சுடச்சுட

  
  PONRAJ041949

   

  உயிர் காக்கும் உயிரி தொழில் நுட்பம்!

  29 மே 2005 அன்று 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக 11-வது குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களோடு, நானும், அரசுப் பிரதிநிதிகளோடு ஐஸ்லேண்டுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஒலாபுர் ராக்னர் கிரிம்சன் அழைப்பின் பேரில் சென்றோம். இங்கு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஐஸ்லேண்டின் 10 சதவிகித பொருளாதாரம் சார்ந்திருந்தது. இங்கு நிலநடுக்கம் என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம். அதை அந்த நாடு எப்படி தொழில்நுட்பரீதியில் மேலாண்மை செய்து அழிவில் இருந்து மக்களை எப்படிப் பாதுகாக்கிறது? புவி-வெப்ப சக்தி (GEO THERMAL ENERGY) மூலம் எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் எரிசக்தியைக் கொண்டுபோய் சேர்க்கிறார்கள், ஹைட்ரஜன் எரிபொருள் செல், மற்றும் உயிர் தொழில்நுட்பத்தில் அவர்களது ஆராய்ச்சி பற்றி விரிவாகக் கண்டறிந்தோம்.

  பயணத்தில் ஒரு நாள் காலை எங்களை அழைத்துச் செல்வதற்கு காருக்குப் பதிலாக பஸ் வந்தது. அதில் ஐஸ்லாண்ட் நாட்டின் ஜனாதிபதி கிரிம்சன் வந்தார். பஸ்ஸில் ஏறச் சொன்னார்கள். டாக்டர் கலாம் உட்பட அனைவரும் ஏறினோம். பஸ் நேராக ஒரு எரிபொருள் நிரப்பும் கிடங்கிற்கு சென்றது. அது ஓர் உயிரி எரிபொருள் (Bio fuel) நிரப்பும் நிலையம். பஸ்ஸில் உயிரி எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டது. நம் நாட்டில் எப்போது இந்த நிலைமை ஏற்படும் என்ற ஏக்கம் டாக்டர் கலாமிற்கு வந்தது. பெட்ரோல், டீஸல் இன்றி பயோ எரிபொருளை முழுமையாக அவர்கள் வாகனங்களுக்கு 2005-லேயே உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

  எத்தனால் உற்பத்தி செய்வதில் பிரேசில்தான் உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய நாடு, அமெரிக்காவிற்கு அடுத்து. 2017-இல் உலக எத்தனால் உற்பத்தியில் 85 சதவிகிதம் அமெரிக்காவும், பிரேசிலும் உற்பத்தி செய்கின்றன. உலகத்தில் பிரேசில்தான் நீடித்த நிலைத்த உயிரி எரிபொருள் பொருளாதாரத்தைக் கட்டமைத்தது. கரும்பில் இருந்து மாற்று எரிபொருளாக எத்தனால் உற்பத்தி செய்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காண்பித்த நாடு பிரேசில்தான்.

  டாக்டர் அப்துல் கலாம், 15 August 2005 குடியரசு தின உரையில் 2030-க்குள் எரிசக்தி சுதந்திரத்தைப் பெற்ற நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்ற இலக்கை நிர்ணயித்தார். அதில் ஒரு பகுதியாக 25% உயிரி எரிபொருள் மற்றும் எத்தனால் உபயோகத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அதை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 100% வாகன உபயோகத்திற்குக் கொண்டுவர வேண்டும். இதைச் செயல்படுத்தத் தேவையான கொள்கைகளைக் கொடுத்தார். ஆனால் 14 ஆண்டுகளாகியும் அது பயன்பாட்டிற்கு வரவில்லை.

  இந்தியாவின் கரும்பு உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேருக்கு 80 டன். ஆனால் தமிழகத்தில் நீடித்த நிலைத்த கரும்பு உற்பத்திமுறையின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு 180 டன்னிற்கு மேல் உற்பத்தி செய்ய இயலும். எத்தனால் கொள்கையைச் சரியாக அமல்படுத்தியிருந்தால், இன்றைக்கு கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலையின் முன் கோடிக்கணக்கான நிலுவைத்தொகைக்காக போராடும் நிலைமை ஏற்பட்டிருக்காது. 2030-க்குள் ஆண்டிற்கு 60 மில்லியன் காட்டாமணக்கு எண்ணெய் உயிரி எரிபொருள் உற்பத்தி வல்லமை இருந்தும், அதை அரசு கொள்கையாக அமல்படுத்தாததால் இன்றைக்கும் அதன் பலன் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை.

  இந்தியாவில் காட்டாமணக்கு என்ற ஜாட்ரோபாவின் வளர்ச்சி குறைவாக இருப்பதாலும், காட்டாமணக்கு விதையில் இருந்து எடுக்கும் எண்ணெய்யின் உற்பத்தி திறன் 20 முதல் 25 சதவிகிதம் மட்டுமே இருப்பதாலும், அதனால் காட்டாமணக்குப் பயிரிடும் மானாவாரி விவசாயிகள் நஷ்டப்படுவதால் இந்த காட்டாமணக்கு விதைகளின் செயல்திறனை மேம்படுத்தும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியை வேளாண்மை பல்கலைக் கழகங்கள் தொடங்க வேண்டும் என்று இந்திய வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர்களிடம் கலாம் வேண்டுகோள் விடுத்தார். மறுபுறம் உயரி தொழில்நுட்பம் மூலம் இதை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி எங்கு நடக்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.

  டாக்டர் ஹென்றி டேனியல்

  டாக்டர் ஹென்றி டேனியல் என்ற பேராசிரியர் அமெரிக்காவில் ஆர்லாண்டோவில் இருக்கும் UCF (University of Central Florida)வில் உயிரி தொழில்நுட்பத்திலும், பல வியாதிகளுக்கு தடுப்பூசி மருத்துவத்திலும் சிறப்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அக்டோபர் 2009-இல் டாக்டர் கலாமுடன் Congress of Neurological Surgeons (CNS) - 2009 என்ற மாநாட்டில் கலந்துகொள்ள நியூ ஆர்லியன்ஸ் செல்லும்போது, அவரைச் சந்தித்து கலந்துரையாடினோம்.

  ஐரோப்பாவின் நடுத்தர வயது மக்களில் ஒவ்வொரு மூன்றாவது நபரை அழித்த பிளாக் பிளேக் என்ற கொடிய நோய்க்கு வாய்வழியாக கொடுக்கும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார். அவரது முதல் நிலை ஆராய்ச்சி நல்ல பலன்களைத் தந்திருக்கிறது என்பதை NFECTION AND IMMUNITY என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையின் 2008 ஆகஸ்டு பதிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. எந்த மரபணு சர்க்கரை வியாதிக்கு இடம் கொடுக்காதோ அந்த மரபணுவை HUMAN GENOME PROJECT மூலம் கண்டறிய வேண்டும். அந்த மரபணுவை தாவரத்தில் இருந்து பிரித்து எடுத்து, ஜீன் டார்கெட்டிங் முறையில் என்டோஜீனஸ் ஜீனாக மாற்றி அமைக்க வேண்டும். அதை ஜீன் துப்பாக்கி மூலமாக தாவர செல்களில் செலுத்தி (Biolistics), அந்த தாவரத்தின் இலைகளை உலரவைத்து மருந்தை உருவாக்கும் வழிமுறைகளின் மூலம் சர்க்கரை வியாதியில் இருந்து காக்கும் தடுப்பு மருந்தாக மாற்றியிருக்கிறார். அதை அப்போது சோதித்துப் பார்க்கும் முதல் நிலைக்கு (Phase I Trial) அனுப்பியிருக்கிறார் என்பதை பற்றிய ஆராய்ச்சி விளக்கம் அளித்தார். சர்க்கரை வியாதியைப் போலவே காலரா, மலேரியா, ஹீமோபீலியா போன்ற தொற்று நோய்களுக்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பதை விளக்கினார். இது பல ஆராய்ச்சி நிலைகளைக் கடந்து வியாதிகளைத் தீர்க்கும் மருந்துகளாக, தடுப்பு மருந்துகளாக வரும் வாய்ப்பு மிகவும் அருகில் இருக்கிறது.

  இது அவர் உயிரி தொழில்நுட்பத்தைக் கொண்டு மனித வியாதிக்காகக் கண்டறிந்த தடுப்பு மருந்துகளைப் பற்றியது. அதே உயிரி தொழில்நுட்பம் எப்படி தாவரங்களைப் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து காக்கிறது மற்றும் தாவரங்களின் அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பற்றியும், டாக்டர் ஹென்றி டானியேலுடன் கலந்துரையாடினோம். அமெரிக்கா 2030- க்குள் ஆண்டுதோறும் 1.3 பில்லியன் டன் உயிரி எரிபொருளை உற்பத்தி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. எரிபொருள் தாவரங்களான கரும்பு, மக்காச்சோளம், ஜாட்ரோபா, புங்கம் போன்ற தாவரங்களில் இருந்து உற்பத்தியாகும் 90 சதவிகிதம் சர்க்கரை மூலம் எத்தனால் உற்பத்தி செய்தால் 130 பில்லியன் கேலன் செல்லூலோசிக் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது அமெரிக்கா.

  இந்த இலக்கை எட்டுவதில் ஏற்படும் சோதனைகள் மொட்டுகளைத் தின்னும் பூச்சிகள் அதனால் வைரஸ்களின் மூலம் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க தெளிக்கப்படும் பூச்சி மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்த்து, அதிக விளைச்சலை உருவாக்கி எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய உயிரி தொழில்நுட்பம் மூலம் மட்டுமே அதை சரிசெய்ய முடியும் என்றார் டாக்டர் ஹென்றி டேனியேல். அவர் பீட்டா குளுகோஸிடேஸ் என்சைம் என்ற மரபணுவைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் உருவாக்கப்பட்ட எரிபொருள் பயிர்களின் குளோரோபிலாஸ்ட் ஒட்டுமொத்த தாவரத்தின் எடையை 190 சதவீதம் அதிகரித்திருக்கிறது, இலையின் பரப்பை 1605 சதவீதமாகவும், மொட்டுகளின் இடை நீளத்தை 180 சதவீதமாகவும், உயரத்தை 145 சதவீதமாகவும், சுரப்பி ட்ரைக்கோம்கள் மேல் இலை பகுதி 1033 சதவீதம், அடி இலைப்பகுதி 765 சதவீதமாகவும் அதிகரித்தது. இப்படிப்பட்ட உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் விளைவால் அமெரிக்கா அதன் உயிரி எரிபொருள் தேவையின் இலக்கை அடைவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இந்த உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் மரபணு எரிபொருள் பயிர்களை உருவாக்கி, கலப்பின விதைகளைக் கொண்டு பெருக்கினால் நமது நாட்டின் எரிபொருள் தேவையை உயிரி எரிபொருள் உற்பத்தியை இரண்டு மடங்காக்கி இலக்கை அடைய முடியும்.

  வளர்ந்த நாடுகள் இன்றைக்கு மருத்துவத் துறையிலும், உணவு மற்றும் விவசாயத் துறையிலும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுத்து மனித வாழ்வை ஆரோக்கியமாக வைக்கவும், வாழ்நாளை நோய்களில் இருந்து காத்து நீடிக்கவும், விவசாயப் பயிர்களை பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களின் அதீத தேவையிலிருந்து காக்கவும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறார்கள்.

  வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக் நாடுகள்தான் பயோடெக்னாலஜி துறை ஆராய்ச்சியில் அதிகமாக முதலீடு செய்யும் நாடுகள். மேற்கண்ட நாடுகள்தான் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி துறைகளான திசு பொறியியல் (Tissue Engineering) மற்றும் மீளுருவாக்கம் (Regeneration), நொதித்தல் (Fermentation), Polymerase Chain Reaction (PCR) - பாலிமரேஸ் தொடர் வினை, அதாவது டி.என்.ஏ மாதிரியில் இருந்து மரபணு கைரேகை (Genetic Fingerprinting) முறை மூலம் பல டி.என்.ஏ.வை உருவாக்கும் முறை, நானோ தொழில்நுட்பம், குரோமோட்டோகிராபி, டி.என்.ஏ. வரிசை, செல் அடிப்படையிலான மதிப்பீடு போன்ற துறைகள்தான்.

  பயோ டெக்னாலஜி துறை ஆராய்ச்சியின் பலனை உபயோகப்படுத்தும் முக்கியமான துறைகள்: நோய் தீர்க்கும் மருந்து, மாத்திரைகள் உற்பத்தித் துறை, மருத்துவத் துறை, சுகாதாரத் துறை, உணவுத் துறை, விவசாயத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் துறைகள் ஆகியவையாகும். இந்தத் துறைகள் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. பயோடெக்னாலஜி துறை படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பு மட்டும் படித்தால் மிக்க பலன் இல்லை. மேல்பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் நோக்கில் படிக்க வேண்டும். தங்களை அதற்காக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  பயோ டெக்னாலஜி துறையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2016-இல் USD 364 பில்லியனில் (ரூ.25 லட்சம் கோடி) இருந்து 2021-இல் USD 584 பில்லியனாக (ரூ.40 லட்சம் கோடி) உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பயோ தொழில்நுட்பத் துறையில் உலகத்தின் பங்கில் இந்தியாவின் பங்கு 2 சதவீதம்தான். பயோடெக்னாலஜி துறையில் உலகத்தில் இந்தியா 12-ஆவது இடத்திலும், ஆசியா-பசிபிக் பகுதியில் இந்தியா 3-ஆவது இடத்திலும் இருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, மருந்து உற்பத்தியில் US Food and Drug Administration (USFDA) அங்கீகாரம் பெற்ற இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. ஹெப்படைட்டீஸ் - பி தடுப்பு மருந்தை உலகத்தில் இந்தியாதான் அதிகமாக உற்பத்தி செய்கிறது.

  இந்தியாவில் இருக்கும் 800 பயோ டெக்னாலஜி கம்பெனிகளில் முதல் 10 இடத்தில் இருக்கும் பயோ தொழில்நுட்ப நிறுவனங்களில் 7 மருந்து உற்பத்தியிலும், 3 பயோ தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய உற்பத்தித் திறனைப் பெருக்கும் நிறுவனங்களாக இருக்கின்றன. 2017- இல் இதன் மொத்த சந்தை மதிப்பு USD 11.6 பில்லியனாக (ரூ.81,000 கோடி) இருந்தது. 2025-இல் பயோ தொழில்நுட்ப துறை இந்தியாவில் USD 100 பில்லியன் (ரூ.7 லட்சம் கோடி) ஆக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்திய அரசு USD 5 பில்லியன் (ரூ.35,000 கோடி) அளவிற்கு மனித வளத்தை உருவாக்குதலிலும், இந்தத் துறைக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதலிலும், ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கும் அறிவியல், மருத்துவம் மற்றும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறையும் இணைந்து செயல்பட முதலீடு செய்தால்தான் அது நடக்கும். ஆனால் 2017-18 பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.2,222.11 கோடி (USD 333.31 million) தான் ஒதுக்கியிருக்கிறது. ரூ.35,000 கோடி எங்கே? ரூ.2222 கோடி எங்கே? இதை வைத்து எப்படி ரூ.7 லட்சம் கோடி அளவில் பயோ தொழில்நுட்ப துறை வளரும் என்பது புரியாத புதிர். இதையும் தாண்டி இந்தியா சாதிக்க வேண்டுமென்றால் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் எவை?

  அறிவியலுக்கு அறிவியலால் பிரச்னை என்றால் அதற்குத் தீர்வு உண்டு. அறிவியலுக்கு அரசியலால் பிரச்னை என்றால், அந்த அரசியலை அறிவார்ந்த அரசியலால் வெல்லும் தலைமையால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai