Enable Javscript for better performance
44. எஹ்ரட் டயட் - 3- Dinamani

சுடச்சுட

  

  44. எஹ்ரட் டயட் - 3

  By நாகூர் ரூமி  |   Published on : 13th March 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  மனிதனைத் தவிர, வேறெந்த மிருகமும் தவறாகச் சாப்பிடுவதே இல்லை - எஹ்ரட்

   

  நமது உடல், கழிவுகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும்போது நடக்கும் உடல்ரீதியான நிகழ்வுகளை ஏதோ பிரச்னை என்று தவறாகப் புரிந்துகொண்டு டாக்டரிடம் செல்வது வரை பார்த்தோம். ஆனால், அப்படியெல்லாம் உடலில் ‘எசகுபிசகாக’ நடக்கும்போது நாம் சந்தோஷப்பட வேண்டும்; மாறாக, அச்சப்படுகிறோம் என்று கிண்டலடிக்கிறார் எஹ்ரட். இயற்கை நம்மை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. அப்போது நம் உடல் வழக்கத்துக்கு மாறாகத்தான் இருக்கும்.

  இப்படிக் கழிவுகள் சகட்டுமேனிக்கு வெளியாவதைத்தான் நோய்கள் என்பதாக மருத்துவ உலகம் புரிந்துவைத்திருக்கிறது. உதாரணமாக, நிறைய சளி வெளியேறினால், அது இன்ஃபுளூயென்ஸா நோயின் பாதிப்பு என்று முத்திரை குத்துகிறது.

  ஆனால், முக்கிய உறுப்பான நுரையீரலில் நிறைய சளியும் நச்சுக்களும் இருக்குமானால், அதை வெளியேற்ற உடல் ரொம்ப பிரயாசைப்படவேண்டி உள்ளது. அப்போது உடல் ஒருவிதமான உராய்வு நிலைக்குத் தள்ளப்படுகிறது. ப்ரேக் பிடித்துள்ள ஒரு யந்திரத்தை ஓடச் செய்தால் அது எப்படி ஓடும்? நம் உடலும் அதைப்போல ஆகிவிடுகிறது. அந்த உராய்வு, கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும். அந்தக் கழிவு நீக்க முயற்சியை நிமோனியா ஜுரம் என்று டாக்டர்கள் ஞானஸ்நானம் செய்துவிடுவார்கள். ஆனால், நிமோனியா என்பது உண்மையில் நம் உடலின் மிகமுக்கிய உறுப்பில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் முயற்சியே தவிர வேறில்லை. இந்தக் கழிவு நீக்க வேலையை சிறுநீரகங்கள் செய்யவேண்டி இருந்தால், அதற்கு சிறுநீரக அழற்சி (Nephritis) என்று பெயர் வைத்துவிடுவார்கள். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

  அக்யூட் மற்றும் க்ரானிக் வியாதிகள்

  எப்போதெல்லாம், காய்ச்சல் மூலம் கழிவுகளை நீக்கி ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உடல் முயற்சிக்கிறதோ, அப்போதெல்லாம் நோயின் பாதிப்பு கடுமையாகிவிட்டதாக (acute) சொல்லப்படுகிறது.

  இவ்விதமாக மருத்துவ உலகம் கிட்டத்தட்ட 4000-த்துக்கும் மேற்பட்ட ‘நோய்களை’யும் அவற்றுக்கான பெயர்களையும் அடையாளம் கண்டிருக்கிறது என்கிறார் எஹ்ரட்! உடலின் எந்தக் குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீக்கம் செய்யப்படுகிறதோ, அல்லது எந்தப் பகுதியில் ரத்தம் ஓடுவதற்கு சிரமப்படுகிறதோ, எந்த இடத்தில் வலி தோன்றுகிறதோ அதையெல்லாம் வைத்து நோய்களுக்கான பெயர்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

  வலி, பசியின்மை போன்ற அபாய அறிவிப்புகளை மீறி பசிக்காமலே சாப்பிடுதல், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், ஊசிகள் போட்டுக்கொள்ளுதல் என காலம் காலமாகவே, உடலின் இயற்கையான கழிவு நீக்கச் செயல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அதை நடக்கவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

  மருத்துவர்களின் “உதவி”யினால், உடலின் இயற்கையான கழிவு நீக்கச் செயல்திறன் குறைகிறது. ஒரு கட்டத்தில், உயிருக்கே அது உலைவைக்கிறது. மருத்துவர் தொடர்ந்து ஒரு நோயாளியை ‘கவனித்துக்கொண்டிருக்கும்போது’ இயற்கை பழையபடி உறுதியாகவும் உற்சாகமாகவும் செயல்பட முடியாது. அது சோர்வடைந்து மந்தமாக, வேகம் எதுவுமின்றி மெதுவாகச் செயலாற்றத் துவங்குகிறது. இந்நிலையில், கழிவு நீக்கம் செய்வதற்கு காலதாமதம் ஆகிறது. எல்லா வேலைகளும் ‘ஸ்லோமோஷனில்’ நடக்க ஆரம்பிக்கின்றன. இந்த நிலையைத்தான் டாக்டர்கள் நாள்பட்ட வியாதி (chronic disease) என்று கூறுகின்றனர். ‘க்ரோனோஸ்’ என்றால் கிரேக்க மொழியில் காலம் என்று அர்த்தம்! அதிலிருந்துதான் க்ரானிக் உருவாக்கப்பட்டது!

  நோயறிதல் அவசியமா

  நோய் என்று எதுவுமில்லை, உடல்ரீதியான எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், கழிவுகள் உடலில் தேங்கியிருப்பதோ அல்லது அவை நீக்கப்பட்டுக்கொண்டிருப்பதோதான் என்றால், ‘டயக்னாசிஸ்’ எனப்படும் நோயறியதல் தேவையில்லைதானே என்ற கேள்வி எழுவது நியாயமே.

  கழிவு நீக்கம்தான் நோய்களாக அறியப்படுகின்றன என்றால், நோயறிதல் என்ற ஒன்றே தேவையில்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி வரும். எஹ்ரட் சொன்னது உண்மை எனில், என்ன நோய் என்று கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் சாதாரண மனிதர்களிலிலிருந்து உணவியலாளர்வரை நினைக்க வரும். ஆனால், இவ்வளவையும் சொன்ன எஹ்ரட் வேறு மாதிரி யோசிக்கிறார்!

  கழிவு நீக்கம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான் என்றாலும், வெளியேறாத செரிக்காத உணவு, சளி, யூரிக் அமிலம், நச்சுக்கள், மருந்துகள் இத்யாதி மூலம்தான் எல்லா நோய்களும் உருவாகின்றன என்று சொன்னால், எதற்கு நோயறிதல் செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு ஒரு முக்கியமான பதிலைச் சொல்கிறார் எஹ்ரட். அதில் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையும் உள்ளது. அது என்ன?

  இரண்டு நோயாளிகள் உள்ளதாக வைத்துக்கொள்வோம். இரண்டு பேருக்குமே கழிவு நீக்கம்தான் பிரச்னை. ஒருவர், இரண்டு மூன்று வாரங்கள் (எஹ்ரட் சொன்னபடி) விரதம் இருந்த பிறகு குணமடையலாம். ஆனால், அதே விரத சிகிச்சையை இன்னொருவர் மேற்கொள்ளும்போது அவர் இறந்துபோகலாம் என்கிறார் எஹ்ரட்! இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைக்கத் தோன்றுகிறதா?

  அதனால்தான், ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் பொதுவான உடல் நிலை எப்படி உள்ளது, அவரது உடலின் அமைப்பு ரீதியான தடைகள் என்ன என்றெல்லாம் தெரிய வேண்டும் என்கிறார். ஒரு நோயாளியின் முகத்தைப் பார்த்தால் அவரது அகநிலை தெரிந்துவிடு என்றும் கூறுகிறார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்தானே!

  மருத்துவ நோயறிதல் முறையினால் எந்தப் பயனும் ஏற்படாது. உண்மையை அந்த நோயறிதலினால் வெளிக்கொண்டுவரவே முடியாது. ஆனால், குணப்படுத்துவதைவிட நோயறிதல் மிக முக்கியமானது என்றே டாக்டர்கள் நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் பல சோதனைச்சாலை அறிக்கைகளையும் அறிகுறிகளையும் நம்புகின்றனர். அதன் அடிப்படையிலேயே ஆயிரக்கணக்கான நோய்களை அவர்கள் ‘அடையாளம்’ காண்கின்றனர்!

  ஆனால் நம்மைப் பொறுத்தவரை, ஒரு நோயின் பெயர் என்ன என்பது முக்கியமல்ல. ஒருவருக்குக் கீல்வாதம், இன்னொருவருக்கு செரிமானக் கோளாறு, இன்னொருவருக்கு சிறுநீரக அழற்சி இருக்கலாம். ஆனால், எத்தனை நாளைக்கு அவர் விரதமிருக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கும் நோயின் பெயருக்கும் தொடர்பில்லை. ஆனால், நோயாளியின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது, எந்த அளவுக்கு வைட்டாலிட்டி எனப்படும் அவரது வீரியம் குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்வது முக்கியமானது. அதைப் பொறுத்துதான் சிகிச்சையைச் சொல்லமுடியும். சகட்டுமேனிக்கு எல்லாருக்கும் ஒரே மாதிரியான உணவையோ விரதத்தையோ கொடுக்கமுடியாது. அதனால்தான், நோயறிதல் தேவை என்றும், உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை வைத்து எந்த அளவுக்கு உடலுக்குள் கழிவுகள் தேங்கி அழுகிய நிலையில் உள்ளன என்றும் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் எஹ்ரட்.

  சிறுநீர் சார்ந்த நோயறிதல் (Uric Diagnosis)

  இது மிக முக்கியமான நோயறிதல் முறை என்று மருத்துவ உலகம் நினைக்கிறது. ஆனாலும், இந்த விஷயத்திலும் அடிப்படையிலேயே தவறு செய்யப்படுகிறது. உணவின் செரிமான தடத்துக்கு அடுத்தாற்போல, மிக முக்கியமான கழிவு வெளியேற்றத் தடம் சிறுநீரகம் சார்ந்த, சிறுநீர் வெளியேறும் தடம்தான்.

  ஒருவர் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு, கொஞ்சம் விரதம் இருக்கத் தொடங்கிவிட்டாலோ அல்லது இயற்கை உணவுக்கு மாறிக்கொண்டாலோ, உடனே அவரது கழிவுகள், சளி, நச்சுப்பொருள்கள், யூரிக் அமிலம், ஃபாஸ்ஃபேட் போன்ற சமாசாரங்கள் அவரது சிறுநீரில் கலக்க ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் அவரது சிறுநீரைப் பரிசோதித்தால் அது அச்சமூட்டுவதாக இருக்கும்! யாராவதொருவர் நோய்வாய்ப்படும்போதெல்லாம் இது நடக்கவே செய்கிறது. சிறுநீர்ப் பரிசோதனையில் தெரியும் விஷயங்களைப் பார்க்கும் எவரும் அச்சப்படவே செய்வர். ஆனால், உண்மையில் அது நம் கழிவுகளை வெளியேற்றி நம் உடலை உடலே சுத்தப்படுத்தும் நிகழ்வின் வெளிப்பாடு என்பது யாருக்கும் புரிவதில்லை.

  சிறுநீரில் சர்க்கரையோ அல்புமினோ இருக்குமானால், அது ரொம்ப ‘சீரியஸ்’ கேஸாக கணிக்கப்படுகிறது. அந்த நபருக்கு டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி வந்துவிட்டதாகவோ அல்லது ப்ரைட்ஸ் நோய் வந்துவிட்டதாகவோ முத்திரை குத்தப்படுவார்.

  மருத்துவச் சிகிச்சையின்படி, சர்க்கரை நோயாளி என்று ‘சொல்லப்பட்ட’ நோயாளி, சர்க்கரைச் சத்து உள்ள உணவு எதுவும் அனுமதிக்கப்படாத காரணத்தால் சர்க்கரைப் பட்டினியால் செத்துப்போவார். சிறுநீர் அழற்சி என்று சொல்லப்பட்டவருக்கு, அல்புமின் இழப்பை ஈடுகட்டுகிறோம் என்று சொல்லி, அல்புமின் அதிகம் உள்ள உணவுகள் வலிந்து கொடுக்கப்படுவதால் இறந்துபோவார் என்கிறார் எஹ்ரட்! அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகளைப் பற்றி நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

  உடல் வெளியே தள்ளுவதெல்லாமே கழிவுதான். அது அழுகிப்போயிருக்கலாம்; செத்திருக்கலாம். நோயாளி ரொம்ப ஆழமான அகவயமான அசுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்; அவரது உள்ளுறுப்புகளில் சில கெட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன; அதன் காரணமாக அவர் உண்ட உணவுகள் யாவும் உள்ளே கெட்டு அழுகிப்போயுள்ளன என்று புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, காசநோய் தீவிரமாக இருப்பவர்களின் நிலை இதுதான். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் கவனமாகவும், மிகமிக மெதுவாகவும்தான் சிகிச்சை கொடுக்க வேண்டும். எனவே, ‘குறிப்பிட்ட நோயாளிக்கு எந்த அளவுக்கு கழிவு உள்ளே தேங்கியுள்ளது என்று கண்டுபிடிப்பதே என் நோயறிதல் முறையாகும்’ என்கிறார் எஹ்ரட்.

  சிகிச்சையை முடிவு செய்யுமுன், கழிவின் நிலை என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் எஹ்ரட். தனது நோயாளிகளில் சிலருக்கு 22.5 கிலோ முதல் 27 கிலோ வரையில் கழிவு இருந்ததாகவும், அவர்கள் அதை தான் சொன்னபடி வெளியேற்றினார்கள் என்றும் அவர் கூறுகிறார். அப்படிப்பட்ட கழிவுகளில், நான்கிலிருந்து ஆறு கிலோ கழிவுகள் பெருங்குடல் வழியாகவே (மலமாக) வெளியேற்றப்பட்டது என்றும் கூறுகிறார்! அவற்றில் பழைய, நாள்பட்ட, கட்டிதட்டிப்போன மலமும் இருந்ததாம்!

  குண்டானவர்களும் ஒல்லியானவர்களும்

  யார் குண்டு, யார் ஒல்லி என்பதற்கு எஹ்ரட் ஒரு புதிய விளக்கம் தருகிறார். அது என்ன? குண்டாக உள்ளவர்களால் கழிவுகளை எளிதாக வெளியேற்ற முடியாது. அதிகமான கழிவுத்தடைக்கு உள்ளானவர்களைத்தான் நாம் குண்டு என்கிறோம் என்கிறார்! அவர்கள் அதிகமாகச் சாப்பிடுவதே அதற்குக் காரணம் என்கிறார்! ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஏனெனில், எனக்குத் தெரிந்த பல ‘ஒல்லிப்பிச்சான்கள்’ அன்லிமிடட் சாப்பாடு இரண்டு மூன்றை அநாயாசமாக ஒரு கட்டு கட்டுவார்கள்! இந்தியாவுக்கு வந்த எஹ்ரட், அவர்களையெல்லாம் பார்க்காமல் போய்விட்டார்போலும்!

  ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு வேதியியல் தலையீடு அதிகமாக இருக்கும் என்கிறார். (இருந்தால் என்ன, கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனா சரிதான் என்கிறாராம் நம்மூர் ஒல்லிக் கதாநாயகன்)! ஒல்லியாக இருப்பவர்கள் அதிகமாக மாமிச உணவை எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள் என்றும், அது நிறைய அமிலத்தன்மையையும், யூரிக் அமிலத்தையும் மற்ற நச்சுக்களையும் உண்டாக்கும் என்றும் கூறுகிறார். இதையும் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், குறைவாகச் சாப்பிடுகின்ற குண்டு மணிகளும் உண்டு, நிறைவாகச் சாப்பிடுகின்ற ஓமகுச்சிகளும் உண்டு.

  நோய் உருவாவது எப்படி

  பொதுவாக, எஹ்ரட்டிடம் யார் வந்தாலும் அவர் சில கேள்விகளைக் கேட்பார் –

  • எவ்வளவு நாளாக உடம்பு சரியில்லை?
  • உங்கள் நோய் பற்றி டாக்டர் என்ன சொன்னார்?
  • என்ன மாதிரி சிகிச்சை கொடுக்கப்பட்டது?
  • அறுவை சிகிச்சை ஏதும் நடந்துள்ளதா?
  • இதற்கு முன் என்ன சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள்?

  இப்படி பல கேள்விகளைக் கேட்பார். நோயாளி ஆணா, பெண்ணா, வந்த நோய் பரம்பரை வியாதியா போன்ற கேள்விகளும் முக்கியமானவை என்று எஹ்ரட் கருதினார்.

  ஆனால், எல்லாவற்றையும்விட முக்கியமானது, நோய் பாதித்திருக்கும் சமயத்தில் நோயாளி என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்பதுதான். குறிப்பிட்ட உணவுப் பண்டத்தின் மீது நோயாளிக்கு அதீத ஆசை உண்டா? தொடர்ந்து அவர் அதையே சாப்பிடும் பழக்கம் கொண்டவரா? மலச்சிக்கல் இருந்தால் எவ்வளவு நாட்களாக உள்ளது? போன்ற கேள்விகளே உண்மையை வெளிக்கொண்டுவரும் கேள்விகளாகும்.

  இக்கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்து, நோயாளியின் அப்போதைய உணவில் மாறுதல் செய்யவேண்டி வரும். ஆனால், அது எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போன்ற உணவு மாற்றமல்ல. ஏற்கெனவே சொன்ன மாதிரியான ட்ரான்சிஷன் டயட். மெள்ள மெள்ள கொண்டுவரும் மாற்றம். உணவில் ஒரு லேசான மாறுதல். காலையில் இட்லிக்குப் பதிலாக இரண்டு ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுங்கள் என்பதுபோல.

  ஆனால், படு நிச்சயமான நோயறிதல் முறை என்ன தெரியுமா? நோயாளியை குறுகிய காலத்துக்கு விரதம் இருக்கச் செய்வதுதான்! தவறே நடக்காத நோயறிதல் முறை அதுதான் என்கிறார் எஹ்ரட். குறுகியகால விரதத்தில், நோயாளி ‘மோசமான’ உடல் நிலைக்குப் போவாரானால், அவரது கழிவுத்தேக்க நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று அர்த்தம்!

  உதாரணமாக, விரதம் இருக்கும் சமயத்தில் நோயாளிக்கு மயக்கம், கடுமையான தலைவலி போன்றவை வருமானால், உள்ளே நிறைய கழிவுகள், சளி, நச்சு ரத்தம் போன்றவை பெரும் தடைகளாக உடலுக்குள் தங்கியுள்ளன என்று அர்த்தம். இதயத்தின் துடிப்பு அதிகமாகுமானால், உடலில் எங்கோ சீழ் வைத்துள்ளது என்று அர்த்தம். அல்லது பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் எங்கோ ரத்தத்தின் சுற்றலில் மாட்டிக்கொண்டு வெளியே தள்ளப்பட காத்திருக்கின்றன என்று அர்த்தம்.

  குறிப்பாக, எந்த இடத்திலாவது கழிவு தேங்கி இருந்தால் அங்கே லேசான வலி இருக்கும். இப்படிக் கண்டுபிடிப்பது எக்ஸ்ரேயில் பார்ப்பதைவிட சிறப்பானதாகும். உடலின் உள்ளே எப்படி இருக்கிறது என்று இயற்கை எடுத்துக்கொடுக்கும் எக்ஸ்ரேதான் குறுகிய கால விரதம்! மருத்துவர்கள் ரொம்ப அதிக விலையுள்ள அதிநவீன உபகரணங்களை வைத்து எடுக்கும் பரிசோதனைகளில் தெரிவதைவிட உறுதியானதும் தெளிவானதுமாகும் இது.

  இன்னும் நிறைய சொல்கிறார் எஹ்ரட். பார்க்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai