அத்தியாயம் - 40

உண்மையில் தோரியம் மின்னாற்றலை உற்பத்தி செய்ய யுரேனியம் அணுமின்சாரத்தில் வரும் புளுட்டோனியம் கழிவுகளை உபயோகித்துவிடலாம்.
அத்தியாயம் - 40

எரிசக்தி பாதுகாப்பு.. சுதந்திரம்.. எது இந்தியாவின் தேவை?

2019-ல் நாம் இருக்கிறோம். இப்போது, இனிவரும் காலங்களில் நிலையான எரிசக்தி மற்றும் மின்சாரம் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி உலக அளவில் உருவாகிக்கொண்டு வருகிறது, அதற்கு அடிப்படையாக இரண்டு எரிசக்தி மாற்று வழிகளை நிர்ணயிக்கிறது. அதாவது முதலில் போக்குவரத்தில் உபயோகப்படும் பெட்ரோலியம் மற்றும் டீசல் எண்ணெய்யை மின்சாரத்துக்கு மாற்றுவது என்பது ஒன்று. மற்றொன்று மின்சார உற்பத்திக்காக எடுக்க எடுக்க குறைந்துகொண்டு இருக்கும் அதிக கார்பன் கொண்ட வரையறுக்கப்பட்ட நிலக்கரி விநியோகம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், கடல் வழி மின்சாரம், அணு மின்சாரம் மற்றும் உயிரி உற்பத்தி ஆற்றலுடன் கூடிய எரிவாயு போன்றவை தான் அடுத்த நீடித்த நிலைத்த மின்சார உற்பத்தியை நிர்ணயிப்பதாக அமைகிறது. இதை நோக்கிய எரிசக்தி சுதந்திரக் கொள்கைகளை உலக நாடுகள் இன்றைக்கு உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த முன்முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாற்றத்தின் அவசியத்தை டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் 2005-ல் உணர்ந்தார். அப்போது அவர் 11-வது குடியரசு தலைவராக இருந்தார். அவரது தலைமையில் ஆலோசகர்கள் ஏர் கமாண்டோர் ஆர். கோபாலசாமி, மேஜர் ஜெனரல் ஆர். சுவாமிநாதன், OSD(R) மற்றும் ஜனாதிபதி மாளிகை செயலகத்தில் தொழில் நுட்ப இயக்குநராக (Director (Technology Interface)) இருந்த என்னையும் கொண்ட குழுவை அமைத்து, ‘இந்தியா எரிசக்தி பாதுகாப்பை மட்டும் நோக்கிய கொள்கையை கொண்டிருக்கிறது; ஆனால் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியா எரிசக்தி சுதந்திரம் அடையும் வகையில் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும்’ என்றார். அவர் கொடுத்த கட்டளையை ஏற்று அவரோடு இணைந்து ‘‘2030-ல் ‘எரிசக்தி சுதந்திரம் பெற்ற இந்தியா’’’ என்ற கொள்கையை வடிவமைத்தோம்.

அந்த கொள்கையை விளக்கி, அடுத்த 25 ஆண்டில் அமுல்படுத்தக்கூடிய தேசியக் கொள்கையை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று 14 ஆகஸ்டு 2005-ல் 59-வது சுதந்திர தின உரையில் தொலைக்காட்சியில் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் உரையாற்றினார்.

இப்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகிவிட்டன. இந்தியா இன்றும் எரிசக்தி பாதுகாப்பில் மட்டும்தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது, எரிசக்தி சுதந்திரம் அடைவதைப் பற்றி சிந்திக்கவில்லை. 2030-ம் ஆண்டு 400,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கு பல்வேறு முறைகள் மூலம் மின்சார உற்பத்தியை வெளிநாட்டில் இருந்து பெறும் நிலக்கரி, சூரிய ஒளித் தகடுகள், யுரேனியம் போன்ற மூலப்பொருள்களையும், காற்றாலை தொழில்நுட்பம், சூரிய ஒளி தொழில் நுட்பம், அணுமின்சார தொழில்நுட்பம் போன்றவற்றை இறக்குமதி செய்து அந்நியச் செலவாணியை உபயோகித்து அடைந்தால், அது எரிசக்தி பாதுகாப்பு, இதனால் நம் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் எதிர்மறை தாக்கம் தான் இருக்கும். ஆனால் எரிசக்தி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களையும், தொழில்நுட்பத்தையும் இந்தியாவே சுயமான ஆராய்ச்சியினால் உற்பத்தி செய்து, அந்த இலக்கை அடைந்தால், எரிசக்தி சுதந்திரம் பெறும். அதனால் பொருளாதார வளர்ச்சியில் நேர்மறை வளர்ச்சியின் தாக்கம் இருக்கும்; ஒட்டு மொத்த எரிசக்தி சுதந்திரம், நம் பொருளாதார வளர்ச்சி நேர்மறை வளர்ச்சிக்கு வித்திடும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும், அந்நியச் செலாவணியின் உயர்விற்கும் வித்திடும்.

