34. கணபதி ஹோமப் பிரசாதம்

பாலக்காட்டின் பல கிராமங்களில் சாஸ்தாப்ரீதி என்னும் பூஜையும் அதைத் தொடர்ந்து ஊர்க்காரர்கள் அனைவருக்கும் விருந்தளிப்பும் நடைபெறும்.
34. கணபதி ஹோமப் பிரசாதம்

122)  சதசதயப் பாயசம்

பாலக்காட்டின் பல கிராமங்களில் சாஸ்தாப்ரீதி என்னும் பூஜையும் அதைத் தொடர்ந்து ஊர்க்காரர்கள் அனைவருக்கும் விருந்தளிப்பும் நடைபெறும். சபரிமலை செல்வோர் மண்டல விரதம் ஆரம்பித்த உடன் அங்குள்ள சாஸ்தா கோவில்களில் ஒரு மண்டலத்திற்கு நித்ய பூஜைகள் துவங்கும். வேதபாராயணங்கள் முழங்கும். சாஸ்தாவுக்கான சிறப்பு பாடல்கள் பாடப்பெறும். முக்காலமும் பூஜைகள் நடைபெறும். இது மிகப்பெரிய விசேஷமாக அங்கு நடக்கும். இதன் நிறைவு நாளில் நடப்பதுதான் சாஸ்தாப்ரீதி அன்னதானப்பிரபு என்றழைக்கப்படும் ஐயப்பனின் பெயரால் அவருக்கு பூஜைகள் நடத்தி, அவரை வீதி உலா கொண்டு சென்று, மகா தீபாராதனைகள் செய்த பிறகு ஊரில் உள்ள அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு பிரமாதமான விருந்தளிக்கப்படும். பாலக்காட்டின் புதிய கல்பாத்திக்கு நடுவில் உள்ள கோவிந்தராஜபுரத்தில் அக்ரஹார வீதியிலேயே பந்தல் போட்டு மிகப் பெரிய அளவில் நடந்த சாஸ்தாப்ரீதி விருந்தை நானும் சுவைத்திருக்கிறேன். ஊர்க்காரர்கள் முழுவதும் தங்கள் வீட்டு விருந்து போல ஓடி ஓடிப் பரிமாறுவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஐயப்ப சேவா சமிதி இதை விமரிசையாக நடத்தும். ஊர்க்காரர்கள் எல்லோரும், அரிசி, பருப்பு வெல்லம் என பொருட்களாகவும், அதோடு பணமாகவும் கொடுப்பார்கள்.

சாஸ்தா ப்ரீதிக்கு உலக அளவில் பெயர் போனது நூரணி கிராமம். இதை வேதம் வளர்க்கும் கிராமம் என்பார்கள். ஐயப்பன் இங்கே தர்ம சாஸ்தாவாக பூரண புஷ்கலாம்பா சமேதராக லிங்க வடிவத்தில் இருக்கிறான். ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து 44 நாட்கள் இங்கு மண்டல பூஜைகள் துவங்கும். கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் நடக்கும். சாஸ்தாப்ரீதியன்று இங்கு செய்யப்படும் பாயசம் மிகச்சுவையானது. இப்பாயசத்தை  சதசதயம் என்பார்கள். சாஸ்தாப்ரீதி பூஜையன்று இப்பாயசம்தான் மகா நைவேத்யமாக ஐயப்பனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. சதம் என்றால் நூறு. சதசதயம் என்றால் நூற்றின் மடங்கு. அதாவது இப்பாயசம் செய்யும் போது நூரணி கிராமத்தில் நூறு தேங்காய்களிலிருந்து பால் எடுத்து நூறு லிட்டர் பாயசம் செய்வார்களாம்.

இனி இதன் செய்முறை பற்றி பார்ப்போம். இந்த சதசதயப் பாயசத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. இடிச்சு பிழிஞ்ச பாயசம் என்றும் இதைச் சொல்லலாம். இந்தப் பாயசம் வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் குணமுடையது என்பார்கள்.

இதற்குத் தேவையான பொருட்கள் (நான்கு பேருக்கு)

பச்சரிசி - 150 gm (சீரகச் சம்பா அரிசியும் எடுத்துக் கொள்ளலாம்)

வெல்லம் – 400 gm (இனிப்பு கூடுதலாகத் தேவைப்படுபவர் 500 gm சேர்க்கலாம்)

தேங்காய் - பெரியது 1

கதலிப்பழம் அல்லது பூவன் பழம் - 1

ஏலக்காய் 6 (பொடித்தது

நெய் – 5 டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

வெண்ணை – சிறிதளவு.

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி அரை கப் சுடுநீர் ஊற்றி அரைத்து  முதல் பால் தனியாகவும், பிறகு இரண்டாம் மற்றும் மூன்றாம் பால் தனித்தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை ஒன்றுக்கு மூன்றரை கப் நீர் விட்டு குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தைக் அரை கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி அடிகனமான உருளி அல்லது வாணலியில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அது நன்கு கொதித்து நுரைத்து வரும் போது வேக வைத்த சாதத்தை சற்றே மசித்து அதில் போட்டு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நன்கு கிளறி விட்டு முதலில் மூன்றாம் பாலை அதில் ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் நன்கு குறுகி வரும் போது அதில் இரண்டாம் பாலை ஊற்றி விட்டு கதலிப் பழத்தை தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கி அதில் சேர்த்து ஏலக்காய் பொடியும் சேர்க்க வேண்டும். இரண்டாம் பால் ஊற்றிய பாயசம் நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு முதல் பாலை ஊற்றி கிளறி விடவும். பாயசம் ரெடி. (இதற்கு முந்திரிபருப்பு தேவையில்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். ஒருசிலர் இதில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியும் கூட நறுமணத்திற்காகச் சேர்ப்பார்கள். அது உங்கள் விருப்பம் மட்டுமே. கதலிப்பழத்தின் வாசனையும் சேர்வதுதான் இதன் சிறப்பு. பலர் கதளிப்பழத்தை முழுதாகப் போட்டு பாயசம் நன்கு கொதித்து முதல் பார் சேர்த்து அடுப்பை அனைத்ததும் கதலிப்பழத்தை எடுத்து விடுவார்கள். பழத்தை நறுக்கிப் போட்டால் எடுக்கவே வேண்டாம். பாயசத்தோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

123)  த்ரிமதுரம்

பாலக்காட்டில் கணபதியான் கோவில்களில் விடியற்காலம் கணபதி ஹோமம் செய்யப்படும் போது நெய்வேத்தியம் செய்யப்பட்டு  கொடுக்கப்படும் பிரசாதம் இது. தவிர பகவதி கோவில்களிலும் இது விடியற்கால நேரங்களில் பூஜா பிரசாதத்தோடு ஒரு இலையில் வைத்து சிறிதளவு கொடுப்பார்கள். (எங்கள் குல தெய்வம் காவச்சேரி பகவதி கோவிலில் தவறாமல் இதைப் பெற்று உண்டிருக்கிறேன். குருவாயூரிலும் த்ரிமதுர நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அங்கு பிரசாத கவுண்ட்டர்களில் பணம்கட்டி பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளலாம். பெரும்பாலான கோவில்களில் இது இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. காலையில் குளித்து விட்டு கோவிலுக்குச் செல்கிறவர்கள் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டுதான் வீட்டுக்கு வந்து காப்பியோ டீயோ குடிப்பார்கள். குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இது. அவர்களுக்கு இதை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனோ இரண்டு ஸ்பூனோ சாப்பிடக் கொடுத்தால், அவர்களது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். தவிர உடலுக்கு வலுவும் புத்துணர்வும் தரும் என்பார்கள். ஒரு ஸ்பூன் திரிமதுரத்தில் ஒரு கிராம் ஃபிரக்டோஸ் ஷுகர் கிடைப்பதுதான் இதற்குக் காரணம். இதில் சேர்க்கப்படும் கல்கண்டு குழந்தைகளின் கபத்தைப் போக்கும்..

இது செய்வதற்கு மிகவும் எளிது. நம் வீட்டிலும் கூட தினசரி காலை நேர பூஜைக்கு இதைப் பிரசாதமாக செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் (கதலி அல்லது பூவன்) 3

தேன் – ஒரு டீஸ்பூன்

டைமண்ட் கல்கண்டு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த திராட்சை – ஒரு ஸ்பூன்

செய்முறை

வாழைப்பழங்களை தோல் உரித்து பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு, அதில் தேன், கல்கண்டு, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்து கிளறி விட்டால் த்ரிமதுர பிரசாதம் ரெடி. செய்வதற்கு எளிதான இதன் மருத்தவப் பயன்கள் அதிகம். 

124)  கணபதி ஹோமப் பிரசாதம்

ஒரு அதிசயம் என்னவென்றால் நான் இந்த பிரசாதம் குறித்து எழுத ஆரம்பித்த போது, பாலக்காடு புதிய கல்பாத்தி மகாகணபதி கோவிலிலிருந்து என் சின்ன மாமியார் இந்தப் பிரசாதத்தை தெரிந்தவர் மூலம் அனுப்பியிருந்தார். அதை வாயிலிட்டு சுவைத்தபடிதான் இதை முழுவதும் எழுதி முடித்தேன். ஜெய் எல்.எம்.ஜி.! (LORD MAHA GANAPATHI)

கல்பாத்தி மகா கணபதி கோவிலில் தினமுமே பிரம்ம முஹுர்த்தத்தில் கணபதி ஹோமம் நடக்கும். யார் வேண்டுமானாலும் யார் பெயருக்கு வேண்டுமானாலும் பெயரும் நட்சத்திரமும் சொல்லி  கணபதி ஹோமத்திற்குப் பணம் கட்டலாம். ஹோமப் பிரசாதமாக ஹோம ரட்சையும், நிறையவே மோதகமும், அவல் பொரி பிரசாதமும் தருவார்கள். அந்த அவல் பொரி பிரசாதம் இருக்கிறதே அதை போக வர சாப்பிட்டாலும் ஆசை தீராது. அத்தனை சுவையாக இருக்கும். செய்வதும் மிக எளிது.

வீட்டில் கணபதி ஹோமம் பண்ணும்போதும் இந்த பிரசாதத்தை செய்யலாம். கணபதி ஹோமப் பிரசாதம் செய்வதற்கு எல்லாமே எட்டு என்ற கணக்கில் இருக்க வேண்டும் என்பார்கள்.

எப்படியும் கணபதி ஹோமத்திற்கு கொழக்கட்டையும், நெய்யப்பமும்  செய்வீர்கள். அதில் ஒரு எட்டு கொழக்கட்டையையும், எட்டு அப்பமும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான மற்ற பொருட்கள்:

கொப்பரை தேங்காய் – 1 (மெல்லிய பத்தைகளாகக் கீறிக் கொள்ள வேண்டும்)

தட்டை அவல் – எட்டு கைப்பிடி

நெல் பொரி – எட்டு கைப்பிடி

கருப்பு எள்ளு – ஒரு ஸ்பூன் (வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்)

வெல்லம் – ஒரு கோப்பை

வாழைப்பழ,ம் – மூன்று (ஏலக்கி என்றால் எட்டு பழம் நறுக்கி வைத்துக் கொள்ளலாம்)

சுத்தமான தேன் -  ஒரு டேபிள் ஸ்பூன்

பசுநெய் – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் – 8 (பொடித்துக் கொள்ளவும்

செய்முறை

வெல்லத்தை கால் கிளாஸ் நீரில் கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட்டு பாகு வைத்துக் கொள்ள வேண்டும். கார்த்திகைக்கு பொரி உருண்டை பிடிப்பீர்களே அந்த அளவுக்கு பாகு பதம் வந்ததும் முதலில் கீறி வைத்திருக்கும் கொப்பரைத் தேங்காயை அதில் போட்டு நன்கு கிளறி விட்டு அவல், நெல்பொரி, கருப்பு எள் இவற்றையும் போட்டு கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதில் நறுக்கி வைத்திருக்கும் பழத்தை சேர்க்கவும். தனியே எடுத்து வைத்திருக்கும் எட்டு பூரண கொழுக்கட்டையை முழுதாகவும் போடலாம். அல்லது இரண்டாக நறுக்கியும் போடலாம்., அப்பத்தையும் கட் பண்ணி அதில் சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடி தூவி தேனையும் ஊற்றி நன்கு கிளறி விடுங்கள். ஹோமத்தில் பூர்ணாஹுதி இடும் போது இந்த பொரியும் இடப்படும். குழந்தைகளுக்கு இந்த பிரசாதம் எந்தக் கெடுதலும் செய்யாது என்பதால் அவர்களுக்குக் கொடுக்கலாம். அவர்களும் விரும்பி உண்பார்கள்.

125) கணபதி ஹோமத்திற்கான கொழக்கட்டை

இதை இரண்டு விதமாகச் செய்வார்கள். பூர்ணாகுதியில் இடப்படும் கொழக்கட்டைகள் எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும். அதில் சிலவற்றைத்தான் மேற்படி அவல் பொரி பிரசாதத்தில் சேர்ப்பார்கள். அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

செய்முறை:

தேங்காய் – துருவியது ஒரு கோப்பை

கடலைப்பருப்பு – சிறிய கப்

வெல்லம் – ஒரு கோப்பை

ஏலக்காய்ப் பொடி – சிறிது

மைதா மாவு – 150 கிராம்

பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

கடலைப் பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது நீர் விட்டு கரைத்து பாகு வைக்கவும். அதில் தேங்காய் சேர்த்து நன்கு சுருண்டு வரும் பொது மசித்து வைத்த கடலைப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும். மைதாமாவை சிறிது உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்ததும், உருட்டி வைத்த உருண்டைகளை மைதாமாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து வைக்கவும்.

மற்றொரு விதமான கொழக்கட்டை நாம் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்வது போல செய்ய வேண்டியதுதான். கொதிக்கும் நீரில் அரிசி மாவு கொட்டி கிளறி, மாவில் செப்பு பிடித்து அதனுள் பூரணம் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இதை நைவேத்யம் செய்து அனைவருக்கும் கொடுப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com