறவினரான பெருமாள் முத்துலட்சுமியை திரைத்துறைக்குள் நுழைய உதவினார். பெருமாள் இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு அன்றைய கோலிவுட்டில் நிறைய திரைக்கலைஞர்கள் அவருக்கு பரிச்சயம். 

டி.பி.முத்துலட்சுமி நடிகையாக வேண்டும் என்ற கனவினை நினைவாக்க நிறைய உழைத்தார். பாட்டும் நடனமும் கற்றுக் கொண்டார். மாமா பெருமாளிடமே பாட்டும், நடனமும் கற்றுக் கொடுத்தார். எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் 'மகாபலி சக்கரவர்த்தி', தேவமனோகரி, பாரிஜாதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

1950-ம் ஆண்டு பொன்முடி என்ற படத்தில்தான் முதன்முதலாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார் முத்துலட்சுமி. அதில் அவரது கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கப்படவே, அதன்பின்னர் நகைச்சுவையில் அவருக்கு நிறைய வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது.  திரும்பிப் பார் என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மனைவியாக ஒரு ஊமைப் பெண்ணாக நடித்தார் முத்துலட்சுமி. அந்தக் கதாபாத்திரமும் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. அதன் பின் தொடர்ச்சியாக தங்கவேலுக்கு ஜோடியாக நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாகவும், ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவியாக பவானி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். நடிப்புத் திறமைக்காக கலைமாமணி விருது (1999) மற்றும் கலைவாணர் விருதுகள் பெற்றுள்ளார். 

முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார். நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.  இறுதி காலத்தில் நடக்க முடியாமல் அவதியுற்ற முத்துலட்சுமி சக்கர நாற்காலியைத்தான் பயன்படுத்தி வந்தார். உடல் நலக் குறைவால் 2008 மே 29-ம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு அப்போது 77 வயது. நடிக்க ஆசைப்பட்டு அதையே தேர்ந்தெடுத்து இறுதிவரை தன் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களே கலைஞர்கள். டி.பி.முத்துலட்சுமியின் புகழ் அந்த கறுப்பு வெள்ளை சட்டகத்தினுள் மட்டும் உறைந்திருக்கவில்லை. அது திரைதாண்டி ரசிகர்களின் முகங்களில் சிறு கீற்றாய் புன்னகையை அரும்பச் செய்யும். அதுவே முத்துலட்சுமிகளுக்கான வெற்றி.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com