Enable Javscript for better performance
A legendary actor TS Balaiya|பன்முக ஆளுமை டி.எஸ்.பாலையா!- Dinamani

சுடச்சுட

  

  9. பன்முக ஆளுமை டி.எஸ்.பாலையா!

  By உமா ஷக்தி.  |   Published on : 24th September 2019 07:15 AM  |   அ+அ அ-   |    |  

  t

  டி.எஸ்.பாலையா திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை எனும் ஊரில் 1914 ஆகஸ்ட் 23-ம் தேதி பிறந்தார். அவரது தந்தையார் பெயர் சுப்ரமணியம் பிள்ளை.

  சிறுவயதில் சராசரிக்கும் சற்று குறைவான உயரத்தில் பாலையா இருந்ததால் சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டக்கும் ஆளானார். படிப்பு கசக்கவே, எப்பாடுபட்டாவது அனைவரும் புகழும் வண்ணம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அந்த சிறு வயதிலேயே ஏங்கத் தொடங்கினார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவரது ஊருக்கு வந்திருந்த சர்க்கஸுக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் கனவுலகில் நடப்பது போலிருந்தது. சர்க்கஸ் கலைஞர்களின் ஒவ்வொரு சாகஸம் முடிந்த பின்னர் ரசிகர்களின் பலத்த கரகோஷத்தையும், கைதட்டல் ஒலியையும் கேட்டார் பாலையா. இது அவரது இளம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே சர்க்கஸ் நடத்துனரிடம் சென்று தனக்கு ஏதாவது வேலை தருமாறு கேட்டார்.  அவர் மறுத்துவிடவே, எப்பாடு பட்டாவது ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர வேண்டும் என்று முடிவெடுத்தார் பாலையா.

  மதுரையில் தனக்குத் தெரிந்த சர்க்கஸ் நிறுவனத்தில் சேர்த்துவிடுவதாக பாலையாவின் நண்பன் ஒருவன் சொல்லவே, சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு தன் நண்பனுடன் மதுரைக்குச் சென்றார். நான் சொன்னவர் மதுரையில் இல்லை மானா மதுரையில் உள்ளார் என்று கூறி அவரை அங்கு ரயிலில் அழைத்துச் சென்றான் நண்பன். நள்ளிரவாகிப் போனதால், புது ஊரில் இந்நேரத்தில் எங்கு சென்று தேடுவது என்று கூறிய நண்பன், அவரை ரயில் நிலையப் ப்ளாட்பாரத்திலேயே தங்க வைத்தான். இருவரும் வேறு வழியின்றி அங்கு தூங்கினார்கள். ஆனால் காலையில் விழித்த பாலையாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நண்பனும் இல்லை. அவரது பணப்பையும் இல்லை. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கசப்பான உண்மை அப்போதுதான் அவருக்கு உரைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து ஒருவாறு உணவுக் கூடமொன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.  அதன் பின் கசாப்புக் கடையில் வேலை செய்தார்.

  வயிற்றுப்பாட்டுப் பிரச்னை தீர்ந்தவுடன் அவரது லட்சியம் அடிக்கடி நினைவுக்கு வர, தினமும் நாடகம் பார்க்கச் சென்றார். சர்க்கஸில் சேர முடியாவிட்டாலும் பரவாயில்லை புகழ் தரக் கூடிய ஏதாவது ஒரு துறையில் பிரகாசிக்க முடிவு செய்து அது தான் தினமும் செல்லும் நாடக உலகில்தான் உள்ளது என்று நினைத்து நாடகத்தில் சேர முடிவெடுத்தார். குறுகிய காலம் பாய்ஸ் கம்பெனியிலிருந்துவிட்டு பால மோகன சபாவில் சேர்ந்தார். அங்கு அவரது வாத்தியாரான கந்தசாமி முதலியாரின் வழிகாட்டுதலில் சுட்ட தங்கமாய் மிளரத் தொடங்கினார்.

  'சதி லீலாவதி' படத்தில் கந்தசாமி முதலியார்தான் வசனம் எழுதினார். தனக்கு மிகவும் பிடித்த மாணவனான பாலையாவுக்கு ஒரு நல்வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் முதலியார். எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய அப்படத்தில் முதன் முதலாக வெள்ளித் திரையில் வில்லனாக அறிமுகமானார் பாலையா. சதி லீலாவதி அவரது திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம். காரணம் எம் ஜி ஆர் எம் கே ராதா கே.ஏ.தங்கவேலு என அனைவருக்கும் அதுவே முதல் படம். அத்தகைய முதல் படத்திலேயே நல்லதொரு பெயரைப் பெற்றார் டி.எஸ்.பாலையா.  அதன் பின் ஆர்யமாலா என்ற படத்தில் நடித்தார். அதுவும் ஓரளவுக்கு நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதன் பின் இயக்குநர்கள் விரும்பும் நடிகராகிவிட்டார் அவர்.

  சொந்த வாழ்க்கையிலும் எதிலும் குறை வைத்தவரில்லை பாலையா. இளம் வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த அவர் பின்னாட்களில் சுகவாசியாக மாறினார். அதிலும் குறிப்பாக திருமண பந்தத்தில் அவர் எளிதில் சலிப்படைபவராக இருந்தார். முதலில் பத்மாவதி என்பவரை திருமணம் செய்தார் பாலையா. அதன்பின் லீலாவதி என்பவரை இரண்டாம் மணம் புரிந்த அவர், பின்னர் மூன்றாம் திருமணத்தை நவநீதம் என்பவரும் நடத்திக் கொண்டார். இப்படித் தொடர் திருமணம் மற்றும் ஏழு குழந்தைகள் என அவரது வாழ்க்கைச் சக்கரம் சுழல, ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு சாமியார் ஆனார். பாண்டிச்சேரிக்கு அருகே ஒரு ஊரில் தலைமறைவாகிவிட்டார். பெரும் புகழுடன் இருந்த ஒருவரின் திடீர் மறைவு பலருக்கு அதிர்ச்சியளித்தது. புதுச்சேரிக்கு பட வேலைக்காக சென்ற மாடர்ன் தியேட்டர் சுந்தரம் மரத்தடியில் விட்டேத்தியாக அமர்ந்திருந்த பாலையாவை ஏதேச்சையாகப் பார்த்தார். பாலையாதானா என்று உறுதிசெய்த பின், பிடிவாதமாக அவரைக் காரில் ஏற்றி சென்னைக்கு மீண்டும் அழைத்து வந்தார். அதன்பின் பாலையாவை பர்மா ராணி என்ற படத்தில் நடிக்க வைத்தார். அவரது மீள் வருகை திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

  பாலையா வில்லனாக மட்டுமல்ல சில படங்களில் கதாநாயகனாக நடத்துள்ளார். அதுவும் நாட்டிய பேரொளி எனப் பின்னர் பட்டம் பெற்ற பத்மினியின் திரை வாழ்வில் ஆரம்பக் காலத்தில் அவருக்கு கதாநாயகனாகவும்  நடித்துள்ளார். சொந்தக் குரலில் பாடும் திறமையுடைவர். வில்லன் கதாநாயகன் பின்னர் குணச்சித்திரம் என எந்தவிதமான கதாபாத்திரத்தை அளித்தாலும் ஒவ்வொன்றிலும் தனி முத்திரைப் பதித்து மிளிர்ந்தார். வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணசித்திரக் கதாபாத்திரம், பல குரலில் பேசும் திறன், பாடும் திறனுடையவர் என்று அவரது திறமையை முழுவதும் பயன்படுத்திக் கொண்டது தமிழ்த்திரையுலகம். மதுரை வீரன், அம்பிகாபதி, வேலைக்காரி, ஓர் இரவு, கணத்தூர் கண்ணம்மா போன்ற காலத்தால் அழியாத படங்களில் தனக்குரிய பங்களிப்பை சிறப்பாகச் செய்தவர் பாலையா.

  அவரை சதிலீலாவதியில் அறிமுகப்படுத்திய டங்கன் பெருமையாக பாலையாவைப் பற்றிக் கூறுகையில், பாலையாவை மிஞ்ச ஒருவராலும் முடியாது (‘No one can replace Balaiya’) என்று கூறி அவரைப் பெருமைப்படுத்தினார். அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வில்லன் நடிகரான டி.கே.ராமச்சந்திரனிடம், 'உங்களுக்குப் பிடித்த வில்லன் நடிகர் யார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டபோது, 'டி.எஸ்.பாலையாதான். வேறு யார்?’ என்று கூறியிருக்கிறார். அவரது பெருமைக்கு மற்றொரு சான்று 'மணமகள்' எனும் படத்தில் பாலையாவின் அற்புதமான நடிப்பாற்றலைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்துள்ளார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இப்படி அவரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். கலையை திறம்பட கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, அதுவும் மகா கலைஞர்களுக்கு  கேட்கவே வேண்டாம். நடிகர்கள் விரும்பும் நடிகராக இருந்தவர் பாலையா. பலருக்கு உத்வேகமும் நடிப்பின் சிறப்பையும் இயல்பாகத் தன் பங்களிப்பின் மூலம் கற்றுத் தந்தவர்.

  பாலையா எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையுடைவராக இருந்தார். சொல் பொறுக்காத ஒருவராகவும், அதே சமயம் தன்னுடைய வேலையில் எவ்வித சமரசம் இன்றியும் சதா சர்வ காலம் சினிமா குறித்த சிந்தனையிலேயே பொழுதைகளைக் கழித்த உன்னத கலைஞர் அவர். சென்னையில் வசிக்கும் போது ஆவேசம் வரும்போதெல்லாம் ‘அந்த துப்பாக்கியை எட்றா’ என்று கோபாவேசமாகச் சொல்வாராம்.

  பாலையாவின் பலம் அவரது வசன உச்சரிப்பும், முக பாவமும், உடல்மொழியும் எனலாம். அவரது முக பாவத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டு, ஹேமநாத பாகவதாராக சிவாஜியுடன் ஏட்டிக்குப் போட்டி போட்டு அவர் பாடும் ‘ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா என்ற பாடலே அத்தாட்சி. தான் பேசும் வசனங்களுக்கு ஏற்ற வகையில் குரலையும், உடல் வாகும் இருக்கும்படியாக ரசிகர்கள் மனதில் பதியும்படியாக அந்தக் காட்சியை அழகாக்கிவிடுவார்.

  அவரது வாழ்க்கையை விளக்கும்படியாக நூற்றாண்டு கண்ட டி எஸ் பாலையா எனும் புத்தககம் வெளிவந்துள்ளது. அதில் பாலையாவின் வாழ்க்கையை விவரமாக பல நுட்பமான தகவல்களுடன் எழுதியவர் தி.சந்தான கிருஷ்ணன் என்பவர். இவர் இளம் வயதில் பாலையாவை நேரில் சந்தித்து அவரிடம் கையொப்பம் பெற்றவர். அதன் பின் அவரால் கவரப்பட்டு அவர் நடித்தப் அனைத்து படங்களையும் பார்த்துள்ளார். திரைத்தகவல்களைச் சேகரிப்பதையே தனது பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையாகவே கொண்டவர் சந்தான கிருஷ்ணன். பாலையாவைப் பற்றிய இந்தப் புத்தகத்தை ஒரு ரசிகப் பார்வையில் மட்டுமல்லாமல் பயோகிராஃபி போலவே எழுதியிருக்கிறார் சந்தான கிருஷ்ணன்.

  பாலையாவின் முக்கிய படங்களுள் ஒன்று அவர் நாகேஷுக்கு தந்தையாக நடித்த காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தது. அது யாரும் மறக்க முடியாத ஒரு திரைப் பாத்திரம். நாகேஷ் ஒரு பேய்ப் படக் கதையை விலாவரியாக விவரிக்க அதற்கு பாலையா தரும் ரியாக்‌ஷன் உலகத் தரமான அசல் நடிப்பு. திரையில் நடந்த மாயம் எனலாம். போலவே, ‘திருவிளையாடல்’, ‘ஊட்டி வரை உறவு’, ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற படங்கள் அவரது பங்களிப்பால் ஒருபடி அதிகம் பேசப்பட்டன. அதிலும் தில்லான மோகனாம்பாள் படத்தில் பத்மினி, சி.கே.சரஸ்வதி குழுவினருடன், தவில் வித்வானான பாலையா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயிலில் பயணிப்பார். இளம் காதலர்களாக சிவாஜி, பத்மினியின் உரையாடலுக்கு இடையே தாயார் சரஸ்வதி தொந்திரவு அளித்துக் கொண்டிருக்க, ரயிலின் குலுக்கத்துக்கு ஏற்ப குரலை மாற்றிப் பேசுவார் பாலையா. மகளை வேறு பக்கம் உட்காரச் சொல்லி வைது கொண்டிருந்த சி.கே.சரஸ்வதியிடம்‘ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே’ என்று இரு பொருள் பட ஒரு வசனத்தை கூறுவார். அந்த நகைச்சுவை காட்சியை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘பாமா விஜயத்தில்’ பாசக்கார பேரன் பேத்திகளுடன் சேர்ந்து, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று மருமகள்களுக்கும் மகன்களுக்கும் அறிவுரைக் கூறிய அன்புத் தந்தை பாலையாவை நினைவு வைத்திருப்பவர்கள் அனேக ரசிகர்கள்.

  1972-ம் ஆண்டு 60-வது வயதில் மறைந்தார் பாலையா. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செய்தது. வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்று தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் உயிர் கொடுத்தவர் இன்னுயிர் நீத்தார் என்ற செய்தி திரை ரசிகர்களுக்கும் வருத்தம் அளித்தது. அவ்வகையில் திரைத்துறையில் மறக்க முடியாத தடம் பதித்தவர் பாலையா. வெள்ளித்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்த பாலையாவின் நினைவலைகள் காலம் முழுக்க நிலைத்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

  தொடரும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai