1. ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு! எஸ்.வி.ரங்காராவ்

கண்ணியமான தோற்றம். பாசமான தந்தை. அலட்டல் இல்லாத நடிப்பு. கணீர் குரல்
1. ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு! எஸ்.வி.ரங்காராவ்

அது ஒரு நிலாக்காலம். அப்போதெல்லாம் சினிமா மட்டுமே மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. திரை நட்சத்திரங்கள் எளிதில் மனத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுவார்கள். டெண்ட் கொட்டாயில் சினிமா பார்த்த அனுபவங்களை வீட்டுப் பெரியவர்கள் பகிர்ந்து கொள்ள, சுற்றி அமர்ந்திருக்கும் சிறுவர்கள் வாய் பிளந்தபடி ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொள்வார்கள். தியாகராஜ பாகவதர் முதல் விஜய் சேதுபதி வரை தமிழ் திரையுலகம் பல அற்புத கலைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு சகாப்தம். அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து தமிழ்த் திரையுலகம் உள்ளவரை அவர்களுடைய கீர்த்தி நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட சில அபூர்வ நடிகர்களைப் பற்றிய தொகுப்புதான் இது.

கண்ணியமான தோற்றம்.  அலட்டல் இல்லாத நடிப்பு. கணீர் குரல், அஜானுபாகுவான உருவச் சிறப்பு இவையெல்லாம் ஒருங்கே பெற்ற நடிகர் ஒருவர் உண்டென்றால் அவர் எஸ்.வி.ரங்காராவாகத்தான் இருக்க முடியும். எஸ்.வி.ஆர் என திரைத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட ரங்காராவ் பன்முகத் திறமை வாய்ந்தவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என திரைத்துறைக்கு முக்கிய பங்களிப்பை அளித்தவர்.

1918-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி ராஜமுந்திரியில் உள்ள தெளலேஸ்வரம் என்ற ஊரில் பிறந்தார் சமார்ல வெங்கட ரங்கா ராவ். பிரஸிடென்ஸி கல்லூரியில் பட்டப் படிப்பை (பி.எஸ்.ஸி) முடித்த இவர் டாடா நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார். ஆனால் அவருடைய கலைத்தாகம் அவரை அந்த வேலையில் நீண்ட நாள் நிலைக்க விடவில்லை. அவர் பெரிதும் விரும்பிய திரைத்துறைக்கு அழைத்து வந்தது. மெதட் ஆக்டிங் என்ற வகையில் அவரது நடிப்பு ஆரம்பத்தில் இருந்தாலும், பிறகு தன் பாணியை மாற்றிக் கொண்டு, அதற்கேற்ற உடல்மொழியுடன் மெருகேற்றிக் கொண்டார். எந்தப் படத்தில் நடித்தாலும், அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறும் திறன் கொண்ட அற்புத நடிகராக உருமாறினார். உதாரணமாகச் சொல்ல ஒன்றா இரண்டா? அவருடைய எல்லா படங்களையும்தான் குறிப்பிட்டாக வேண்டும். என்றாலும் அனைவரையும் கவர்ந்த ஒரு சில படங்களின் காட்சிகளைப் பார்க்கலாம்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா விஜயகுமாரி மற்றும் எஸ்.வி.ரங்காராவ் நடிப்பில் வெளியான படம் 'நானும் ஒரு பெண்'  ஏவிவிஎம் தயாரிப்பில் (முருகன் பிரதர்ஸ்) உருவான இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திரிலோகசந்தர். 1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தூணாக விளங்கியவர் எஸ்.வி.ரங்காராவ். ஜமீன்தாரரான அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மருமகள் அழகியாகவும் அறிவானவளாகவும் வர வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு கறுப்பான மருமகள் கல்யாணி (விஜயகுமாரி) வந்ததும், அவளை வெறுத்தார். கணவரின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) அன்பும் இல்லாமல் மாமனாரின் வெறுப்பிலும் துவண்டுவிடாமல் அன்பினால் அவர்கள் இதயத்தை வெல்கிறாள் கல்யாணி. ஆனால் ஒரு கட்டத்தில் பெரியவர் அவள் மீது சந்தேகப்படும் விதமாக சூழல்கள் ஏற்பட, அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இறுதியில் இதற்கெல்லாம் காரணம் மைத்துனர் சபாபதி (எம்.ஆர்.ராதான்) என்ற உண்மையை கல்யாணி மூலமாக அறிகிறார். மருமகளின் திறமையாலும் அறிவாலும்தான் கடல் போன்ற சொத்துக்கள் காப்பாற்றப்பட்டது என்பதை அறிந்து மன்னிப்பு கேட்பார். அப்போது கல்யாணி ''நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை மாமா, உங்களை விட்டுச் சென்ற நாங்கள்தான் தவறு செய்தவர்கள்' என்று உருக்கமாகக் கூற அதற்கு அவர், ‘உன் பெருந்தன்மை என்ற ரம்பத்தால் என் இருதயத்தை அறுக்காதே கல்யாணி...நான் பாவி’ என்று வருத்தத்துடன் கூறி குற்றவுணர்வு மிக கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விடுவார். எத்தகைய இதயமானாலும் அந்தக் காட்சியில் உடைந்து போகும் எனும் அளவிற்கு இருக்கும் அக்காட்சியில் அவரது நடிப்பு. நாம் பார்த்துக் கொண்டிருப்பது திரையில் ஒளிரும் காட்சிகளா அல்லது நம் அருகே நிகழும் சம்பவங்களா என்று ஒருவரை மறக்கச் செய்யும் நடிப்பை வழங்கக் கூடியவர்களே மகா கலைஞர்கள். ரங்காராவ் தன் குரலால் அனைவரையும் வசப்படுத்தும் இயல்புடையவர். தமிழ் படத்தில் நடிக்கையில் பிசிறில்லாத உச்சரிப்பும், அவரது தாய்மொழியான தெலுங்குப் படங்களில் நடிக்கும் போது இயல்பான உச்சரிப்புடன் தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் இயல்பை மிளிரச் செய்துவிடுவார்.

