47. கேன்ஸர் பூதம் - 2

ஆப்பிள் பழத்தில் விட்டமின்கள், மினரல்கள், கொழுப்பு, புரோட்டீன் போன்ற நமக்குத் தேவையான சத்துகளெல்லாம் அதிகமாகவே உள்ளன. ஆப்பிள் விதைகளில் அவை அதிகம்.
நீங்கள் சகமனிதனை வெறுக்கும்போது உங்கள் உயிரணுக்கள் தங்களையே வெறுக்க ஆரம்பிக்கின்றன. அதுதான் கேன்ஸராகிறது – டாக்டர் பி.எம்.ஹெக்டே

டாக்டர் க்ரெப்ஸ் மற்றும் டாக்டர் பர்கிட்

கேன்ஸர் என்று உலகம் சொல்வதை விட்டமின்-பி குறைவு என்று க்ரெப்ஸ் சொன்னார் என்றும், குறிப்பிட்ட அந்த விட்டமினுக்கு விட்டமின் பி-17 என்று பெயர் வைத்தார் என்றும் பார்த்தோம். அதுமட்டுமல்ல, க்ரெப்ஸ் இன்னும் நிறைய கண்டுபிடித்துச் சொன்னார்.

ஸ்கர்வி, பெலாக்ரா, ரிக்கட்ஸ், பெரிபெரி, மாலைக்கண் நோய் போன்ற எந்த நாள்பட்ட மற்றும் மெடபாலிக் நோய்களையும் மருந்துகளால் குணப்படுத்தவோ, அவை வராமல் தடுக்கவோ முடிந்ததில்லை. அதற்கான இறுதித்தீர்வு உணவில் செய்யும் மாற்றமேயாகும் என்றும் க்ரெப்ஸ் கூறினார்.

டாக்டர் க்ரெப்ஸ்

நாயோ பூனையோ வளர்ப்பவர்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் அவற்றுக்காக வைக்கும் பெடிக்ரி போன்ற உணவுப்பண்டங்களை சாப்பிட்டாலும், அடிக்கடி அவை பச்சைப் புல்வெளிகளுக்கோ அல்லது வெளியிலோ சென்று இயற்கையாகக் கிடைக்கும் தானியவகைகளைத் தேடிச்சென்று சாப்பிடுவதைக் காணலாம். வயிறுமுட்ட நீங்கள் அவற்றுக்கு உணவளித்தாலும் அவை இப்படிச் செல்லும். அவற்றின் அந்த இயற்கை உணவுத் தேடலில் நமக்கான குறிப்பு மறைந்துள்ளது. இன்னும் குறிப்பாக, உடம்பு சரியில்லாமல் இருக்கும் மிருகங்களிடம் இந்தக் குணம் அதிகமாகக் காணப்படுவதைக் காணலாம் என்று கூறினார் டாக்டர் க்ரெப்ஸ். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு நாய்க்கு இருக்கும் புத்திகூட மனிதனுக்கு இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்!

இப்படி மிருகங்கள் தேடிச்செல்லும் புல் வகைகள் யாவும் ஜான்சன் புல், ட்யூனிஸ் புல், சூடான் புல் என்று நைட்ரிலோசைட் அல்லது விட்டமின் பி-17 சத்து அதிகமாக இருக்கும் புல் வகைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் ஆச்சரியப்படுகிறார். இயற்கையில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. ரொம்ப தூரத்தில் சூறாவளி வரப்போகிறது என்றால், எங்கோ இருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் சிறகுகளை படபடவென அடித்துக்கொள்ளும். இதற்கு ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’ (Butterfly effect) என்றே பெயர். எனவே, நல்ல உணவு தரப்பட்ட பின்னும் விட்டமின் பி-17 உள்ள புல்வெளிகளை நாடி நாய்கள் செல்வதிலும் மனிதர்களுக்கான குறிப்பு உள்ளது.

மிருகக் காட்சிச்சாலைகளில் உள்ள குரங்குகளுக்கோ அல்லது அதையொத்த மற்ற விலங்குகளுக்கோ ஆப்ரிகாட், பீச் போன்ற பழங்களைக் கொடுத்தால், அவற்றின் சதைப்பாங்கான பகுதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு கடினமான பகுதியை உடைத்து உள்ளே இருக்கும்  விதைகளை அவ்விலங்குகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். தன் வாழ்வில் முதன்முறையாக அப்பழங்களை அவை பார்த்திருந்தாலும், அவற்றின் உள்ளுணர்வுகள் அப்படித்தான் செய்யச் சொல்கின்றன. அவற்றுக்கு ஏன் அப்படிச் செய்யத் தோன்றுகின்றன தெரியுமா? அந்த விதைகளில்தான் செறிவான நிலையில் நைட்ரிலோசைட் இருக்கும்! விதைகளில் உள்ளதைவிட செறிவாக இயற்கையில் நைட்ரிலோசைட் வேறெங்குமே இருக்காது!

கரடிகள் தங்கள் உணவில் நைட்ரிலோசைட் உள்ளதாக பார்த்துக்கொள்வதில் எக்ஸ்பர்ட்கள்! அதனால்தான், அவை பெர்ரி பழங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகின்றன. ஏனெனில், பெர்ரி பழங்களில் நைட்ரிலோசைட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்ல, மேயும் விலங்குகளை அடித்துக்கொன்று அவை உண்ணும்போதுகூட, அவற்றின் தசைகளை எடுத்துக்கொள்ளாமல், நைட்ரிலோசைட் அதிகமாக இருக்கும் அவற்றின் உள்ளுறுப்புகள், இரைப்பை போன்றவற்றையே தேர்ந்தெடுத்து உண்ணுகின்றன!

வேட்டையாடப்பட்ட காட்டு மிருகங்களுக்கு கேன்ஸர் இருந்ததாக வரலாறு இல்லை. ஆனால், அம்மிருகங்களை மனிதர்கள் எடுத்துவந்து வளர்க்கும்போதும், அவர்கள் தரும் உணவை உண்ணும்போதும்தான் அவற்றுக்கு இத்தகையை நோய்கள் தொற்றுகின்றன!

நமது தவறான வாழ்க்கை முறைகளால் உருவாவதே கேன்ஸர் என்று டாக்டர் பர்கிட் (Burkitt) என்பவர் கூறினார். அப்படிப்பட்ட கேன்ஸர்கள் மிருக உலகில் கிடையாது என்றும் அவர் கூறினார். அமெரிக்கர்கள் உண்ணும் உணவு சுவையானதும், ரொம்ப விலை மதிப்பும் உள்ளது. ஆனால், அதனால் அது நல்ல உணவு என்றோ, ஆரோக்கியம் தரும் உணவு என்றோ சொல்லிவிட முடியாது என்கிறார் அவர்! இன்றைக்கு நம்மை ஆட்டுவிக்கும் கேஎஃப்ஸிகளும் மெக்டொனால்டுகளும், அமெரிக்கக் கலாசாரத்தின் ஆபத்தான கூறுகள் என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை.

ஆப்பிள் பழத்தில் விட்டமின்கள், மினரல்கள், கொழுப்பு, புரோட்டீன் போன்ற நமக்குத் தேவையான சத்துகளெல்லாம் அதிகமாகவே உள்ளன. ஆப்பிள் விதைகளில் அவை அதிகம். குறிப்பாக, விட்டமின் பி-17 ஆப்பிள் விதைகளில் உள்ளது! அதனால்தானோ என்னவோ An apple a day keeps the doctor away என்று ஆங்கில முதுமொழி உள்ளது. (இதைத் தமிழ்ப்படுத்தினால் சொதப்பலாகிவிடும் என்பதால் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்).

ஹன்ஸா மக்களும் ஆப்ரிகாட் பழமும்

விட்டமின் பி-17 உள்ள உணவுப்பொருள்களை சாப்பிடுவதால் கேன்ஸர் வராது என்று எப்படி நிரூபிப்பது? ஆயிரக்கணக்கான மக்களை பல ஆண்டுகளுக்கு அப்படிப்பட்ட உணவுகளை, முக்கியமான நைட்ரிலோசைட் உள்ள உணவுகளைச் சாப்பிடவைத்து பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் உண்மை தெரியும். ஆனால் இது சாத்தியமா?

சாத்தியம்தான். ஏனெனில், அந்தச் சோதனை ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டது!

ஹிமாலயாவின் மலைப்பாங்கான பகுதியில், மேற்குப் பாகிஸ்தானுக்கும் இந்தியா - சீனாவுக்கும் இடையே ஹன்ஸா என்று ஒரு குட்டி ராஜ்ஜியம் இருக்கிறது. (இப்போது அது பாகிஸ்தானின் அங்கமாக உள்ளது). அங்குள்ளவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்தலுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் புகழ் பெற்றவர்கள். நூறு வயதுக்கு மேல் வாழ்வதென்பது அவர்களுக்கு ஜுஜுபி! 120 வயதுக்கு மேலும்கூட அவர்களில் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்! வெளியிலிருந்து ஹன்ஸாவுக்குள் வரும் மருத்துவக் குழுக்கள், அங்கே யாருக்கும் கேன்ஸர் இல்லாததைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறது! அதுசரி, நோயிருந்தால் அது இயல்பானது, நோயில்லை என்றால் அது விநோதமானது! ஆஹா, என்ன உலகமடா!

அவர்களுக்கு ஏன் கேன்ஸரே வரவில்லை? விஞ்ஞானத்துக்குத் தலை சுற்றியது! ஆனால், அதற்கான பதில் அவர்கள் உணவில் இருந்தது. அமெரிக்கர்கள் சாப்பிடுவதைவிட இருநூறு மடங்கு அதிகமான நைட்ரிலோசைட் சத்துள்ள உணவுகளையே அவர்கள் உண்டனர்! அவர்களது வசதியெல்லாம் பணத்தை வைத்து மதிப்பிடப்படவில்லை. ஒருவர் எத்தனை ஆப்ரிகாட் மரங்கள் வைத்திருந்தார் என்பதை வைத்தே அளக்கப்பட்டது! உணவுகளின் ராணி என்று ஆப்ரிகாட் விதைதான் கொண்டாடப்பட்டது! ஆஹா, செல்வத்துக்கு எவ்வளவு அற்புதமான அளவுகோல்! (ஆப்ரிகாட் என்பது பாதாம் போன்ற கொட்டையைக் கொண்ட ஒரு இனிப்பான பழம். சீமை வாதுமைப் பழம் என்றும் அது சொல்லப்படுகிறது. நாம் அதை இங்கே ஆப்ரிகாட் என்றே குறிப்பிடலாம்).

உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராபர்ட் மெக்காரிசன் (Dr. Robert McCarrison) தலைமையில் ஒரு குழு முதன்முதலாக ஹன்ஸாவுக்குள் வந்தது. ஹன்ஸா மக்கள் ஆப்ரிகாட் பழ மரங்கள் அதிகம் வைத்திருக்கிறார்கள். அப்பழங்களை வெயிலில் உலர்த்தி, அதிக அளவில் தம் உணவில் பயன்படுத்துகின்றார்கள். அதனால், அவர்களில் யாருக்கும் கேன்ஸரே வரவில்லை என்று அவர் 1922-ல் AMA-ன் மருத்துவ இதழில் எழுதினார்.

டாக்டர் ராபர்ட் மெக்காரிசன்

ஹன்ஸாவுக்கு வருபவர்களுக்கு ஆப்ரிகாட் அல்லது பீச் பழம் கொடுக்கப்பட்டால், அவர்கள் அதன் கடினமான பகுதியை தரையில் போட்டுவிடுவது வழக்கம். ஆனால், வழிகாட்டிகளுக்கு அது ரொம்ப சங்கடமாகப் போய்விடும். அவர்களைப் பொருத்தவரை, கீழே போடப்பட்ட கடினமான பகுதியின் நடுவில் இருக்கும் கொட்டை அல்லது விதைதான் அப்பழத்தின் உயிராகும்.

டாக்டர் ஆலன் என்பவர் ஹன்ஸா நாட்டுக்கு வந்தபோதும் அப்படித்தான் நடந்தது. கீழே போட்ட ஆப்ரிகாட் விதைகளை எடுத்து இரண்டு கற்களுக்கிடையில் வைத்து உடைத்து மீண்டும் அவரிடமே கொடுத்து சாப்பிடச் சொன்னார் வழிகாட்டி. நீங்கள் சாப்பிடாத விதைகளை என்ன செய்வீர்கள் என்று டாக்டர் கேட்டார். அவற்றை அரைத்து எண்ணெய்யாக்கி வைத்துக்கொள்வோம். அதை அவ்வப்போது நாங்கள் சில டீஸ்பூன்கள் சாப்பிடுவோம். பண்டிகை இரவுகளில் எங்கள் பெண்கள் அந்த எண்ணெய்யை தலைக்குத் தேய்த்துக்கொள்வார்கள். தலை நன்றாகப் பளபளப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல, உடம்பில் எங்காவது காயம் பட்டால் அந்த எண்ணெய்யைத் தடவலாம் என்றும் கூறினார்!

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் சார்லஸ் ஹில்லிங்கர் எடுத்த பேட்டியில், எங்கள் ஹன்ஸா மக்களின் சராசரி வாழ்நாள் 85 ஆண்டுகள் என்று கூறினார் ஹன்ஸா இளவரசர் முஹம்மது அமீன் கான். அரசராகிய என் தந்தைக்கு வழிகாட்டும் பெரியவர்களில் பலருக்கு வயது நூறுக்கு மேலாகிறது என்றும் அவர் கூறினார்! அப்படியா என்று சந்தேகப்பட்டுக் கேட்ட டாக்டர் க்ரெப்ஸிடம், ‘ஆமாம், அது உண்மைதான். பகல் உணவுக்குப்பின் சாதாரணமாக ஹன்ஸா மக்கள் முப்பது அல்லது ஐம்பது ஆப்ரிகாட்டுகளை உண்பது வழக்கம்’ என்று இளவரசர் கூறினார்!

சர்வதேச விட்டமின் பயன்பாட்டுக் கணக்குப்படி, ஒரு நாளைக்கு 75000 அளவுகள் விட்டமின் ஏ எடுத்துக்கொள்வதும், ஐம்பது கிராம் விட்டமின் பி-17 எடுத்துக்கொள்வதும் சமம் என்கிறது நவீன விஞ்ஞான அளவுகோல்!

முதிய வயதிலும் ஹன்ஸா பெண்களின் உடல் தோல் மிருதுவாக உள்ளது. அவர்களது முகங்கள், பதினைந்திலிருந்து இருவது வயது குறைவாகவே அவர்களை எப்போதும் காட்டுகிறது! (ஆஹா, நம்முடைய பெண்கள் இதை உடனே பயன்படுத்தி ‘முக’நூலுக்கு நிறைய ‘லைக்ஸ்’ பெறலாமே)! தங்கள் அழகின் ரகசியம் ஆப்ரிகாட் எண்ணெய் தவிர வேறில்லை; அதைத்தான் நாங்கள் தினமும் எங்கள் உடலில் தடவிக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்! இந்த எண்ணெய்யை அமேசான் காடுகளிலிலிருந்து கொண்டுவரத் தேவையில்லை!

ஹன்ஸா நாட்டில் ஆப்ரிகாட் பழம் நிரந்தர உணவாகும். நமக்கு அரிசிச் சோறு மாதிரி, வடக்கில் சப்பாத்தி மாதிரி, ஆங்கிலேயர்களுக்கு ப்ரெட் மாதிரி, அவர்களுக்கு ஆப்ரிகாட் பழம்.

ஆனால், ஹன்ஸாவுக்கு வெளிநாட்டு உணவுகள் மூலமாக சனி பிடிக்க ஆரம்பித்தது. வெளிநாட்டு உணவுகள் ஹன்ஸாவுக்குள் வரத்தொடங்கியதும் கூடவே கேன்ஸரும் வர ஆரம்பித்துவிட்டது! உணவே மருந்து, உணவோ நோய் என்பதை இன்னொரு பரிசோதனையும் நிரூபித்தது. அது எலிகளை வைத்துச் செய்யப்பட்ட பரிசோதனை.

இந்திய உணவுகள், பாகிஸ்தானிய உணவுகள், அமெரிக்க, பிரிட்டிஷ் உணவுகள் - இப்படியெல்லாம் எலிகளுக்குக் கொடுத்து முதலில் பரிசோதனை செய்தார்கள். பாவம், எலிகள்! அவற்றுக்கு அல்சர், கொப்புளம், பல் பிரச்னை, முதுகுத்தண்டு வளைதல், முடி விழுதல், ரத்த சோகை, தோல் வியாதிகள், இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புப் பிரச்னைகள் எல்லாம் வர ஆரம்பித்தன! உறுதியான எலிகள், நோஞ்சான் எலிகளைக் கொல்லவும் ஆரம்பித்தன! அந்த எலி பரிசோதனை மூலம் மருத்துவர்களுக்குக் கிலி பிடித்துக்கொண்டது!

எஸ்கிமோக்கள்

ஹன்ஸா மக்களுக்கு அடுத்தபடியாக பரிசோதிக்கப்பட்டவர்கள் எஸ்கிமோக்கள். அவர்களுக்கும் பலகாலமாக கேன்ஸர் வந்ததே இல்லை. கரிபூ என்ற ஒரு வகை மான் மற்றும் மேயும் மிருகங்களின் இறைச்சியை அவர்கள் உணவாக எடுத்துக்கொண்டனர். சால்மன் பெர்ரி என்ற பழத்தினையும் அவர்கள் உண்டனர். கரிபூ மற்றும் கலைமான்களின் வயிற்றுக்குள் உள்ளவற்றை ஒரு சாலட் மாதிரி செய்து விரும்பி உண்டனர். ஒருவகையான புல்லைத்தான் அம்மான்கள் நிறைய உண்டன. அப்புல்லில் ஏரோ புல் என்ற வகைப்புல்லில், அதிகபட்ச நைட்ரிலோசைட் இருப்பதாக விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.

இந்தப் பாரம்பரிய உணவு வகைகளை எஸ்கிமோக்கள் விட்டுவிட்டு மேற்கத்திய உணவு வகைகளை எடுத்துக்கொண்ட பிறகு என்னானது? அவர்களுக்கும் அமெரிக்கர்களைவிட அதிகமாக கேன்ஸர் வந்தது!

ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள்

1902-ம் ஆண்டு, பேராசிரியர் ஜான் பியர்ட் (John Beard) என்பவர், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு முக்கியமான ஆராய்ச்சி செய்தார். உலகப்புகழ் பெற்ற லான்சட் (Lancet) என்ற பிரிட்டிஷ் மருத்து ஆராய்ச்சி இதழில் தன் ஆராய்ச்சியின் முடிவுகளை ஒரு கட்டுரையாக வெளியிட்டார். அதில், கேன்ஸர் செல்களுக்கும் கருத்தரிப்புக்கு முன்பாக உண்டாகும் செல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறினார்! அவ்வகை செல்களுக்கு ட்ரோபோப்ளாஸ்ட்டுகள் (Trophoblasts) என்று பெயர். அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், கேன்ஸர் செல்களும் ட்ரோபோப்ளாஸ்ட் செல்களும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு அவர் வந்தார். ட்ரோபோப்ளாஸ்ட் கேன்ஸர் ஆராய்ச்சி என்று அது அறியப்படுகிறது.

பேராசிரியர் ஜான் பியர்ட்

ஒரு பெண் கருத்தரிக்கும்போது உண்டாகும் ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள், கேன்ஸர் செல்களுக்கு உண்டான எல்லா குணாம்சங்களையும் பெற்றிருக்கின்றன என்று அவர் கூறினார். அது அசுர வேகத்தில் பல்கிப் பெருகி, கருப்பைச் சுவரை முற்றுகையிடுகிறது. அந்தச் செல்களில் 80 சதவீதம் ‘ஓவரி’ அல்லது ‘சூலகம்’ என்று சொல்லப்படும் கருப்பையில் – கர்ப்பப்பையில் அல்ல – அல்லது ஆண்களின் விரைகளில் காணப்படும். உருவாகவிருக்கும் கருவுக்கான சேமிப்புக்கலனாக அவை பயன்படும். மீதி 20 சதவீதம் செல்கள் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதற்காக என்று விஞ்ஞானம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

சரி, போகட்டும். அதிக எண்ணிக்கையில் ட்ரோபோப்ளாஸ்ட் எனும் கேன்ஸர் செல்கள் உடலுக்குள் இருக்குமானால், அப்படிப்பட்ட அந்நியன்களை எதிர்த்துக் கொல்வதற்காகவே உருவாகும் வெள்ளை அணுக்கள் என்ன செய்கின்றன? கேன்ஸர் செல்களை எதிர்த்து அவை ஏன் போராடுவதில்லை? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் கேன்ஸர் பற்றிய ஒரு முக்கியமான ரகசியமே அடங்கியுள்ளது. அது என்ன ரகசியம்?

பார்க்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com