2030-ல் நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு 2,00,000 மெகாவாட் என்று இலக்கு. இதை நிலக்கரி இறக்குமதி, எரிவாயு இறக்குமதி, டீசல் இறக்குமதி மூலம் இந்தியா 31 மார்ச் 2019-ல் 2,26,000 மெகாவாட் உற்பத்தி செய்து அந்த இலக்கை அடைந்துவிட்டது, ஆனால் இறக்குமதி செய்ய முடியாத நிலை 2030-2050-க்குள் ஏற்படும் போது எவ்வித எரிசக்தி பாதுகாப்பை இந்தியா, நம் மக்களுக்கு உறுதி செய்ய முடியும். இதற்குதான் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியில் நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும்.

ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் கொடுத்த எரிசக்தி சுதந்திரத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆற்றலில் 86% புதைபடிவ எரிபொருளிலிருந்து வருகிறது; சுமார் 14% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி துறையிலிருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளின் வரிசைப்படுத்தலை அதிகரிப்பதற்கும் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவது அவசியம்.

2030-க்குள் எரிசக்தி சுதந்திரம் (Energy Indepedence Vision) அடையக்கூடிய தொலைநோக்கு பார்வை இன்னும் 11 ஆண்டுகள் தொலைவில் உள்ளது. Energy Indepdence Vision 2030 முப்பரிமாணமாக இருக்க வேண்டும். முதலாவதாக, அனைவருக்கும் தரமான எரிசக்தி மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, புதைபடிவ எரிபொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை நம்பியிருப்பதை குறைத்தாலும் வழங்கப்படும் மின்சாரத்தின் நீடித்த மற்றும் குறையாத ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்வது. மூன்றாவதாக, பசுமை மின்சார ஆற்றலின் வளர்ச்சியை ஊக்குவிப்பதின் மூலம் சுற்றுச்சூழலுக்கு எதிரான மின்சார உற்பத்தியைக் குறைத்து தூய்மையான மின்னாற்றல் உற்பத்திக்கு வழிவகை செய்வது.

எரிசக்தி சுதந்திரப் பார்வை அதன் செயல்பாட்டில் உலகளாவியதாக இருக்க வேண்டும் மற்றும் உலகின் அனைத்து நாடுகளின் முன்னுரிமையுமாகவும் இருக்க வேண்டும்.

  1. எரிசக்தி தேவையின் வளர்ச்சி விகிதத்தை 50% குறைக்க தொழில் துறை, போக்குவரத்து, குடியிருப்பு மற்றும் வணிகத் துறையில் மின்ஆற்றல் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துதல்.
  2. புதைபடிவ எரிபொருட்களின் மூலமாகக் கிடைக்கும் முதன்மை மின் ஆற்றல் சார்பு நிலையை 50% கீழ் கொண்டுவரப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மின்சார உற்பத்திதிறனை 14% இருந்து 45% முதல் 50% அளவிற்கு உயர்த்த வேண்டும்
  3. குறைந்த கார்பன் உமிழ்வு அல்லது முற்றிலும் கார்பன் நடுநிலை கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களால் போக்குவரத்துக்கு முதன்மை எரிபொருளாக இருக்கும் பெட்ரோலியத்தை மாற்றுதல். இதற்கு சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர்வழி மின்சாரம், உயிரி எரிபொருள் மின்சாரம், அணுமின்சாரம் மற்றும் பிற வகையான பசுமை மின்னாற்றல் போன்ற தீர்வுகளின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தல் ஆகியவற்றில் உடனடி ஊக்குவித்தல் தேவைப்படுகிறது.
  4. ஒரு யூனிட் எரிசக்தி நுகர்வுக்கான நிகர கரியமில வாயுவின் உமிழ்வை தற்போதைய சதவிகிதத்தின் பாதியாகக் குறைத்தல், அதாவது வருடத்திற்கு ஒரு வாட் மின்சக்திக்கு 1.3 கிலோ CO2 உமிழ்விலிருந்து ஆண்டுக்கு 0.65 கிலோ CO2 க்கும் குறைக்க வேண்டும். .
  5. சூரிய, உயிர் மற்றும் மர வாயுவாக்கம் மற்றும் உள்நாட்டில் தொடர்புடைய பிற வடிவங்களைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி தொழில்துறை பயன்பாட்டிற்கான சில மெகா வாட் வரம்பில் உள்நாட்டு பயன்பாட்டிற்கான சிறிய அளவுகளிலிருந்து நடுத்தர அளவுகளுக்கு விநியோகிக்கப்பட்ட எரிசக்தி அமைப்புகளை ஊக்குவித்தல்.

2020-ம் ஆண்டளவில் சூரிய ஆற்றல் மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்தியா ‘ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி மிஷன்’-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் இன்றைய மத்திய அரசு மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. 2019-லேயே 30, செப்டம்பர் 2019-ல் சூரிய ஒளி மின்சாரம் 31,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் வெளிநாட்டு தொழில்நுட்ப இறக்குமதியில் இருந்துதான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நாம் இன்னும் இந்த தொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும் தன்னிறைவை அடையவில்லை.

நானோ தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் சூரிய மின்கல செயல்திறனில் தற்போதைய 15% மதிப்புகளிலிருந்து 50%-க்கும் அதிகமான உற்பத்தி திறன் அளவிற்கு அதிகரிக்கும். அதோடு சூரிய ஆற்றல் உற்பத்தி செலவைக் குறைக்கும். அப்துல் கலாமின் முன்முயற்சியால் நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சூரிய ஒளி மின்சார தொழில்நுட்ப ஆராய்ச்சியில் அதிகத் திறன் கொண்ட சி.என்.டி அடிப்படையிலான போட்டோ வோல்டாயிக் கலங்களை (photovoltaic cell) வளர்ப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது, ஆனால் அதை இந்தியாவில் ஊக்கப்படுத்தி, சந்தைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் சூரிய-வெப்ப தொழில்நுட்ப ஆராய்சியிலும் இந்தியாவில் கவனம் செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இதே போல 2030-ல் 64,000 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி இலக்கை இந்தியா 31 மார்ச் 2019-ல் 36,600 மெகாவாட் என்ற அளவில் எட்டி பாதி தூரத்தை கடந்துவிட்டது. ஆனால் இந்த காற்றாலை மின்சார உற்பத்தி இலக்கை, காற்றாலை தொழில்நுட்பத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதின் மூலம்தான் இந்தியா அடைந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் நம் நாட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சியில் உருவான கருடா காற்றாலை 1.7 மெகாவாட் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும், இதை போன்ற தொழில்நுட்பங்களைச் சந்தைப் படுத்துவதற்கும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் நிலை இதுவரை இல்லை. இதை போல இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்தால் காற்றாலை மின்சாரத்துறையிலும் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை பெறும்.

2030-ல் கூடுதலாக 50,000 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி திறன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 31 மார்ச் 2019-ல் 45,000 மெகாவாட் உற்பத்தியை தொட்டுவிட்டோம். ஆனால் இந்தியாவில் நீர் மின்சக்தி உற்பத்திக்கான வாய்ப்பு 1,48,700 மெகாவாட் 60 சதவிகிதம் லோட் பேக்டரில் இருக்கிறது, அந்த இலக்கை எட்டுவதற்கு டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவான நதி நீர் இணைப்பு, அதி திறன் நீர் வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அணுசக்தியின் மூலம் மின்சார உற்பத்தியின் இலக்கு 2030-ல் 50,000 மெகாவாட் இலக்கு, 2019-ல் 6780 மெகாவாட்தான். யுரேனியம் அடிப்படையிலான எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் அணு மின் உற்பத்திக்கு உந்துதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் அணுமின் நிலைய தொழில்நுட்ப இறக்குமதியைச் சார்ந்துதான் இருக்கிறது. ஆனால் உலக தோரியம் இருப்புக்களில் நான்கில் ஒரு பகுதியை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது. தோரியம் எரிபொருள் உலைகள் யுரேனியத்தால் இயங்கும் பொருட்களைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானவை.

யுரேனியத்தைவிட மிகக் குறைந்த தோரியம் பொருளைப் பயன்படுத்துதல் (1 மெட்ரிக் டன் தோரியம் 200 மெட்ரிக் டன் யுரேனியம் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரிக்குச் சமமான மின்னாற்றலைப் பெறுகிறது). யுரேனியத்தின் மூலம் ஏற்படும் கழிவுகளை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் 3000 அடிக்கு கீழே சேமித்து வைக்கும் நிலை இருப்பதைத் தாண்டி தோரியம் அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் கழிவுகள் நச்சுத்தன்மை 300 ஆண்டுகளுக்குள்ளாக குறுகியதாக இருக்கும். இந்த இரண்டையும் ஆபத்தில்லாமல் சேமித்து வைக்கும் ஆற்றல் தொழில்நுட்பம் இன்றைக்கு உலக அளவில் இருக்கிறது என்றாலும், நாம் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் தோரியம் மூலம் அணு மின்சார உற்பத்தி இலக்கை அடைவதற்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். ஏற்கனவே கல்பாக்கத்தில் தோரியம் கபினி அணுமின்சார நிலையம் மூலம் 100-300 கிலோவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட ஹைபிரிட் அணுமின் நிலையத்தை நமது அணு விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டார்கள். ஆனால் 100 மெகாவாட் முதல் 500 மெகாவாட் தோரியம் அணு மின்சார ஆலைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான தோரியம் அணு மின்சார ஆராய்ச்சிக்கு மத்திய அரசு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே மத்திய அரசு போதுமான நிதி உதவியை செய்து இதில் தன்னிறைவை நாம் அடைவதற்கு முன்முயற்சி எடுத்து, அணு மின்சார உற்பத்தியில் சுதந்திரத்தை நாம் அடைய வேண்டும். அப்துல் கலாமின் இந்த கனவை மத்திய அரசு நிறைவேற்றுமா?

உண்மையில் தோரியம் மின்னாற்றலை உற்பத்தி செய்ய யுரேனியம் அணுமின்சாரத்தில் வரும் புளுட்டோனியம் கழிவுகளை உபயோகித்துவிடலாம். தோரியம் மூலம் உற்பத்தியாகும் அணு மின்சாரத்தில் இருந்து அணு ஆயுதம் உற்பத்தி செய்வது கடினம். ஏனென்றால் புளுட்டோனியம் கழிவு அதில் வராது. அணு மின் சக்தியின் மிகப்பெரிய செலவு பாதுகாப்பு. ஆனால் தோரியம் அணு மின்சார நிலையம் உருகாது என்பதால், அவை உற்பத்தி இறுதியில் மிகவும் குறைவாக இருக்கும் மற்றும் மிக்க பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே, தோரியத்தைப் பயன்படுத்தி அணுசக்தியின் வளர்ச்சியைத் தொடர வேண்டியது அவசியம். அவற்றின் இருப்பு பல நாடுகளில் அதிகமாக இருந்தாலும் இந்தியாதான் தோரியம் ஆராய்ச்சியில் முன்னனியில் உள்ளது. மேலும், புதைபடிவ எரிபொருள்கள் குறைந்துபோகும் நேரத்தில், பெரிய மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான அந்த விருப்பத்தை வைத்திருக்க அணுசக்தி இணைவு ஆராய்ச்சி சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னேற வேண்டும்.

2030-ம் ஆண்டிற்கான எங்கள் இலக்கு அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பை அதன் தற்போதைய மட்டமான கிட்டத்தட்ட 14%-ல் இருந்து 45% ஆக உயர்த்த வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் மின்சார எரிசக்தி ஆற்றலுக்கான அதிகரித்து வரும் தேவையை மின்னாற்றல் பயன்பாட்டின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், எரிசக்தி சுதந்திரத்திற்கு இந்தியா உழைத்தால்தான் இந்திய பொருளாதாரம் அடைய நினைக்கும் $5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை 2030-க்குள் அடைய முடியும்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com