Enable Javscript for better performance
Indias first glamour artist T.R.Rajakumari old actresses- Dinamani

சுடச்சுட

  

  3. ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி

  By உமா ஷக்தி.  |   Published on : 29th June 2019 04:22 PM  |   அ+அ அ-   |    |  

  trr

   

  வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனையோ முகங்களைக் கண்டிருப்போம்.  இப்படியொரு ஒளி பொருந்திய முகமா என்று சிலரைப் பார்த்து வியந்திருப்போம். அழகு என்பது வெறும் பார்வைக்குத் தென்படுவது மட்டுமல்ல. ஒருவர் எவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் பொருத்துதான் அழகின் இலக்கணம் அமையும். திரைவானில் உதித்தவை  எத்தனை எத்தனை முகங்கள்! இவற்றுள் ஆசை முகமென்பது அவரவர் ரசனை சார்ந்தது. சிலருக்கு சிலரை பிடிக்கக் என்ன காரணம் என்பதை யார் பகுத்துக் கூற முடியும்? ஒரு நடிகரையோ நடிகையையோ ரசிகர் ஆதர்ஸமாகக் கருதக் காரணம் அவர்தம் கற்பனைக்கு உயிர் கொடுப்பவராக இருக்கலாம். அல்லது அவரை முழுமையாக நம்பி அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களாகவே அவரை காண்பதனாலும் கூட இருக்கலாம். அல்லது அவர் நேசிக்கும் ஒருவரின் சாயலை அந்நடிகை கொண்டிருக்கலாம். கனவினில் மட்டும் காணக் கிடைக்கும் பேரழகாக அவர் இருக்கலாம். கனவுக் கன்னி என்ற பதம் அப்படித்தான் உருவாகியிருக்கும்.

  திரை நட்சத்திரங்கள் வானம்பாடிகள் போன்று நம் மனப்பரப்பில் சிறகடித்துப் பறந்து பின், நீங்கிச் சென்றாலும், அப்பறவையின் தடம் நம் மனத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். அது ஒரு போதும் வெற்றிடமாவதில்லை. மனதின் அடியாழத்திலிருந்து வெளித் தோன்றி நினைவுகளில் இசை மீட்டிச் செல்லும். தீவிர ரசிகன் பல நடிகைகளை ஒரே சமயத்தில் கண்டு ரசிப்பனல்ல. ஒரே நடிகையை மட்டுமே தன் ஆதர்ஸமாக நினைப்பவன். தோட்டத்தில் பல மலர்கள் இருந்தாலும் அவன் விரும்புவது ரோஜா மலர் ஒன்றை மட்டுமே. அப்படிப்பட்ட விசுவாச ரசிகர்கள் பலரைக் கொண்ட நடிகை ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அவர் பெயர் டி.ஆர்.ராஜகுமாரி.

  அழகுகளில்தான் எத்தனை எத்தனை வகை. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என இமைக்காமல் நோக்கச் செய்யும் அழகு. சில அழகு அமைதிக்கு அமைதியாய் வெண் தாமரையின் இயல்பாய் போகிற போக்கில் எளிமையை அள்ளித் தெளிக்கும் உள்ளத்தினுள் கிளர்ச்சியை உருவாக்கும் மென் அழகு. சிலரின் அழகு கோவில் சிலையென வணங்கத் தோன்றும் வண்ணமிருக்கும். இன்னும் சில அழகிகளின் பேரழகு கண்களை கூசச் செய்பவை, படமெடுத்து ஆடும் நாகப்பாம்பு போன்ற பேரழகு அவை. ஆபத்தான அழகு அது. மிகப் பழமையான மதுவை போத்தலில் அடைத்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து அருந்தினால் கிடைக்கும் மயக்கத்தை ஒரே பார்வையில் வீசிச் செல்லும் பெரும் காந்தமெனும் அழகு அது. தன் புருவ நெரிசலால் அந்த அழகை அள்ளித் தந்தவர் தான் டி.ஆர்.ராஜகுமாரி. பெயருக்கு ஏற்றாற் போல ராஜன் மகளாகவே தோற்றமுடையவர். அந்நாளில் கருப்பு வெள்ளைத் திரையிலும் கவனம் பெற்ற நடிகை ராஜகுமாரி.

  டி.ஆர். ராஜகுமாரி 1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து  நடித்த இரண்டு படங்கள் (மந்தாரவதி, சூர்யபுத்ரி ) தோல்வியுற்றன. ஆனால் சோர்வடையாமல் மின்னும் தாரகையாக கச்ச தேவயானியாக மீண்டும் திரையில் தோன்றினார். தனக்கான இடத்தைப் பிடித்தார். அவர் கதாநாயகியாக நடித்த படங்களில் மொத்த எண்ணிக்கை 25, சில படங்களில் வில்லியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். குமார குலோத்துங்கன் (1939), சூர்யபுத்ரி (1941), மனோன்மணி (1942), சதி சுகன்யா (1942), பிரபாவதி ‎(1942), சிவகவி (1943), குபேர குசேலா (1943), ஹரிதாஸ் (1944), சாலிவாகனன் (1945), வால்மீகி (1946) விகடயோகி (1946), பங்கஜவல்லி, சந்திரலேகா (1948), பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948), கிருஷ்ணபக்தி ‎(1949), பவளக்கொடி (1949), இதய கீதம் (1950), விஜயகுமாரி (1950), வனசுந்தரி (1951), அமரகவி (1952), பணக்காரி (1953), என் வீடு (1953), அன்பு (1953), வாழப்பிறந்தவள் ‎(1953), மனோகரா (1954), நல்ல தங்கை ‎(1955), குலேபகாவலி (1955),  புதுமைப்பித்தன் (1957), மல்லிகா (1957), தங்கமலை ரகசியம் (1957), தங்கப்பதுமை (1959), மந்தாரவதி, வானம்பாடி. திரைப்படங்களில் மொத்தம் 94 பாடல்கள் பாடியுள்ளார். இதில் இவர் தனித்து 54 பாடல்களையும், மற்றவர்களுடன் இணைந்து 40 பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  அவருடைய சமகாலத்து நட்சத்திரங்களுக்கிடையே தன்னிகரற்ற தாரகையாய் வலம் வந்தார். தமிழ்த் திரையுலகை ஆண்டு கொண்டிருந்த எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் என ஐந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஒரே நடிகை அவர்தான்.

  ராதாகிருஷ்ண பிள்ளை ரங்கநாயகி தம்பதியரின் மகளான ராஜாயிதான் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை டி.ஆர்.ராஜகுமாரியாக உருப்பெற்றார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவருடைய குடும்பமே கலைக் குடும்பம். பாட்டி குஜலாம்பாள் அந்நாட்களில் புகழ்பெற்ற கர்னாடகப் பாடகி . ராஜகுமாரியும் நடிப்பு நடனம் பாடல் என பன்முகத் திறமை உடையவர். அவரது தம்பி டி.ஆர். ராமண்ணா பிற்காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பணத் தேவைகளுக்காக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் டி.ஆர்.ராஜகுமாரி.

  அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்பு வரை படித்தவர் ராஜகுமாரி. இந்தியாவின் மர்லின் மன்றோ என பலதரப்பு ரசிகர்களால் போற்றப்பட்டவர்.  1939-ம் ஆண்டு குமார குலோத்துங்கன் எனும் படத்திற்கு பிறகு தொடர் தோல்வி படங்களாக அமையவே, இயக்குநர் கே.சுப்ரமணியன் எடுத்த கச்ச தேவயானிதான் டி.ஆர்.ராஜகுமாரிக்கு கைகொடுத்து பெரும் வெற்றி பெற்றது. அன்று முதல் அவருடைய அசத்தும் அழகு இறுதி வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. .அவருடைய பலம் புருவங்கள் மற்றும் ஈரப்பதமான துடிக்கும் உதடுகளுக்குப் பின்னால் எள்ளல் நகை.  படத்தில் ராஜகுமாரிக்கென்றே பாடல் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்படும். அவரது நளினமான முகபாவமும், உதட்டசைவும் அந்தப் பாடலை  மோகனமாக மாற்றி ரசிகர்களைப் பித்தேறச் செய்யும். அழகிய குரல்வளம் இருந்தாலும், ராஜகுமாரிக்கு பி.லீலா, ஜிக்கி போன்ற பாடகிகள் பின்னணி குரல் தந்துள்ளார்கள்.

  அதன் பின், 1944 –ம் ஆண்டு தியாகராஜ பாகவதருடன் நடித்த  ஹரிதாஸ் படம் வெளியானது – இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று மூன்று தீபாவளிகளைக் கண்டது, அதாவது 110 வாரங்கள் ஓடியது.

  மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ராஜகுமாரியின் நடன அசைவும், அவரது மெல்லிய தன்னிகரற்ற அசைவுகளும் எனலாம். அவருடைய எழில் நடனம் அன்றைய ரசிகர்களை கிறங்கி மயங்கச் செய்தது என்றால் மிகையல்ல. அதுவும் அந்தப் பாடலுக்கு நடுவே ராஜகுமாரி பாகவதரின் அருகே மிக அருகே சென்று அபிநயத்தபடி ஒரு பறக்கும் முத்தத்தைத் தந்துவிட்டு பின் நகர்வார். அதைக் காண்பதற்கென்றே ரசிகர் கூட்டம் அலைமோதியது என்பது செவி வழிச் செய்தி. அதனை அடுத்து நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு…’ என்று பாடி வருகையில் இடையில் பாகவதர்  ‘ரம்பா… ’ என்று குழைய , டி.ஆர். ராஜகுமாரிஅவரை மீண்டும் நெருங்கிச் சென்று ‘ஸ்வாமி!  எனக் குழைவாக அழைக்க, ‘என் மதி மயங்கினேன்’ என்று பாகவதர் இன்பப் பரவச நிலையில் பாடலைத் தொடர்வார். அன்றைய இளம் ரசிகர்களை பித்தேறச் செய்து மெய்மறக்கச் செய்த பாடல் அது.

  டி.ஆர். ராஜகுமாரி பி.யு சின்னப்பா ஜோடி அந்நாட்களில் அதிகம் போற்றப்பட்ட ஜோடியாகும்.  மனோன்மணி, வனசுந்தரி உள்ளிட்ட ஆறு படங்களில் இருவரும் நடித்துள்ளார்கள். பி.யு.சின்னப்பா, ‘நேசம் மாறிடாதே ஆசைக் காதலாலே’ என்று பாட, அதற்கு பதிலாக ராஜகுமாரி, ‘உள்ளம் பொங்கும் வெள்ளம் நானே.. ஓடம் போலே நீ மிதந்து வா...நீ ஓடம் போல மிதந்து வா’ என்று பாடியபடி ஒய்யாரமாக மென்மையாக ஆடியபடி திரையில் தோன்றும் காட்சி மறக்க முடியாதது. ராஜகுமாரியின் மாறா வசீகரம் இந்தப் பாடல் காட்சியில் மிகச் சிறப்பாக வெளிப் பட்டு காலம் தாண்டி இன்றளவும் நிலைபெற்றுவிட்டது.

  டி.ஆர்.ராஜகுமாரிக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த படம் எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா.  எம் கே ராதாவுக்கு ஜோடியாக நடித்த இவர், அதில் ஆடிய முரசு நடனம் (ட்ரம் டான்ஸ்) காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம். அவரின் நடன அசைவுகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. அந்தக் காலத்தில் இப்படியொரு காட்சியா நடனமா ஒத்திசைவா என காண்போரை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற நடனமது. அந்தப் படம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. அதிலும் டி.ஆர்.ராஜகுமாரியே நடித்தார். அவ்வகையில் அகில இந்திய நட்சத்திரமாக அவரை ஜொலிக்க வைத்தார் எஸ்.எஸ்.வாசன்.

  அன்றும் இன்றும் ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவை சற்று மாற்றிக் காட்டியவர் எஸ்.எஸ். வாசன். ‘சந்திரலேகா’வில் டி.ஆர். ராஜகுமாரியின் பெயரை படத்தின் ஆரம்பத்தில் போட்டு அவருக்கு பெருமை சேர்த்தார். எம்.கே. ராதா மற்றும் ரஞ்சன் என்று இரண்டு கதாநாயகர்கள் இருந்தும், டி.ஆர்.ராஜகுமாரிக்கு முன்னுரிமை அளித்தார் எஸ்.எஸ்.வாசன். பிரபல பத்திரிகை பேட்டியொன்றில் ராஜகுமாரி கூறியிருந்தார். ‘அந்தக் காலகட்டத்தில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பிரமிக்க வைத்த துணிகர முயற்சி சந்திரலேகா, அதன் வெற்றிக்காக வாசன் எதை சொன்னாலும் அதைச் செய்ய நான் காத்திருந்தேன். அப்படத்துக்காக சர்க்கஸ்காரியாக எதையும் செய்யும் சித்தமாக இருந்தேன். உழைப்புக்குத் தகுந்த பலன் இருந்தது, அப்படியொரு பொற்காலத்தை எனக்கு அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி’ என்று மனம் திறந்து கூறியிருந்தார்.

  கிருஷ்ண பக்தி எனும் படத்தைத் தொடர்ந்து, 1950-ம் ஆண்டில் இதய கீதம் ஆகிய படங்களில் நடித்த போது ராஜகுமாரியின் வயது 30. ஆயினும் இளம் பெண்ணாகவே தோன்றினார். யாரிடமும் அதிகம் நெருங்கிப் பழகாதவர் டி.ஆர்.ராஜகுமாரி. தான் உண்டு தன் நடிப்புண்டு என்று அயராமல் நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தவர். நகைச்சுவை நடிகை டி பி முத்துலட்சுமி அவரது மனதுக்கு உகந்த தோழி. நடிகர் பி.யு.சின்னப்பாவின் திடீர் மரணம் டி.ஆர்.ராஜகுமாரியின் மனதை மிகவும் வருந்தச் செய்தது.

  ரசிகர்களின் முதல் கனவுக் கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியைப் பற்றி எழுதும் போது பத்திரிகையாளர்களுக்கே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அன்றைய சஞ்சிகைகள் பலவும் ஆச்சரியத்துடன் அவரின் கொஞ்சும் மொழியை புகழ்ந்து தள்ளின. அவரின் நளினத்தையும், சேலையிலும் கூட காந்தக் கவர்ச்சியுடன் திகழும் பேரழகி, ஆடும் மயில் கோவில் சிற்பம், தந்த பொம்மை எனப் பல பட்டங்களை அளித்து அவரைக் கொண்டாடின.

  விஜயகுமாரி என்ற படத்தில் முதன் முறையாக இரண்டு வேடங்கள் ஏற்று நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. ராஜகுமாரியின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது. அவரின் செவ்வரியோடிய விழிகளின் அழகைப் பயன்படுத்திய பல படங்களின் மத்தியில், அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது எனலாம்.

  பணக்காரி எனும் படத்தில் மக்கள் திலகம் எம்ஜி ஆருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மனோகரா படத்தில் வசந்த சேனையாகத் தோன்றினார். அந்தக் கதாபாத்திரம் பெரும் புகழ் அடைந்தது. 1957-ல் சிவாஜியுடன் தங்கமலை ரகசியம் எனும் படத்தில் நடித்தார். அடுத்து தங்கப்பதுமை என்ற படத்தில் அருமையான கதாபாத்திரத்தில் தோன்றினார். தொடர்ந்து 1953 –ம் ஆண்டு வாழப் பிறந்தவன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. அவருடைய தம்பி டி.ஆர்.ராமண்ணாவின் படமான கூண்டுக் கிளி படமும் தோல்வி அடைந்திருந்த நிலையில், தன் தமையனுக்கு ஆறுதல் கூறினார் டி.ஆர்.ராஜகுமாரி.  இனி படத் தயாரிப்பை மட்டும் மேற்கொள்ளலாம் என முடிவெடுத்த தம்பியிடம், ‘மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை உற்றுப் பார் அதை நீ செய், உனக்குப் பிடித்த படங்கள் என்பதைத் தாண்டி மக்களை சென்றடையும் திரைப்படங்கள் என்னவென்று தெரிந்து கொள்’ என்று நம்பிக்கை அளித்தார். அதன் பின் கூண்டுக்கிளி மறு வெளியீடுகள் கண்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. எம்ஜிஆர் சிவாஜி என்ற இரு இமையங்களை ஒரே படத்தில் நடிக்கச் செய்தவர் என்று அழியா புகழ் பெற்றார் டி.ஆர்.ராமண்ணா. அதற்குப் பக்கபலமாக இருந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. அதன் பின்னர் குலேபகாவலி படத்தின் மூலம் டி.ஆர்.ராமண்ணா மகத்தான வெற்றி பெற்றார் என்பது சரித்திரம். டி.ஆர்.ராமண்ணாதனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி டி.ஆர்.ராஜகுமாரியின் பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ஆர். ஆர். பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட நல்ல திரைப்படங்களைத் தயாரித்த பெருமைக்குரிய நிறுவனமாக விளங்கியது.

  மேலும் டி.ஆர். ராஜகுமாரி, சென்னை தி.நகரிலுள்ள பாண்டி பஜாரில் சொந்தமாக திரை அரங்கு ஒன்றைக் கட்டினார். ராஜகுமாரி டாக்கீஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட அந்த திரையரங்கை திறந்து வைத்தவர் எஸ்.எஸ்.வாசன். அன்றைய சென்னையின் ஒரு அடையாளமாக மாறியது அது. அதிலும் முதல் தரமான குளிர்சாதன வசதி பொருந்திய திரையரங்கு அது ஒன்றுதான். ஆங்கிலத் திரைப்படங்கள் அங்குதான் வெளியாகும். தமிழகத்தில் திரை அரங்கு கட்டிய முதல் நடிகை ராஜகுமாரிதான்.

  பல இளம் நாயகியரின் வருகைக்குப் பிறகு ராஜகுமாரி சோபை இழக்கத் தொடங்கினார். கதாநாயகியாகவும், எதிர்நாயகியாகவும் நடித்து வந்த ராஜகுமாரி ஒரு கட்டத்தில் அதி அற்புதமான குணசித்திர நடிகையாக மிளிரத் தொடங்கினார். 1962 –ம் ஆண்டு வெளியான பாசம் படத்தில் எம் ஜி ஆருக்கு தாயாக நடித்தார். பின்னர் பெரிய இடத்துப் பெண்ணில் அவருக்கு அக்கா வேடத்திலும் தோன்றினார். வெற்றி தோல்வி எனும் தொடர் பந்தயத்தில் காலம் அவரை ஜெயித்து விட்டது. ஆனால் இழப்பு ராஜகுமாரிகளுக்கா ,தமிழ் ரசிகர்களுக்கா என்பதை காலம்தான் சொல்ல முடியும். செல்லுலாய்டின் சிற்பமாக திகழும் டி.ஆர்.ராஜகுமாரியின் கடைசி ரசிகன் இருக்கும் வரை அவர் அத்தகைய மனங்களின் ராஜகுமாரிதான் என்பதில் சந்தேகமில்லை.

  1963-ல் வெளியான ‘வானம்பாடி’எனும் படம்தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசிப் படம்.  அத்தமிழ் திரை தேவதை திரையுலகை விட்டு விலகிய போது அவருக்கு வயது 41. கடைசி வரை திருமணம் செய்யாமல், தன் தம்பி குடும்பத்துடன் வாழ்ந்தார். அவர்களுக்கு உறுதுணையாகவே உடன் இருந்தார். தம்பிகள் மீது ராஜகுமாரி வைத்திருந்த பாசத்தை பார்த்த கவிஞர் கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியது, 'அடுத்தப் பிறவி என ஒன்று இருந்தால், நான் டி.ஆர். ராஜகுமாரியின் தம்பியாக பிறக்க வேண்டும்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினாராம்.

  கடைசி வரை தனக்காக வாழாமல் குடும்பத்துக்காக வாழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி 1999-ம் ஆண்டு, தனது 77 வயதில் இயற்கை எய்தினார். வானவில் ஒரே ஒரு கணம் விண்ணில் தோன்றி மறைந்தாலும், அது தோன்றும் கணங்களில், அழகிய வண்ணங்களை நம் மனதில் நிறைத்து விட்டுத்தான் செல்லும். அத்தகைய அற்புதமான வானவில்தான் டி.ஆர்.ராஜகுமாரி.

  தொடரும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai