அத்தியாயம் - 42

கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்புகளில் 44% இறப்புக்கு, சாக்கடை அடைப்பை எடுக்க சரியான தொழில்நுட்பத் தீர்வுகள் இதுவரை இல்லாததுதான் ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.
அத்தியாயம் - 42

கழிவுகளை அகற்ற.. நவீன தொழில்நுட்பம்!

அறிவுடையார் எல்லா முடையார்; அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். (குறள் 430)

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர். அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். அறிவைப் பயன்படுத்தினால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு.

இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் அடைத்தலை நீக்க, மனிதர்கள் அந்த உயிருக்கு ஆபத்தான பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி எடுக்கும் தொழில். எந்தவொரு பாதுகாப்பான உபகரணங்களும் இல்லாமல், சரியான நெறிமுறைகளைப் பின்பற்றாமல் மனித மலம் சார்ந்த விஷயங்களை விஞ்ஞானமற்ற முறையில் கையாளுதல் - மனிதக் கழிவுகளை, பாதாளச் சாக்கடை கழிவுகளை மனிதனே அகற்றும் தொழிலாகும்.

சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், சுகாதாரத் தொழிலாளர்கள் தொடர்ந்து சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளில் நுழைந்து சுத்தப்படுத்த அவர்களது வறுமை காரணமாக உட்படுத்தப்படுகிறார்கள். மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது கடந்த 20 ஆண்டுகளில் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

1993 முதல் நாடு முழுவதும் பதிவான 323 இறப்புகளில் தமிழகத்தில் மட்டும் 144 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கர்நாடகாவில் 60 தொழிலாளர்கள் இறந்தனர். உத்தரப் பிரதேசத்தில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளில் வேலை செய்யும்போது 71 உயிர்கள் பறிபோனது. 2016-ம் ஆண்டில் 11 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தமிழக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஐந்து பேர் செப்டிக் டேங்க் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது சென்னையில் இறந்தனர்; விருதுநகரில் இரண்டு பேரும், மதுரை, திருவள்ளூர், திருச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்தனர்.

சுகாதாரத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் உறுப்பினர்கள் இது உண்மையான நிலவரம் அல்ல என்று பத்திரிகைகளில் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1,340 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் 294 இறப்புகள் பதிவாகியுள்ளன. தீங்கு விளைவிக்கும் வாயுக்கள், நச்சு திரவங்கள் மற்றும் ஆபத்தான சூழல் ஆகியவை மரணத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

சஃபாய் கரம்ச்சாரி அந்தோலனின் மாநில அமைப்பாளர் டி.வி. சாமுவேல் கூற்றுப்படி, “கடந்த இரண்டு ஆண்டுகளில் செப்டிக் டாங்குகள் மற்றும் சாக்கடைகளில் இறந்த தொழிலாளர்களின் பெயர்கள் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் பட்டியலில் இல்லை.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 426 தொழிலாளர்கள் மட்டுமே பாதாளச் சாக்கடை தொழிலில் ஈடுபட்டனர். ஆனால் தமிழ்நாட்டின் வெறும் 8 நகரங்களில் நாங்கள் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, இதுபோன்ற 3,000 தொழிலாளர்கள் இருந்தனர் என்று கூறுகிறார்கள்.

ஆனால் சமூக ஆர்வலர்கள் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் வழக்குகள் தொடர்ந்து வெளிவருகின்றன என்கிறார்கள். டிசம்பர் 22, 2017 அன்று, கோவையில் ஆர்.எஸ். புரத்தில் தங்க ஸ்மிதரியில் இருந்து தங்க தூசி துகள்கள் சேகரித்த மூன்று ஆண்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர். மார்ச் 2017-ல், கடலூரில் மூச்சுத்திணறலால் ஒரு மேன்ஹோலில் மூன்று ஆண்கள் இறந்தனர். கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவதில் இருந்துவிடுபடுவதாக அரசு கூறினால், ஒவ்வோர் ஆண்டும் மக்கள் ஏன் தொடர்ந்து இறக்கின்றனர்? பல ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றனர்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்புகளில் 44% இறப்புக்கு, சாக்கடை அடைப்பை எடுக்க சரியான தொழில்நுட்பத் தீர்வுகள் இதுவரை இல்லாததுதான் ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது. இதுபோன்ற ஒரு வேலைக்கு செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிக்கு ரூ.5000-க்கும் மேல் ஆகிறது. ஆனால் ரூ.1,000 சம்பளம் பெற்றுக்கொண்டு தங்கள் உயிரை வறுமைக்காக பணயம் வைக்கும் நிலையில் துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்கள் இந்த ஆபத்தான தொழிலை மேற்கொள்கிறார்கள். முறையான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாதது, இதற்கான தொழில்நுட்பம் இல்லாதது பெரும்பாலான தொழிலாளர்களை உயிரை பணயம் வைத்து இத்தகைய வேலைகளைச் செய்ய வைக்கிறது. இதுபோன்ற இறப்புகளைக் குறைக்க அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2018 டிசம்பர் 31 வரை) கழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கையை வழங்குமாறு கேரளா பாராளுமன்ற உறுப்பினர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கேட்ட கேள்விக்கு லோக்சபாவில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே வழங்கிய பட்டியலில், உத்தரப் பிரதேசத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக தமிழ்நாடு 2013 முதல் 2018 வரை 144 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பதிவான 144 இறப்புகளில், 141 வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர, வேறு எந்த மாநிலமும் கைமுறையாக தோண்டுவதற்காக மக்களை ஈடுபடுத்தியதற்காக முதலாளிகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்றும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி.. இதற்கு இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வே இல்லையா? இல்லை.. இதை நோக்கி எந்தப் பொறியியல் கல்லூரிகளும் ஆராய்ச்சி ஆய்வுகளில் ஈடுபடவில்லையா என்ற கேள்விக்குப் பதிலாக இந்த சிக்கல்களைத் தீர்க்க, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான ‘ஜென்ரோபோடிக்’ புதுமையான, புத்திசாலித்தனமான, மேன்ஹோல் சுத்தம் செய்யும் ரோபோவை ‘பாண்டிகூட்’ என்ற பெயரில் உருவாக்கியிருப்பது இந்த மனிதக் கழிவை மனிதனே அள்ளும் இழிவு நிலையில் இருந்து மனிதனை மீட்கும் உன்னத முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த குட்டிப்புரம் MES Engineering College-ல் பி.டெக் படித்த மாணவர்கள் விமல் கோவிந்த் எம்.கே. ரஷீத், கே. அருண் ஜார்ஜ் மற்றும் நிகில் என்.பி மற்றும் சில மாணவர்களோடு இணைந்து இரும்பு மனிதனை (Robortics Iron Man) ரோபாட்டிக்ஸ் ஜெனரேஷன்-1 தொழில்நுட்பத்தால் உருவாக்கினார்கள். அது சிங்கப்பூரில் இருக்கும் ‘அமெரிக்கன் சொசைட்டி ஆப் ரிசர்ச்’ சிறந்த கருத்துருவாக்கத்திற்கான விருதைப் பெற்றது. படிப்பிற்குப் பின் வேலைக்கு சென்ற மாணவர்களை கேரளா தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவசங்கரன் IAS அழைத்து கேரளா டெக்னோபார்கில் இடமும், ரூ.10 லட்சம் நிதி உதவியும் அளித்து, ‘‘பாதாளச் சாக்கடை அடைப்பை மனிதர்கள் நீக்கும் இந்த அவலத்தை மாற்ற ரோபாட்டிக்ஸ் மூலம் தொழில்நுட்ப தீர்வை உருவாக்க முடியுமா?’’ என்று கேட்டார்.

‘கேரள ஸ்டார்ட்அப் மிஷன்’ மற்றும் ‘கேரள நீர் ஆணைய’த்தின் (Kerala Water Authority) ஆதரவுடன், மூவரும் இந்த விஷயத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கினர். இந்தத் திட்டத்தை உருவாக்க கேரள ஸ்டார்ட்அப் மிஷன் அவர்களுக்கு இடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியது. மேன்ஹோல் பரிமாணங்கள், உள் சூழல், சாத்தியமான அபாயங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கேரளாவின் நகரங்களில் உள்ள பல்வேறு மேன்ஹோல்களின் தரவை KWA அவர்களுக்கு வழங்கியது. ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளுக்குப் பிறகு, அவர்கள் ரோபோவை உருவாக்கத் தொடங்கினர்.

2017-ம் ஆண்டில், இந்த மூவர் தொடங்கிய ஜென்ரோபோடிக்ஸ் ‘பாண்டிகூட்’ ரோபோவின் முதல் முன்மாதிரி ஓர் ஆய்வகச் சூழலில் சோதிக்கப்பட்டது. கடுமையான சோதனைகள் மற்றும் மேம்பாடுகளுக்குப் பிறகு, ஜென்ரோபோடிக்ஸ் இறுதியாக பிப்ரவரி 2018-ல் பாண்டிகூட்டின் முதல் வணிக மாதிரியை நிறுத்தியது. இந்த புதிய கண்டுபிடிப்பை ‘எலக்ட்ரானிக்ஸ்பார்யு.காம்’ என்ற ஆராய்ச்சி இதழ் இவர்களை அங்கீகரித்து விரிவான கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

இந்த ‘பாண்டிகூட்’ ரோபாட் மேன்ஹோலுக்குள் சென்று ஒரு சாக்கடை துப்புரவாளர் செய்யும் அனைத்து செயல்களையும் செய்யும். ‘பாண்டிகூட்’டில் இரண்டு கட்டமைப்புகள் உள்ளன. ஒன்று ரோபோடிக் யூனிட் - ஒரு கை மற்றும் நான்கு கால்கள் மேன்ஹோலுக்குள் நுழைந்து துப்புரவு நடவடிக்கையை மேற்கொள்ளும். மற்றொன்று ஒரு கட்டுப்பாட்டுச் செயலகம், இது ‘பாண்டிகூட்’டைக் கட்டுப்படுத்தும் அல்லது கண்காணிக்கும் நபருடன் மேன்ஹோலுக்கு வெளியே இருக்கும்.

ரோபோடிக் யூனிட்டில் ஒரு நிலையான, நீர்புகா, இரவு பார்வை கேமரா (Night Vision Camera) உள்ளது, இது 4-ம் ரெசல்யூஷன் வீடியோக்களையும் படங்களையும் சரியான நேரத்தில், தண்ணீரின் முன்னிலையில்கூட அனுப்பும். மேன்ஹோல் பரிமாணங்கள், மேன்ஹோலுக்குள் உள்ள பொருள் மற்றும் விஷ வாயு, ரசாயனங்கள், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் பல சுற்றுச் சூழல் அளவுருக்களை அளவிட பல்வேறு சென்சார்கள் உதவுகின்றன. ரோபோவின் கை 360 டிகிரி சுற்றில் இயங்கும் திறன் கொண்ட ஐந்து டிகிரி சுதந்திரத்தைக் (5 degrees of Freedom) கொண்டுள்ளது. கழிவுகளைச் சேகரிக்க 18 லிட்டர் திறன் கொண்ட ஒரு வாளி அலகு இணைக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் மேம்படுத்தி ‘பாண்டிகூட்2.0’ புதிய அம்சங்களோடு இதை உபயோகிப்பவர்களுக்கு சுலபமாக இயக்குவதற்கு எளிய முறையில் தொடுதிரை வசதியோடு, அள்ளும் வாளியின் அளவை 25 லிட்டராக்கி, மேம்படுத்தப்பட்ட AI மற்றும் குரலால் இயக்கப்படும் கட்டுப்பாடுகளோடு உருவாக்கியிருக்கிறார்கள்.

ரோபோ நெகிழக்கூடிய கார்பன் நானோ ஃபைபரால் ஆனது. மேன்ஹோலுக்குள் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் திரவங்களின் அபாயங்களைக் குறைக்க, ரோபோவில் சில எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே உள்ளது. நீர் புகாத அமைப்பு மற்றும் நியூமேடிக்ஸ் பயன்படுத்துகிறது.

‘பாண்டிகூட்’டின் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கற்றுக்கொள்வதை எளிமையானதாக ஆக்கியிருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத ஒரு நபர்கூட ஒரு வாரப் பயிற்சியில் இதைப் பயன்படுத்த முடியும். எளிமையான தொடுதிரை மற்றும் உள்ளூர் மொழி ஒருங்கிணைப்பு மூலம், ‘பாண்டிகூட்’டை யாராலும் பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் சாக்கடை துப்புரவுப் பணியாளர்களை ‘பாண்டிகூட்’டை இயக்குபவர்களாக மாற்றி அவர்களின் வேலைகளைப் பாதுகாக்க முடியும்.

கேரள அரசின் உதவியுடன், ஜென்ரோபோடிக்ஸ் 20 யூனிட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியிருக்கிறார்கள். ஒரு ‘பாண்டிகூட்’ இயந்திரம் ரூ.20 லட்சம் ஆகிறது. இது இந்தியாவின் காப்புரிமையை பெற்றிருக்கிறது. இந்த ரோபோ கேரளா, தமிழ்நாடு மற்றும் சமீபத்தில் ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓர் IAS அதிகாரியின் ஊக்குவிப்பால் கேரளா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு காலம் காலமாக மனிதக் கழிவை மனிதனே அள்ளும் வழக்கத்திற்கு நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்று கேரளா நிரூபித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.1 கோடியை 141 பேர் இறப்பிற்கு நிவாரணம் வழங்கிவிட்டு நிம்மதியாக மனிதனே மனிதக் கழிவை அல்லும் அவலநிலையை நிரந்தரமாக வைத்துக்கொண்டு சமூக நீதியைப் பற்றி மட்டும் பேசிவிட்டு கடந்து செல்கிறோம்.

ஆனால் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு என்ற பெருமை நமக்கு உள்ளது. ஆனால் ஆராய்ச்சி செய்து பல்வேறு பிரச்னைகளுக்குத் தொழில்நுட்ப தீர்வைக் கொடுத்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழக மாணவர்களின் கனவுகள், புராஜெக்ட் என்ற அளவில் கானல் நீராக கரைந்துதான் போய்க்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களை ஊக்குவித்து அரசோ, கல்லூரி நிர்வாகமோ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று அதை சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாக மாறும் தொழில்நுட்ப கருவிகளைச் செயலாக்கத்திற்கு கொண்டுவரும் நிலை, தமிழ்நாட்டில் இல்லை என்று எண்ணி வேதனைப்படும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

இதில் ஒரே ஒரு விதிவிலக்கு, கும்பகோணம் நகராட்சி கமிஷனர் கே. உமாமகேஸ்வரி மட்டுமே. தமிழ்நாட்டில் கும்பகோணம் நகராட்சியின் கூற்றுப்படி, 45 வார்டுகளை உள்ளடக்கிய கோயில் நகரத்தின் 70% நிலத்தடி வடிகால் அமைப்பின் கீழ் இருந்தது. 19,500 UGD (Under Ground Drainage) இணைப்புகளைக் கொண்ட நகராட்சி, கழிவுநீர்ப் பாதைகளில் அடைப்புகளை அகற்றுவதற்காக சில்ட் அகற்றும் வாகனங்களை இதுவரை நம்பியிருந்தது. ஆனால் அதைவிட சுத்தமாக சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் அரை தானியங்கி ‘பாண்டிகூட்’ ரோபோ தமிழகத்தில் முதல் முறையாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) முன்முயற்சியின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டு, மனித கட்டுப்பாட்டு ‘பாண்டிகூட்’ ரோபோவால் மாதத்திற்கு சுமார் 400 மேன்ஹோல்களைச் சுத்தம் செய்கிறது கும்பகோணம் நகராட்சி.

எனவே இத்தகைய நிலையில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்களை மீட்க வேண்டும்; மீண்டும் உயிர்ப் பலிகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் நமக்கு முன் உதாரணமாக இருப்பது கேரளா மாணவர்கள் உருவாக்கிய ‘பாண்டிகூட்’ என்ற ரோபாட். இதை அனைத்து நகராட்சிகளும், மாநகாராட்சிகளும் வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில், இதை செய்யும் திறன் உள்ள கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்கி இதைவிட மேம்பட்ட கருவிகளைச் செய்து தருமாறு உத்தரவிட்டால் கண்டிப்பாக இதைவிட மேம்பட்ட கருவிகளை பல்வேறு மாற்றுச் சிந்தனைகளைப் புகுத்தி செய்து தரும் வல்லமை நம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உண்டு. செய்வார்களா?

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள். vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com