பிழியப் பிழிய அழ வைக்கும் காட்சியாக இருந்தாலும் சரி, பணச் செருக்குடன் மிதப்பாக நடக்கும் காட்சியாக இருந்தாலும் சரி, பாசக்கார அப்பாவாக இருந்தாலும் சரி, ஏழை குடியானவனாக தோன்றினாலும் சரி  ரங்காராவுக்கு நிகர் ரங்காராவ் மட்டுமே.

புராணப் படங்களில் ரங்காராவின் தோற்றம் குறித்து தனியாக புத்தகமே எழுதலாம். ஒரு புராணக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்று நாம் கற்பனை செய்தால் அதற்கு அச்சு அசலாக பொருந்தக் கூடியவர் அவர். ராவணன், கீசகன், கடோத்கஜன் என அவர் ஏற்று நடித்திருக்கும் பாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் வித்யாசம் காண்பித்திருப்பார். இன்னொரு மெய் சிலிர்க்கும் காட்சி மாயாபஜார் திரைப்படத்தில் காணலாம். அது ரங்காராவ்  கடோத்கஜனாக அறிமுகம் ஆகும் காட்சி. மேளங்கள் முழங்க, கதாயுதத்துடன் கம்பீரமாக அவர் தோன்றி ஒரு பாடலைப் பாடி தன் பெருமையை சொல்லும் அந்தப் பாடல் அக்காலத்தில் ரசிகர்களை சொக்கி வைத்திருந்தது. அடுத்து திருமண விருந்து மொத்தத்தையும் கபளீகரம் செய்யும் காட்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து மகிழும்படி இருக்கும். அண்டா குண்டாவில் இருக்கும் லட்டு, ஜிலேபி உள்ளிட்ட பலவிதமான பண்டங்களையும் அலாக்காக விழுங்கிவிட்டு நளினத்துடன் தண்ணீர் குடத்தின் மூடியைத் தட்டிவிட்டு அப்படியே அதைத்  தூக்கி தண்ணீர் குடிக்கும் காட்சி..அடடா! இப்போது நினைத்தாலும் சிரிக்க வைத்துவிடும். 'கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், அந்த கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்’ என்ற பாடல் காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்றதன் காரணம் ரங்காராவ் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியால் என்றால் மிகையில்லை. அந்தப் பாடல் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. ஒவ்வொரு முறையும் நம்மை அறியாமல் லேசாக வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம்.  மேலும் அது நம் நினைவலைகளை மீட்டி குழந்தைப் பருவத்திற்கு நம்மை அறியாமல் அழைத்துச் செல்லும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் மாறி மாறி நடித்த ரங்கா ராவுக்கு, தெலுங்கு திரை ரசிகர்கள் விஸ்வநட சக்ரவர்த்தி (உலகின் தலைசிறந்த நடிகர்) என்றொரு பட்டத்தை சூட்டி  மகிழ்ந்தனர். இளம் வயதில் நாடக மேடையில் ஆங்கில நாடங்களில் நடித்த பெருமையும் உடையவர் அவர். குறிப்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்து மாணவர்களிடையே அதிகப் புகழ் பெற்றவர். அதன் பின் 1952-ம் ஆண்டு வெளியான 'பெல்லி செஸ்ஸி சூடு' என்ற தெலுங்குப் படத்தில் ஜமீன்தார் வேடத்தில் நடித்தார். அதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் தோன்றி நடித்திருந்தாலும் பெல்லி செஸ்ஸி சூடு படத்தின் மூலம்தான் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார் ரங்காராவ். அத்திரைப்படம் தமிழில், 'கல்யாணம் பண்ணிப் பார்' என்ற பெயரில் வெளியானது. அதில் நடிகை சாவித்திரியின் தந்தையாக 60 வயது தோற்றத்தில் திரையில் தோன்றினார்  34 வயது ரங்கா ராவ். தன் மீதான நம்பிக்கை அபரிதமாக இருந்த ரங்காராவுக்கு அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை இல்லை. தான் நடிக்க முன் வந்த கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக உயிரூட்டினார் ரங்காராவ். அன்று முதல் பல படங்களில் அப்பா கதாபாத்திரம் என்றால் எஸ்.வி.ஆ ரை கூப்பிடுங்கள் என்று கூறுமளவிற்கு நித்ய புகழ் பெற்று விளங்கினார். 

ரங்காராவ் ஒரே காட்சியில் நடிந்திருந்தாலும் கூட திரை முழுவதும் அவரே நடிப்பில் நிறைந்திருப்பார்.  30 ஆண்டு திரை வாழ்க்கையில் மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் ரங்காராவ். (தமிழ் படங்கள் 53 தெலுங்குப் படங்கள் 109) நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைதுறையில் பல அடுக்குகளில் ஜொலித்தவர் அவர். மிஸ்ஸியம்மா, எங்க வீட்டுப்பிள்ளை, படிக்காத மேதை, மாயா பஜார், பக்த பிரகலாதா, அன்பு சகோதரர்கள், சர்வர் சுந்திரம், நம் நாடு, சபாஷ் மீனா எனப் பல தமிழ் படங்களில் நடித்த ரங்கா ராவ், அன்னை, சாரதா, நானும் ஒரு பெண், கற்பகம், நர்த்தன சாலா ஆகிய படங்களுக்கு குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். 1968-ம் ஆண்டு பந்தவ்யலு, 1967-ம் ஆண்டு சடாரங்கம் என இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார் ரங்காராவ். இரண்டு படங்களுக்குமே நந்தி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நர்த்தனசாலா படத்தில் கீசகன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்காக ஆப்பிரிக்க ஆசிய சர்வதேசப் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அவரது உருவம் பதித்த அஞ்சல் தலையை 2013-ம் ஆண்டு வெளியிட்டு சிறப்பு செய்தது அரசு.

விஜயவாடாவில் எஸ்.வி.ரங்கா ராவின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்  நடிகர் சிரஞ்சிவி.
விஜயவாடாவில் எஸ்.வி.ரங்கா ராவின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்  நடிகர் சிரஞ்சிவி.

1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஓஸ்மானியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றபின் நலமடைந்து வீடு திரும்பினார். ஆனால் ஜூலை மாதம்  மீண்டும் மாரடைப்பு ஏற்படவே,  மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இயற்கை எய்தினார் ரங்கா ராவ். அவரது உடல் மறைந்தாலும், திரையில் மட்டுமல்ல இன்றளவும் பல ரசிகர்களின் நினைவில் வாழ்கிறார் எஸ்.வி.ரங்காராவ். காலம் சில கலைஞர்களுக்கு வானில் ஒரு பொற்கம்பளத்தை விரித்து, அதில் அழகிய நட்சத்திரமாக ஒரு சிலரை பதித்துவிடும். அதிலொரு துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நம் ரங்காராவ்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com