Enable Javscript for better performance
அத்தியாயம் - 5- Dinamani

சுடச்சுட

  
  edison

   

  தேவை தகுதியா? இல்லை.. முயற்சியா?

  ‘நமது பிறப்பு வேண்டுமானால் ஒரு நிகழ்வாக இருக்கலாம், நமது வாழ்க்கை ஒரு சரித்திரமாக வேண்டும்’ என்றார் டாக்டர் அப்துல் கலாம். ‘சாதாரண மனிதனால் சரித்திரம் படைக்க முடியுமா? இதெல்லாம் விளையாட்டா? வேறு வேலை இருந்தால் பாரப்பா?’ என்று ஏளனம் பேசுபவர்கள் எத்தனை பேர். ‘அப்படிப்பட்ட நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை; ஏதோ பிறந்தோம், நல்ல உடல் நலத்துடன், மனநலத்துடன், ஈட்டிய செல்வத்துடன் வாழ்ந்துவிட்டு போவோம்’ என்று மட்டும் எண்ணுபவர்களில் நீங்களும் ஒருவரா? நீங்கள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதுவாகவே ஆவேன் என்ற நம்பிக்கையை மீறி தடைகளைத் தாண்ட எது உங்களை தடுக்கிறது? உங்கள் உறுதியான நம்பிக்கையை எது தகர்த்தெரிகிறது?

  தமிழினத்தில் உச்சம் தொட்ட தலைவர்கள், நம் முன்னோர்கள், அறிவில் சிறந்த சான்றோர்கள், தமிழ் இலக்கணம், இலக்கியம், இதிகாசங்கள், புராணங்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தத்துவச் சிந்தனையாளர்கள், போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் இந்தியாவிலும், உலகத்திலும் இப்படி எண்ணற்ற பல தலைவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டே போகலாம். பல லட்சம் பேர் தலைவர்களாக, சாதனையாளர்களாக வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வியடைந்திருந்தாலும், சிலபேரைத்தான் இந்த உலகம் நினைவு கூறுகிறது.

  ‘இத்தகைய தலைவர்கள் எல்லாம் பிறவியிலேயே அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள், வீரமிக்கவர்கள், விவேகமிக்கவர்கள், அறிவும் ஆழமும் மிக்க ஜீனியஸ் என்றும், அதிமேதாவிகள் என்றும், வசதிமிக்க கல்வியறிவு பெற்ற பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு கல்விமான்கள் குருவாக, ஆசிரியர்களாக அமைத்திருப்பார்கள், இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், அதிர்ஷ்டம் பெற்றவர்கள், பெரிய போர் வீரர்கள், பெரிய நகரங்களில் வளர்க்கப்பட்டவர்கள், இவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?' என்று நீங்கள் நினைத்தால் அதுதான் உங்கள் சிந்தனையைத் தடுக்கும் அவநம்பிக்கையாக, உங்கள் வளர்ச்சியைத் தகர்ப்பதாக இருக்கிறது என்று அர்த்தம்.

  ஒரு நாள் ஒரு மாணவனை, அவனது ஆசிரியர் அழைத்து, அவனது கையில் ஒரு தாளில் ஏதோ எழுதிக் கொடுத்து, அதை அவனது அம்மாவிடம் கொடு என்று சொன்னார். அவன் வீட்டிற்கு சென்றவுடன் அந்த காகிதத்தை அவனது ஏழைத்தாயிடம் கொடுத்தான். அதைப் பிரித்துப் படித்த அவனது தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அந்த காகிதத்தில் எழுதியிருந்த வாக்கியம்: ‘உங்கள் மகன் எதுவும் கற்றுக்கொள்ள முடியாத ஒரு முட்டாள்; இனிமேல் அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்’ என்று எழதியிருந்தது. இதைப் பார்த்த மகன், ‘என்ன அம்மா, என்னாச்சு?’ என்று அறியாமல் கேட்கிறான் அந்த சிறுவன். அப்போது அந்த தாய் சொன்னாள்: ‘இனிமேல் நீ பள்ளிக்கு போக வேண்டியதில்லை மகனே. ஆனால் ஒருநாள் உலகில் உள்ள பள்ளிகள் எல்லாம் உன்னைப் பற்றி படிக்கும்’ என்று சொன்னாள் அந்த தாய். ஆம் அந்த குழந்தைக்கு கற்றல் குறைபாடு (Dyslexia) இருந்தது. அவனுக்கு காது கேளாமை அந்த வயதில் இருந்தது. அவனது குறைபாட்டை அவள் உணர்ந்திருந்தாள். அவனுக்கு அவன் தாய்தான் ஆசிரியையாக மாறினாள். அவனுக்குப் புரியும் வகையில் பொறுமையாக கற்றுக் கொடுத்தாள்.

  பள்ளிக்கு செல்லவில்லை. பாடம் படிக்கவில்லை. இரயிலில் மிட்டாய் விற்றான்; செய்தி பத்திரிகை விற்றான்; காய்கறி விற்றான். ஒரு நாள் ஓடும் ரயிலில் இருந்து ஒரு 3 வயதுக் குழந்தையைக் காப்பாற்றினான். அந்த குழந்தையின் தந்தை மூலமாக டெலிகிராப் ஆப்பரேட்டர் வேலை கிடைத்தது. சேர்ந்தான். சேர்ந்த கொஞ்ச நாளிலே அவனது கவனக்குறைவால், இரண்டு ரெயில்கள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவன் அந்த வேலையில் இருந்து விரட்டப்பட்டான்.

  அடுத்த வேலைக்குச் சென்றான். ஓடும் ரயிலில் ரசாயன சோதனை செய்தான். அதனால் அங்கும் வேலையில் இருந்து நீக்கப்பட்டான். சிந்தித்தான், சிந்தித்தான், ஏதோ செய்தான். கிறுக்கன் என்றார்கள். எதை, எதையோ செய்து பார்த்தான். மற்றவர்கள் அவனை ஏளனம் செய்தார்கள். தாய் மட்டும் அவனுக்கு ஊக்கமளித்தார். பத்திரிகை வாங்கி விற்கும் வியாபாரத்தை ஆரம்பித்தான். படித்தான். வேலை செய்தான். தனது 19 வயதில் இரவு வேலைக்குச் சென்றான். காலை நேரத்தில் தனது படிப்பின் மூலம் பெற்ற அறிவின் மூலம் சில ஆராய்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். சோதனைகள் பல செய்தான். ஆயிரம் தடவைக்கு மேல் அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முயற்சி தோல்வியில் முடிந்தாலும், முயற்சி செய்வதில் அவன் தோல்வியடையவில்லை. 1300 புது கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தான். 1080 அறிவுசார் கண்டுபிடிப்புகள் மூலம் புது பொருள்களை உற்பத்தி செய்தான். இன்றைக்கு நாம் உபயோகிக்கும் மின்சார பல்பு மற்றும் அதன் ஒட்டுமொத்த மின்சார இயக்கத்தையும் கண்டுபிடித்த அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

  அவர் ஒரு ஜீனியஸ், அறிவில் சிறந்த மேதை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் இல்லை என்கிறார். அவர் மிகப் பெரிய பள்ளியில் படித்தாரா? இல்லை. அவரது பெற்றோர் பணக்காரர்களா? இல்லை. அவர்கள் அதிர்ஷ்டசாலியா? இல்லை. அவர் பள்ளியில் படித்தது ஒரு சில மாதங்கள்தான். ஆனால் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரை 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நாமும் நினைவு கூர்கிறோம். இந்த உலகில் மின்சாரம் இருக்கும் வரை அவர் நினைவு கூரப்படுவார்.

  ஆனால் அவரது மகனை உங்களுக்குத் தெரியுமா? மிகப்பெரிய செல்வந்தரான தாமஸ் ஆல்வா எடிசனின் மகனுக்கு அனைத்து செல்வங்களும் இருந்தன. நல்ல பள்ளியில் படிக்க வைத்தார். நல்ல கார், பங்களா, தேவைக்கு அதிகமான உடைகள், கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தார். குழந்தையை செல்லமாக வளர்த்தார். அவன் எண்ணெய் விற்பனையில் தாமஸ் ஆல்வா எடிசனின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, இது எடிசனின் தற்போதைய கண்டுபிடிப்பு என்று பொய் சொல்லி விற்க முயற்சித்து தனது வியாபாரத்தில் தோல்வி கண்டான். குடிக்கு ஆளானான். மனநோய் தாக்கியது, தோல்வியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், தந்தை 1000 முறை தனது முயற்சியில் தோல்வி கண்டவர். ஆனால் முயற்சி செய்வதில் தோல்வியடைக் கூடாது என்று தான் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை தனது குழந்தைக்கு அவர் சொல்லிக் கொடுக்கவில்லை. செல்லமாக வளர்த்தார், தான் அனுபவத்த கஷ்டத்தை மகன் அனுபவிக்கக் கூடாது என்று அவனை வளர்த்தார். 1000 தோல்வியைத் தாங்கி சாதனை சரித்திரம் படைத்த தாமஸ் ஆல்வா எடிசனின் மகனால் ஒரு தோல்வியைத் தாங்க முடியவில்லை.

  இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள், தனது பிள்ளைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். தான் வாழ்ந்து காட்டி, அதை பிள்ளைகள் உணரச் செய்ய வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். தனது குழந்தைகளைக் கண்டிப்பதற்கு இன்றைக்கு ஆசிரியரைக்கூட, பெற்றோர் அனுமதிப்பதில்லை.

  பெற்றோர்கள் தங்களது கஷ்டத்தை குழந்தைகளிடம் மறைக்கிறார்கள். உழைப்பை மறைக்கிறார்கள். தோல்வியை மறைக்கிறார்கள். தாங்கள் அனுபவித்து கற்றுக்கொண்ட வாழ்க்கையின் பாடங்களை, தங்கள் குழந்தைகள் உணரும்படி எடுத்துக்காட்டாக வாழ்த்து காட்டி அவர்களை அந்த அனுபவத்தில் நடை பயிலவைக்க பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. நேரம் இல்லை. இன்றைக்கு இருக்கும் பிள்ளைகள் அப்பா, அம்மாவின் கஷ்டத்தைக் கேட்டால், ‘ஐயோ இவர்கள் காட்டும் பிலிம் தாங்க முடியவில்லை’ என்று பெற்றோர்களை கேலி செய்யும் நிலைக்கு இன்றைய வாழ்க்கை சூழல் அவர்களை மாற்றியிருக்கிறது. பெற்றோர்களின் உழைப்பை, முயற்சியை, தோல்வியை, வெற்றியை, குழந்தைகள் அனுபவித்து தெரிந்துகொண்டால் மட்டுமே, தோல்விக்கு தோல்வி கொடுத்து வெற்றிபெறும் மனப்பக்குவம் நம் குழந்தைகளுக்கு வரும். நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் கனவுகளை, உங்களது அறிவால், மதிநுட்பத்தால் இலட்சியங்களாக மாற்றினால் - தோல்விக்கு தோல்வி கொடுக்கும் முயற்சியால் - உங்கள் இலட்சியம் விண்மீனாக இருந்தாலும் அது உங்களால் எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது என்பதை உணருங்கள்.

  உங்களுக்கு பெரிய கனவுகளும், இலட்சியங்களும் இருக்கும். ஆனால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? எது உங்கள் நம்பிக்கையைத் தடுக்கிறது. எது உங்களை ஓர் அடி பின்னோக்கி வைக்க வைக்கிறது? உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்த சமூகம், உங்கள் நண்பர்கள் உன்னால் முடியாது, அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, இது உனக்குத் தேவையா, பேராசை பெரும் நட்டம் என்று உன்னைத் தடுக்க, தடுக்க உன் கனவுகள், கற்பனைகள் தொலைகிறதா?

  யானை காட்டை அழிக்கிறது. காட்டில் பாதையை உருவாக்குகிறது, மலைகளில் இருந்து பெரிய, பெரிய மரங்களை அனாயசமாக தும்பிக்கையில் தூக்கி வருகிறது. ஆனால் அவ்வளவு வல்லமை பெற்ற யானையை ஒரு சிறு கயிற்றை வைத்து, ஒரு சிறிய கம்பில் கட்டிவைத்து, யானையால் அதைத் தாண்டி மீறி செல்ல முடியாது என்ற நம்பிக்கையை அதன் மூளையில் திணித்து அதை தனது நம்பிக்கையின் அடிமையாக்குகிறான் யானைப் பாகன். வேலைக்குச் சாப்பாடு தானாகக் கிடைக்கிறது. முயற்சியைக் கைவிடுகிறது. சோம்பல் தலைக்கு ஏறுகிறது தனது வல்லமையை மறந்து, சொல்லப்பட்ட, திணிக்கப்பட்ட நம்பிக்கைகளின் அடிமையாக யானை மாறுகிறது. முயற்சியில்லாமல் உனக்கு ஒன்று கிடைக்கிறது என்றால் அது உனது வீழ்ச்சிக்கு முதல் அடி என்பதை உணர்.

  தனது வல்லமை தெரியாத யானை, பசியாற முயற்சியில்லாமல், அப்பாவி விவசாயியின் தோட்டத்தில் கிடைக்கும் உணவால், அப்பாவி யானையாக மாறி, இன்றைக்கு தமிழக அரசிற்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் சின்னத்தம்பி யானை போல மாறி தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது. காட்டில் வசிக்கும் விலங்குகள் தனது இருப்பிடத்தை மனிதர்களின் ஆசைக்கும், ஆக்கிரமிப்பிற்கும் தொலைத்துவிட்டு பசிக்கு காட்டைவிட்டு நாட்டிற்குள் வருகிறது. அதன் பசியை பசுமை உணவு வேலி மூலம் தீர்க்க தெரியாதவர்கள், அதை காட்டிற்குள் விரட்டுவதற்கு தீவிர முயற்சி செய்கிறார்கள்,

  செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

  செய்யாமை யானுங் கெடும். (குறள் 466)

  காட்டு விலங்கிற்கு பசி தீர்ந்தால் அது யாரையும் ஒன்றும் செய்யாது. நாட்டு விலங்குகளான மனிதர்கள் பசிக்கு தேவைக்கு மீறி சேர்க்கும் எண்ணம்தான் அனைத்து துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணமாகிறது. ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

  அதுபோலத்தான், இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது, உன்னையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. ஆனால், நான் தனித்துவமானவன், தனித்துவமானவள் என்று நீ நினைத்த அடுத்த வினாடி, வரலாற்றில் உனக்காக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுவிடும். அந்த பக்கத்தை வருங்கால சந்ததி திரும்பத் திரும்ப படிக்கவைப்பது உங்கள் கனவில் இருக்கிறது, கனவை இலட்சியமாக மாற்றும் உனது அறிவார்ந்த வல்லமையில் இருக்கிறது.

  நான் தனித்துவமானவன், தனித்துவமானவள் என்று நம்பியவர்களுக்கும், சாதனை சரித்திரம் படைத்த நபர்களுக்கும், என்னால் இது முடியுமா என்று கேள்வி கேட்பவர்களுக்கும் உள்ள இடைவெளி என்ன, அதை எவ்வாறு வென்றெடுப்பது?

  உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai